
‘’பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை; அ.தி.மு.க-வுக்கு ஓட்டுபோடுங்கள்,’’ என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள், படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தகவலின் விவரம்
பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க–வுக்கு ஓட்டு போடுங்க!
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர். இந்த சூழலில், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடுங்கள், என்று அவர் கூறியதாக போட்டோகார்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி லோகோ கொண்ட போட்டோகார்டின் கீழே, பிரேமலதா பேச்சை விமர்சிக்கும் வகையில், ‘’உலகத்துல இப்படி ஒரு கண்ட்ராவியான பெண் தலைவரை வேறு எங்காவது கண்டதுண்டா யுவர் ஆனர்,’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சூழலில், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருப்பது எதிர் மனநிலையை உருவாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றன. அந்த வகையில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு இடத்திலும் தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள் பற்றி பேசும் பிரேமலதா விஜயகாந்த், பெண்களின் பாதுகாப்பு பற்றியும் பேசுகிறார். பல இடங்களில் தப்பும் தவறுமாகப் பேசி, உளறிக் கொட்டுவதாக செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில், சத்தியம் தொலைக்காட்சி வெளியிட்டதாக பரப்பப்படும் போட்டோகார்டு உண்மையா என்று ஆய்வைத் தொடங்கினோம். இந்த பதிவு 7ம் தேதி பகிரப்பட்டுள்ளது. இதனால், சத்தியம் டி.வி ஃபேஸ்புக் பக்கத்தில் 7ம் தேதி வெளியான பதிவுகளில் தேடினோம். அப்போது, பிரேமலதா பேசியதாக வெளியான படத்துடன் கூடிய செய்தி கிடைத்தது.

இதில், எங்கே எப்போது பேசினார் என்ற தகவல் இல்லை. இதனால், கூகுளில் இதுதொடர்பாகத் தேடினோம். அப்போது இதுபற்றிய பல செய்திகளும், பிரேமலதாவின் உளறல்கள் என்று தினமணி வெளியிட்ட செய்தியும் கிடைத்தது.

அதில். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அருகில் வைத்துக்கொண்டே, குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று கூறியிருக்கிறார். அதேபோல, பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் “பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்தக் கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் என்ற செய்தி இருந்தது. இது தொடர்பான தினமணி செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
பொள்ளாச்சியில் பேசியது தொடர்பாக கூகுள் தேடலில் கிடைத்த மற்ற செய்திகளில் தேடினோம். பொள்ளாச்சியில் அப்படி பேசியதாக செய்தி கிடைக்கவில்லை. எல்லோருமே எங்கு, எப்போது நடந்த கூட்டத்தில் பேசினார் என்று தெரிவிக்கவில்லை. இந்து தமிழ் வெளியிட்ட செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதிலும்கூட பிரேமலதா பேசியதை வெளியிட்டுள்ளனரே தவிர, எங்கு எப்போது பேசினார் என்ற தகவல் இல்லை. இந்து தமிழ் வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
வீடியோ ஏதேனும் இருக்கிறதா என்று கூகுளில் தேடியபோது புதியதலைமுறை வெளியிட்ட செய்தி மற்றும் வீடியோ கிடைத்தது. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது பிரேமலதா விஜயகாந்த் பேசிய வீடியோ அது. ஏப்ரல் 4ம் தேதி இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவின் 4.27வது நிமிடத்திலிருந்து 5.02 நிமிடம் வரை சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான பேச்சு வருகிறது. அதில், “இந்த கூட்டணி ஒட்டுமொத்த பெண்களைக் காப்பாற்றப்போகும் கூட்டணி. ஒட்டுமொத்த பெண்களின் வாழ்வை நிச்சயம் காப்பாற்றும் கூட்டணி. இன்றைக்கு பாலியல் வன்கொடுமைகள் என்று எத்தனையோ நடந்தாலும் பரவாயில்லை… உங்கள் எல்லோரையும் என்ன கேட்டுகிறேன்னா… நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருந்து எல்லாவிதத்திலும் பெண்களை நாட்டின் கண்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு நிச்சயமாக உங்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்” என்று கூறி வாக்கு கேட்கிறார்.

வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) சத்தியம் தொலைக்காட்சி லோகோவுடன் வந்த போட்டோகார்டு உண்மைதான். அதற்கான செய்தி கிடைத்துள்ளது.
2) பாலியல் வன்கொடுமை நடந்தாலும் வாக்களியுங்கள் என்று கூறியதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
3) பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை என்று பேசிய பிரேமலதா விஜயகாந்த் பேசிய வீடியோவை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது.
4) பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து உளறிவருகிறார் என்ற தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரேமலதா பேசியது உண்மைதான் என்பது உறுதியாகிறது.
முடிவு:
எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை; அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியது உண்மைதான் என, உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால், அவரது பேச்சு பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Title:பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடச் சொன்னாரா பிரேமலதா விஜயகாந்த்!
Fact Check By: Praveen KumarResult: True
