ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல்– விஷமத்தை விதைக்கும் ஃபேஸ்புக் பதிவு!

சமூக ஊடகம் சமூகம்

ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லச் சொல்லி இஸ்லாமிய முதியவர் ஒருவர் தாக்கப்பட்டார் என்று படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

JAI SRIRAM 2.png

Facebook Link I Archived Link

ரத்தம் சொட்டச்சொட்ட இஸ்லாமியர் முதியவர் ஒருவரை இளைஞர் ஒருவர் கைத்தாங்கலாக பிடித்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத்தகவலில், முஸ்லீம் என்றாலும் தாடி வைத்து இருந்தாலும் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச்சொல்லி அடித்துத் துன்புறுத்தும் உங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்காத ஸ்ரீராம் எங்கள் **** சமம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை.

இந்த பதிவை, Ge Muthu என்பவர் 2019 ஜூலை 10ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்து ஜெய் ஶ்ரீராம் முழக்கம் அதிகரித்துள்ளது. ஜெய் ஶ்ரீராம் என்று கூறும்படி சிறுபான்மையினர் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

கான்பூரில் சிறுவன் மீது நடந்த தாக்குதல் தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

சமீபத்தில் இஸ்லாமிய முதியவர் ஜெய் ஶ்ரீராம் என்று கூறும்படி தாக்கப்பட்டாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், முதியவர் மீதான தாக்குதல் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

படத்தை ஆய்வு செய்தோம். படத்தில் இருப்பவர்கள் வட இந்தியர்கள் போல இல்லை. வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் போல தெரிந்தாலும் வித்தியாசமாகவே இருந்தனர். பார்க்க மியன்மர், இந்தோனேஷியா பகுதியைச் சேர்ந்தவர்கள் போல தெரிந்தனர். படத்தை கூகுள் ரிவாஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.

JAI SRIRAM 3.png

நம்முடைய தேடலில், DADAN KICIL PUTRA JMS என்பவர் மேற்கண்ட பதிவில் உள்ள முதியவர் படத்தைப் பகிர்ந்ததாகப் படம் ஒன்று கிடைத்தது. அதில், ஆங்கில எழுத்துக்கள் இருந்தன… ஆனால் மொழி வேறாக இருந்தது. மேலும், PUTRA என்ற பெயர் இந்தோனேஷியாவில் வழக்கத்தில் உள்ளது என்பதால், அந்த பதிவிலிருந்த வார்த்தைகளை கூகுள் டிரான்ஸ்லேட்டரில் மொழிமாற்றம் செய்து பார்த்தோம். 

JAI SRIRAM 4.png

அப்போது, ஆங்கில ரோமன் லெட்டரில் எழுதப்பட்டிருந்த அந்த வார்த்தைகள் இந்தோனேஷிய மொழி என்று உறுதியானது. அதில், “பிச்சை எடுத்தார் என்பதற்காக முதியவர் தாக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

JAI SRIRAM 5.png

இதன்படி பிச்சை எடுத்ததற்காக முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்திருக்கலாம் என்று யூகிக்க முடிந்தது.

இதே படத்தை சிலர் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். Proud to be Nepali என்ற பக்கத்தில் இந்த படம் பகிரப்பட்டு இருந்தது. அதில், “தயவு செய்து இந்த பதிவை அதிகம் பகிரவும்… உங்களின் ஒரு பகிர்வு ஏழைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவும். ஒரு பாவப்பட்ட மனிதனுக்கு பணம் கொடுக்க முடியவில்லை, ஆனால் அவரைத் தாக்கி கையை உடைப்பது சரியா?” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவு, 2019 மார்ச் 7ம் தேதி பகிரப்பட்டு இருந்தது.

Archived Link

நம்முடைய தேடலில், கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி இதே படத்தை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது தெரிந்தது. அதில், “இந்த பக்கீரைக் கொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது. அவருக்கு உதவி புரிய முடியாத நபராக உள்ள நீங்கள் அவரை ஏன் கொன்றீர்கள்? தவறான அபிப்பிராயத்தின் அடிப்படையில் செயல்படாதீர்கள்… நமக்கு மேல் உள்ள ஒருவனால் நமக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஒருவன் எவ்வளவு விரைவாக மேலே ஏறுகிறானோ, அதே வேகத்தில் கீழே இறங்குவான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Archived Link

இதிலும் தர்மம் கேட்ட முதியவர் கொல்லப்பட்டார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பதிவிலும் கூட எங்கு, எப்போது இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிடவில்லை.

நம்முடைய ஆய்வில்,

ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லச்சொல்லி மேற்கண்ட பதிவில் உள்ள முதியவர் தாக்கப்பட்டார் என்று சமீபத்தில் எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

பிச்சை எடுத்த முதியவர் மீது தாக்குதல் என்று, இந்தோனேஷியர்கள் இந்த படத்தைப் பகிர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிச்சை எடுத்ததற்காக தாக்கப்பட்ட முதியவர் என்று கடந்த மார்ச் மாதம் இந்த படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தர்மம் கேட்ட இஸ்லாமியர் கொல்லப்பட்டார் என்று கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் இந்த படம் பகிரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பழைய படத்தை எடுத்து, ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லச் சொல்லி இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்டார் என்று விஷமத்தனமான பதிவு பகிரப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல்– விஷமத்தை விதைக்கும் ஃபேஸ்புக் பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: False