மினி பாகிஸ்தான் ஆகிறதா சென்னை?- நடக்காத விசயத்துக்கு கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

சென்னை மெரினாவில் கஞ்சா போதையில் பெண்களிடம் தகராறு செய்த இஸ்லாமியர்களை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளர் அகிலன் தாக்கப்பட்டார், என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

காவலர் ஒருவர் தாக்கப்பட்ட படத்துடன் வெளியான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “என் கவுண்டர்ல போட்டு ஃபைலை குளோஸ் பண்றத விட்டு… மினி பாகிஸ்தான் ஆகும் சென்னை:

மெரினா கடற்க்கரையில் கஞ்சா போதையில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்ச்சித்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 3 இஸ்லாமிய இளைஞர்களை தட்டிக்கேட்க சென்ற உதவி ஆய்வாளர் அகிலனுக்கு சரமாரி வெட்டு. கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் காவல் நிலையம் முற்றுகை… இது தமிழ் நாடா? தாலிபான் நாடா?” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Ravichandran Gavara Naidu என்பவர் 2020 ஆகஸ்ட் 28ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உள்ளது. செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு பல தளர்வுகள் வழங்கப்பட்டாலும் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தொடர்ந்து தடை உள்ளது. இந்த பதிவு 2020 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அங்கு பொது மக்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எழுந்தது. 

சமீபத்தில் சென்னை மெரினாவில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டதாக எந்த செய்தியும் வெளியானது போலத் தெரியவில்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். முதலில் மெரினா கடற்கரையில், உதவி ஆய்வாளருக்கு சரமாரி வெட்டு என்று கூகுளில் டைப் செய்து தேடிய போது எந்த செய்தியும் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் தேடிய போது 2017ம் ஆண்டு இதே பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருந்தது தெரிந்தது. 

Facebook LinkArchived Link

எனவே, பழைய செய்திகளில் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது 2017 ஆகஸ்ட் 22ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியான செய்தி கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள காவலர் படமும், குற்றவாளியின் படமும் இருந்தது. 

அதில், “நேற்று முன்தினம் இரவு குடிசை மாற்று வாரிய அலுவலகம் எதிரே உள்ள கடல் மணல் பரப்பில் வாலிபர்கள் இரண்டு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மெரினா காவல் நிலைய ஆயுதப்படை காவலர் அகிலன் பீச் பக்கி வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இதைப் பார்த்த காவலர் அகிலன், அந்த வாலிபர்களிடம் இங்கு மது அருந்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், ‘நாங்கள் இங்குதான் மது அருந்துவோம்’என்று கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவலர் அகிலன் மது அருந்திய வாலிபர்களை கலைந்து செல்லும்படி கூறி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் காவலர் அகிலனை கடுமையாக தாக்கினர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். பிறகு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அகிலனை சரமாரியாக குத்தினர். இதில் காவலர் அகிலனின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

dinakaran.comArchived Link 1
timesofindia.indiatimes.comArchived Link 2

வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் துடித்த காவலரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த பொது மக்கள் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்த போதை வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். சிலர் துரத்திச் சென்று ஒருவனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மற்றொருவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். 

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த காவலர் அகிலனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்த போதை ஆசாமியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். 

அப்போது, அண்ணா நகரை சேர்ந்த ஹரிராம் என்றும், தப்பி ஓடிய நபர் தினேஷ் என்றும் தெரியவந்தது. வார இறுதி நாள் என்பதால் நண்பருடன் மது அருந்த மெரினாவிற்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹரிராம் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

அதாவது இந்த சம்பவத்தில் ஹரிராம் மற்றும் தினேஷ் என்ற இரண்டு பேர் மீது மட்டும் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களில் ஒருவனை பொது மக்களே பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக் கோரி யாரும் போராடியதாக செய்தி இல்லை.

இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய காவல்நிலைய எழுத்தர், “இது பழைய சம்பவம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை. அவர்களை விடுவிக்கக் கோரி மெரினா போலீஸ் நிலையத்தை யாரும் முற்றுகையிடவும் இல்லை. சமூக ஊடகங்களில் பரவுவது தவறான தகவல். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது” என்றார்.

இதன் மூலம் உண்மையில் நடந்த ஒரு நிகழ்வை, தங்கள் விருப்பம் போல மாற்றி, மதச் சாயம் பூசி, வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டு வந்திருப்பது தெரிகிறது. இதன் அடிப்படையில், “சென்னை மெரினாவில் கஞ்சா போதையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலனை தாக்கிய இஸ்லாமியர்கள்” என பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மினி பாகிஸ்தான் ஆகிறதா சென்னை?- நடக்காத விசயத்துக்கு கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False