இஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம், இஸ்லாமிய கொரோனா நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றோம்,’’ என்று கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் என்று கூறப்படும் பெண்மணி புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “முஸ்லீம்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம் என்பதால் முஸ்லீம் கொரனா நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றோம் – உத்தரப் பிரதேச மருத்துவ கல்லூரி பிரின்சிபால். இதைப் போன்ற மத, இன வெறியர்களால்தான் இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இவர்களை அடக்காவிட்டால் இந்தியாவும் பற்றி எரியும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று போட்டோஷாப் முறையில் டைப் செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவை அநீதிக்கு எதிரான குரல் – IRa என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 3ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு பேசிய வீடியோ செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை, ஏப்ரல் முதல் வாரத்தில் தப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவிய நிலையில், அவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து மருத்துவ பணியாளர்கள் மீது எச்சில் துப்புவது, அறை வாசலில் சிறுநீர் கழித்தபோது பேசியது என்று சில ஊடகங்கள் கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தன. யார் எப்போது பேசினாலும் தவறு தவறுதான்.

பலரும் கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்த்தி லால்சாந்தினி பேசிய வீடியோவை பகிர்ந்து, இஸ்லாமியர்களுக்கு விஷம் கொடுத்து கொன்றோம் என்று அவர் கூறியதாக பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர்.

Facebook LinkArchived Link

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டி பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும், இஸ்லாமிய கொரோனா நோயாளிகளை விஷம் வைத்து கொன்றோம் என்று அவர் கூறியதாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய நோயாளிகள் கொலை செய்யப்பட்டார்களா, தன்னுடைய பேச்சில் விஷம் வைத்து கொன்றோம் என்று அவர் பேசினாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

அந்த வீடியோவை பார்த்தோம். இந்தி புரியாததால் அவர் என்ன பேசினார் என்று நமக்கு தெரியவில்லை. ஒரு ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட் பகுதியில். 1.39வது நிமிடத்தில் இஸ்லாமிய கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்து கொன்றோம் என்று கூறியுள்ளார் என்று கூறியிருந்தனர். எனவே, அந்த வீடியோவை அப்படியே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்திப் பிரிவுக்கு அனுப்பி மொழிமாற்றம் செய்து தரும்படி கேட்டோம். 

வீடியோ, ஆடியோவைக் கேட்ட அவர்கள், அதனை மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தனர்.

இதன்படி, விஷம் கொடுத்து கொலை செய்தோம் என்று எந்த இடத்திலும் அவர் கூறவில்லை. கூடியிருந்த நிருபர்கள் மத்தியில் இருந்து கேள்வி ஒன்று கேட்கப்படுகிறது. இன் லேகோ கோ இன்ஜெக்ஷன் லாக்வா தீன் சாய்யே என்று ஒருவர் கூறுகிறார். அதாவது, “இந்த மாதிரியான ஆட்களுக்கு விஷ ஊசி போட வேண்டும்என்கிறார். அதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பதில் அளிக்கவில்லை. அதற்கு பிறகு அவர், “இவர்களை எல்லாம் சிறையில் அடைக்க வேண்டும், மருத்துவமனையில் அல்லஎன்கிறார்

அதே நேரத்தில்இவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகளுக்கு வி..பி சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாம் நம்முடைய ஆற்றல், பணத்தை எல்லாம் இவர்களுக்காக வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம். இவர்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.1.5 லட்சத்துக்கு உணவு கட்டணத்தை செலுத்தி வருகிறோம். இவர்களால் நமக்கு கொரோனா பாசிடிவ் நோயாளிகள் வருகிறார்கள். ஒரு நாளைக்கு 100 கிட்களை பயன்படுத்துகிறோம். ஒரு கிட்டின் விலை ரூ.2500. இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சருடன் பேசப் போகிறேன். தயவு செய்து இந்த வீடியோவை ஒளிபரப்பிவிடாதீர்கள்என்றும் பேசுகிறார்.

இந்த வீடியோவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் இஸ்லாமியர்களுக்கு விஷம் கொடுத்து கொன்றோம் என்று கூறியதாக, இது தொடர்பான ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகளுக்கு கமெண்ட் செய்பவர்கள் கூறுகிறார்களே என்று கேட்டபோது. அவர் பேசியதை தெளிவாகக் கேட்டு மொழிமாற்றம் செய்து கொடுத்திருக்கிறோம். உண்மையில் அவர் அப்படி கூறியிருந்தால் ஏதாவது ஒரு ஊடகத்திலாவது அது பற்றி குறிப்பிட்டு இருப்பார்கள் இல்லையா… இஸ்லாமியர்களுக்கு விஷம் கொடுத்து கொன்றதாக மருத்துவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. இதை நீங்களே தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றனர்.

நாம் தேடியபோது அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இஸ்லாமியர்களை குறிப்பாக தப்லிக் ஜமாத் அமைப்பினரை பயங்கரவாதிகள் என்று அவர் பேசினார் என்றே எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

Archived Link

தொடர்ந்து ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று பார்த்தபோது ட்வீட் பதிவு ஒன்று நம் கண்ணில் பட்டது. அதில், அறையில் இருந்த ஒருவர் “அவர்களுக்கு ஊசி போடுங்கள்” என்று கூறி சிரிக்கிறார். தொடர்ந்து, “ஒவ்வொருவராக, மெதுவாக” என்கிறார் என குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் அறையில் இருந்தவர் கூறுகிறாரே தவிர, அந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அப்படி கூறவில்லை என்பது தெரிகிறது.

என்.டி.டி.வி-யில் கான்பூர் மருத்துவக் கல்லூரி பேச்சை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து கொடுத்திருந்தனர். அதில் விஷம் கொடுத்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும், நம்முடைய தேடலில், “இந்த வீடியோவை எடுத்த நிருபர் தன்னை பணம் கேட்டு மிரட்டியதாகவும் பின்னர் நான் பேசிய முழு பேச்சையும் வெளியிடாமல், தவறான அர்த்தம் வரும் வகையில் கட் செய்து வெளியிட்டுள்ளதாகவும்” கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்த்தி லால்சாந்தினி கூறியதாகவும் பின்னர் அவர் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டதாகவும் செய்திகள் கிடைத்தன.

thehindu.comArchived Link 1
indianexpress.comArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் தப்லிக் ஜமாத் அமைப்பினரை பயங்கரவாதிகள் என்று விமர்சித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தப்ளிக் ஜமாத் அமைப்பினருக்கு விஷம் கொடுத்து கொன்றோம் என்று அவர் கூறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்திப் பிரிவு இந்த வீடியோவை கேட்டுவிட்டு விஷம் கொடுத்து கொன்றோம் என்று அவர் கூறவில்லை என்று உறுதி செய்துள்ளனர்.

பத்திரிகை நிருபர்கள் பக்கத்தில் இருந்தே அப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று விமர்சித்தது உண்மைதான் என்பது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், விஷம் கொடுத்து கொன்றதாக அவர் கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் சிறிது தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False