
2014ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.41 கோடி… இன்றைக்கு அது 7115 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ஒரு பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த தகவலின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
லஞ்சம் வாங்காத உத்தம புத்திரனின் சொத்து கணக்கு தேர்தல் ஆணையத்திடம்.
காட்டியது இது.
காட்டாமல் உள்ள சொத்து மதிப்பு யார் அறிவார் பராபரமே…
இதில், மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேல் ‘’2014ம் ஆண்டு ஏழைத்தாயின் மகனின் சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 41 லட்சம். இன்றைய சொத்து மதிப்பு ரூ.7115 கோடியாக அதிகரித்துவிட்டது,’’ என்று கூறப்பட்டுள்ளது. ரூ.7115 கோடி சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் மோடி தெரிவித்திருப்பதாகவும் கணக்கில் வராத சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் என தெரியவில்லை என்றும் பதிவிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
meerudeen Syed என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை பா.ஜ.க அளிப்பதாக அக்கட்சியினர் பிரசாரம் செய்யும் வேளையில், பிரதமர் மோடியின் சொத்து பல ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், பா.ஜ.க, மோடி எதிர்ப்பு மனநிலை உள்ளவர்கள் அதிக அளவில் இந்த பதிவைப் பகிர்ந்துள்ளனர்.
உண்மையில், கடந்த 2014ம் ஆண்டு வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி அவருடைய சொத்து மதிப்பு ரூ.1.51 கோடி. இதுதொடர்பாக என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தன்னிடம் வாகனம் ஏதும் இல்லை, கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்க நகை ஏதும் வாங்கியது இல்லை, காந்தி நகரில் 2002ல் வாங்கிய வீடு தவிர்த்து வேறு சொத்துக்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் தாக்கல் செய்த மனு மற்றும் சொத்து மதிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
2014ம் ஆண்டு இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்ற உடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய சொத்துக் கணக்கை வெளியிடும் வழக்கத்தை மோடி கொண்டுள்ளார். அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான தன்னுடைய சொத்துக் கணக்கை 2018 செப்டம்பரில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு வெளியிட்ட கணக்குப் படி, அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 28 லட்சம்தான். இதில், ரூ.1,28,50,498 அசையும் சொத்தாகக் குறிப்பிட்டுள்ளார். காந்தி நகரில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி என்று தெரிவித்துள்ளார். இதுதவிர தன்னுடைய பெயரில், வேறு எந்த வாகனமோ, விமானமோ, கப்பலோ வேறு சொத்துக்களோ இல்லை என்றும் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தங்க நகை ஏதும் வாங்கவில்லை என்றும், வங்கிக் கடன் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை பிரதமர் மோடி இன்னும் வெளியிடவில்லை. 2019ம் ஆண்டுக்கான சொத்து மதிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். 2018 செப்டம்பரில் வெளியிட்ட சொத்து மதிப்பு தொடர்பான விவரம் மட்டுமே கிடைத்தது. ஆதார படம் கீழே…

உண்மையில், மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரம் வருகிற 26ம் தேதி வெளியாகிவிடும். ஆம், பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி ஏப்ரல் 26ம் தேதிதான் வேட்புமனுவையே தாக்கல் செய்ய உள்ளார். அன்றே அவருடைய சொத்து மதிப்பு விவரம் வெளியாகிவிடும். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை இப்படி இருக்க, தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி தாக்கல் செய்த கணக்கின்படி அவருடைய சொத்து மதிப்பு ரூ.7115 கோடி என்று எப்படி குறிப்பிட்டார்கள் என்றே தெரியவில்லை. இதன் மூலம், வேண்டுமென்றே அவதூறு பரப்பும் நோக்கத்துடன் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.
இந்த பதிவை வெளியிட்டவரின் பின்னணியை ஆய்வு செய்தோம். Ameerudeen Syed எந்த ஒரு அரசியல் அமைப்பையும் சார்ந்தவராகத் தன்னைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், அவருடைய சில பதிவுகள் மோடி எதிர்ப்பு, காங்கிரஸ் ஆதரவு நிலையிலேயே இருந்தன.
இதுவரை நமக்குக் கிடைத்த ஆதாரங்களின்படி தெரியவந்த உண்மையின் விவரம்:
1) கடந்த 2014ம் ஆண்டு வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.51 கோடி.
2) ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து வருகிறார் மோடி.
3) கடந்த 2018ம் ஆண்டு கடைசியாகத் தாக்கல் செய்த கணக்கின்படி அவருடைய சொத்து மதிப்பு ரூ.2.28 கோடி.
4) இந்த ஆண்டு மோடி இதுவரை தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிடவில்லை.
5) வருகிற ஏப்ரல் 25ம் தேதிதான் மோடி தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.
6) இந்த தகவலைப் பரப்பியவரின் பின்னணி.
உண்மை இப்படி இருக்க, அரசியல் கரணங்களுக்காக, தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.7115 கோடி என்ற பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
