
கேரளாவில் மசூதிக்குள் கள்ளச்சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள் கைது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரஷர் குக்கர், பிளாஸ்டிக் டப்பா, அடுப்பு ஆகியவற்றுடன் போலீசார் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளா காஸர்கோட்டில் மசூதிக்குள் கள்ள சாராயம் ஊரல் போட்ட டப்லீசை வெளுத்து வாங்கிய கேரள காக்கிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் தமிழக இந்துக்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Ponnuchamy Ashwin என்பவர் 2020 மே 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பல மாதங்களாக சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. கேரளாவில் கோவிலில் சாராயம் காய்ச்சிய ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைது என்று இந்த படம் பகிரப்பட்டு வந்தது. கோவிலில் சாராயம் காய்ச்சுவார்களா என்ற சந்தேகத்தில் இந்த படம் மற்றும் தகவல் பற்றி ஆய்வு செய்தபோது கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் கோவிலில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சாராயம் காய்ச்சியதாகக் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தது.
இப்போது இதே படத்தை கேரளாவில் காசர்கோட்டில் மசூதிக்குள் கள்ளச்சாராய ஊரல் போட்ட டப்லீஸ் என்று குறிப்பிட்டு இந்துக்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை என்ன என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த படம் தொடர்பான செய்தி மற்றும் வீடியோ நமக்கு கிடைத்தன.

ஜனவரி 23. 2020ல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ மற்றும் செய்தியில் கண்ணம்பரா பகுதியில் கோவிலில் சாராயம் காய்ச்சிய நான்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர பல சமூக ஊடக பக்கங்களிலும் கூட கோவிலில் சாராயம் காய்ச்சிய ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் மசூதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மசூதிக்குள் சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள்?- ஃபேஸ்புக் விஷமம்!
Fact Check By: Chendur PandianResult: False
