மகாராஷ்டிராவில் சாதுக்களைக் கொன்ற இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

மகாராஷ்டிராவில் சாதுக்கள் மற்றும் கார் டிரைவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத சாயம் பூசும் வகையில் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மகாராஷ்டிராவில் கிராம மக்களால் கொடூரமான முறையில் சாதுக்கள் அடித்து கொல்லப்படும் வீடியோ மற்றும் கொல்லப்பட்டவர்களின் படங்களை பகிர்ந்துள்ளனர்.

நிலைத்தகவலில், “மும்பை ….. பாலகர் மாவட்டம் காசாபகுதியில் தனது குருநாதர் மரணத்திற்கு சென்று கொண்டிருந்த இந்து சாதுக்களை ரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட மிக கொடூரமாக தாக்கி முஸ்லீம்கள் கொலை செய்தனர். இது நடந்து 3 நாட்கள் ஆகிறது இந்தியாவில் எந்த மீடியவிலும் வரவில்லை, குறிப்பாக தமிழக வேசி ஊடகங்கள் ஒரு flsah நியூஸ் கூட போடவில்லை. இந்த நாட்டில் முஸ்லிம்கள் எது செய்தலும் சரி. இதுவே ஒரு RSS அமைப்பு செய்திருந்தால் என்ன ஆகும். நாம் பாம்புக்கு பால் ஊற்றுகிறோம் அது என்ன செய்யும் என்பதை அவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் விரைவில் உணர்வார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Renganathan Rethinam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஏப்ரல் 20ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் சாதுக்கள் இரண்டு பேர் மற்றும் கார் ஓட்டிவந்த டிரைவரை கடத்தல்காரர்கள் என்று நினைத்து கிராம மக்கள் அடித்து கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

ஆனால், இது பற்றி இந்தியாவின் எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை என்று ஊடகத்தை விமர்சித்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும், இது இரு வேறு மதத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை இல்லை என்று மாநில அரசு விளக்கம் அளித்த நிலையில் சாதுக்களை தாக்கியது இஸ்லாமியர்கள் என்று இங்குள்ள பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த இரண்டு விஷயங்களும் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் சாதுக்கள் பயங்கர படுகொலை பற்றி தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லையா என்று தேடினோம். அப்போது புதிய தலைமுறை, நியூஸ்18 தமிழ்நாடு, பிபிபி தமிழ், மாலைமலர் என எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ரிபப்ளிக் என வட இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. இதன் மூலம் சாதுக்கள் கொலை பற்றிய செய்தியை ஊடகங்கள் மறைத்தன என்ற தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

சாதுக்களை அடிக்கும் வீடியோவைப் பார்க்கும்போது யாரும் தலையில் தொப்பி அணிந்தோ, தாடி வைத்தபடியோ இல்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கூற முடியாது.  சாதுக்கள் கொலையில் மத ரீதியான தொடர்பு உள்ளதா, இந்து – இஸ்லாம் பிரச்னை காரணமாக சாதுக்கள் அடித்து கொல்லப்பட்டார்களா என்று ஆய்வு செய்தோம்.  வதந்தி காரணமாக சாதுக்கள் அடித்து கொல்லப்பட்டதாக பல செய்திகள், மாவட்ட போலீஸ் நிர்வாகம், மாநில உள்துறை அமைச்சர், முதல்வர் என பலரும் வெளியிட்ட ட்வீட்கள் நமக்கு கிடைத்தன. அவற்றை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தோம்.

வலதுசாரி சிந்தனை கொண்ட, பா.ஜ.க எம்.பி நிர்வாகக் குழுவில் உள்ள ஸ்வராஜ் என்ற ஊடகம் வெளியிட்ட செய்தியைப் பார்த்தோம். அதில், குழந்தை கடத்தல்காரர்கள் என்ற வதந்தி காரணமாக அடித்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில் திருடர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் அடித்துக்கொலை என்று குறிப்பிட்டிருந்தனர்.

Facebook LinkArchive Link

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தக்கரே வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பால்கரில் ஏப்ரல் 16ம் தேதி சாதுக்களை மிகப்பெரிய கூட்டம் அடித்து கொலை செய்துள்ளது. இதுபோன்று மக்கள் கூட்டமாக கூடி அடித்துக் கொல்வது கடந்த ஐந்து ஆண்டுகளில் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது. இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இது மிகவும் அவமானகரமான நிகழ்வு, நடந்திருக்கவே கூடாது. இது நம்முடைய கலாச்சாரம் இல்லை.

பால்கர் மாவட்டத்தில் பால்கரில் இருந்து 110 கி.மீ தொலைவில் யூனியன் பிரதேசமான தாதர் நகர் ஹவேலி எல்லைக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டம் உள்ளதாக வதந்தி பரவியதால் இது நடந்துள்ளது” என்று கூறியிருந்தார்.

Archived Link

மாவட்ட போலீஸ் நிர்வாகம் வெளியிட்டிருந்த ட்வீட்டில், “சாதுக்கள் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, இதுவரை 110 பேர் (உள்ளூர் பழங்குடியின மக்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் வெளியிட்டிருந்த ட்வீட்டில், “கொல்லப்பட்டவர்கள், தாக்கியவர்கள் அனைவருமே வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. நடந்த சம்பவத்தை மத ரீதியாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

Archived Link

தொடர்ந்து சமூக ஊடகங்களில் விஷமத்தனமான செய்திகள் வேகமாக பரவும் காரணத்தால் கைது செய்யப்பட்ட அத்தனை பேரின் பெயரையும் மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பால்கர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 101 பேரின் பெயர் பட்டியல். இதை மதப் பிரச்னையாக மாற்ற நினைப்பவர்களுக்காக, பிரத்யேகமாக இது பகிரப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

Archived Link

இதை மிகத் தெளிவாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ட்வீட் வெளிப்படுத்தியது.

அதில், “ஐ.ஜி மட்டத்திலான சி.ஐ.டி அதிகாரி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். சம்பவம் நடந்த எட்டு மணி நேரத்தில் 101 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயரை நாங்கள் வாட்ஸ்அப் வழியாக வெளியிடுகிறோம். இந்த பட்டியலில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பால்கார் விவகாரம் தொடர்பாக” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

நம்முடைய ஆய்வில்,

பால்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாதுக்கள் கொலை தொடர்பான செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வலதுசாரி ஆதரவு ஊடகம் வெளியிட்ட செய்தியில் வதந்தி காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்குடியினர் தாக்குதல் நடத்தியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள ட்வீட் கிடைத்துள்ளது.

திருடர்கள் நடமாட்டம் உள்ளது என்று வதந்தி பரவியதால் இந்த சம்பவம் நடந்தது என்று அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ள ட்வீட் கிடைத்துள்ளது.

கொல்லப்பட்டவர்கள், கொலை செய்தவர்கள் இருவேறு மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் வெளியிட்ட ட்வீட் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் சாதுக்களை அடித்துக் கொன்றது இஸ்லாமியர்கள் என்றும் இந்த கொலை செய்தியையே ஊடகங்கள் மறைத்துவிட்டன என்றும் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மகாராஷ்டிராவில் சாதுக்களைக் கொன்ற இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on “மகாராஷ்டிராவில் சாதுக்களைக் கொன்ற இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

  1. இஸ்லாமிஎன்அந்தவீடியயோ பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

Comments are closed.