
நியூசிலாந்தில் நம்முடைய இந்தியக் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஒரு மண்டபத்தில் வரிசையாக அமர்ந்து உணவு அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “இது நியூசிலாந்திலிருந்து வந்த காட்சி…
நாம் நமது கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கிறோம். வெளி நாட்டில் நம் கலாச்சாரத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..! வாழ்த்துக்கள்…” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை, நோய்க்கு தீர்வு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Annapoorani Naganathan என்பவர் 2020 ஆகஸ்ட் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒரு மண்டபத்தில் எடுக்கப்பட்ட படம் போல உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நியூசிலாந்து பிரதமர் கொரோனா பாதிப்பு விலகியதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த இந்து கோவிலுக்கு வந்தார் என்று வதந்தி பகிரப்பட்டு இருந்தது. கோவிலில் கார்ப்பெட் விரித்து சிறப்பாக பராமரித்திருந்தனர்.
ஆனால், இந்த புகைப்படத்தில் டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் உணவு பரிமாறுபவர்கள் வேட்டி அணிந்து இந்தியர்கள் போல உள்ளனர். உணவு அருந்துபவர்களில் வெளிநாட்டினருடன் இந்தியர்களும் இருந்தனர். எனவே, இந்த படம் உண்மைதானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடியபோது பல ஃபேக்ட் செக் ஊடகங்கள் இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இவற்றுக்கு நடுவே ஆதாரங்கள் கிடைப்பது சாத்தியமற்றதாக இருந்தது. பல வித தேடலில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றித் தேடிய நிலையில் இந்த புகைப்படம் தொடர்பாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் டிரிப் அட்வைசர் என்ற இணையதளத்தில் கேரள மாநிலம் நெய்யாறு அணை அருகே உள்ள சிவானந்தா யோகா வேதாந்தா தன்வந்தரி ஆசிரமத்தில் ஒரு ஆயுர்வேத மையத்தில் இதே போன்ற பல படங்கள் பதிவிடப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது.
அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளது போன்ற இடம் இருந்தது. அதே மஞ்சள் நிற தூண், மிகப்பெரிய ஜன்னல், அதே மஞ்சள் நிற டிஷர்ட் அணிந்த மக்கள், சுவற்றில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர், நுழைவாயிலின் இருபுறமும் சாமி படம் என்று பல ஒற்றுமை இருந்தது. எனவே, அந்த படம் இங்கு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

கேரளா சிவானந்தா யோகா வேதாந்தா தன்வந்தரி ஆசிரமத்தின் இணையதளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் உள்ளதா என்று பார்த்தோம். அந்த படம் கிடைக்கவில்லை. இங்கு ஆயிரக் கணக்கான வெளிநாட்டு பயணிகள் வருவதும், அவர்கள் புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதும் தெரிந்தது.

இதன் மூலம், அசல் படம் கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் இந்த படம் நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை மற்ற படங்களை வைத்து உறுதி செய்ய முடிந்தது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நியூசிலாந்தில் இந்திய கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது என்று பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
