FactCheck: ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியல்- உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள்,’’ என்ற ஒரு வதந்தியை சமூக வலைத்தளத்தில் காண நேரிட்டது. இந்த பதிவு ஃபேஸ்புக்கில் மட்டும் 12,000க்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

வதந்தியின் விவரம்:
ஸ்டெர்லைட்டுக்காக போராடியவர்களே பாருங்ள் உண்மையிலேயே எவ்வளவு ஏமாளிகள்….

Archived Link

மார்ச் 16ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவில், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் பெயர் பட்டியல் வெளியீட்டது. திரு.பா.சிதம்பரம் – 66 கோடி, திரு.மு.க.ஸ்டாலின் – 54 கோடி, திரு.வை.கோபால்சாமி – 52 கோடி, திருமதி. கீதா ஜீவன் – 22 கோடி, திரு.தா.பாண்டியன் – 8 கோடி, திருமதி. சசிகலா புஷ்பா – 3 கோடி, தூத்துக்குடி கிறிஸ்தவ கூட்டமைப்பு – 17 கோடி, -ஸ்டெர்லைட் நிர்வாகம்,’’ என்று எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
எந்த நிறுவனமும், தன்னிடம் எவ்வளவு பேர் லஞ்சம் வாங்கினார்கள் என்றெல்லாம் பகிரங்கமாக அறிவிப்பது வழக்கமில்லை. அதுவும், ஸ்டெர்லைட் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தொடங்கியது முதலாக, அந்த ஆலை நிர்வாகத்திடம் இருந்து, தமிழக அரசியல்வாதிகள், லஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் கூறி, நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில் ஊடகங்களிலும் ஊகத்தின் அடிப்படையில் ஏதேனும் செய்தி வெளியாவது வழக்கம்.

இதுபற்றி நாம் கூகுளில், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் வாங்கியவர்கள் என்று டைப் செய்து, தேடினோம். அப்போது, நிறைய செய்திகளின் இணைப்புகள் கிடைத்தன. ஆனால், எதுவும் தற்போதைய செய்தி இல்லை. இந்த பதிவில் கூறப்படுவதுபோல, மார்ச் 15, 16 அல்லது அதற்கு முன்பு வெளியான செய்திகள் எதுவும் இல்லை. அனைத்துமே, கடந்த 2018ம் ஆண்டில் வெளியானவை. ஆனால், அதில் YouTurn இணையதளம் வெளியிட்ட ஒரு செய்தி மட்டும், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பணம் வாங்கியதாகக் கூறி, அதன் விவரத்தையும் வெளியிட்டிருந்தது.

இதுகுறித்த விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived Link

அதில், பாஜக, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோடிக்கணக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்டிருந்து. அதற்கான ஆதார படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் பதிவில் கூறப்பட்டுள்ளதுபோல, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாரும், தங்களிடம் இருந்து பணம் வாங்கியதாகக் கூறி, ஸ்டெர்லைட் நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதுதவிர, நாம் குறிப்பிடும் பதிவு போட்டோஷாப் செய்யப்பட்டதுதான் என்பதை நிரூபிக்க பலவித காரணங்கள் உள்ளன. முதலில், புதியதலைமுறை தொலைக்காட்சியின் பெயரை பயன்படுத்தி நியூஸ் கார்டு தயாரித்திருந்தாலும், அதில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் உள்ளன. ப.சிதம்பரம் என்பதற்கு, ‘’பா.சிதம்பரம்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். ‘’பட்டியல் வெளியிட்டது’’ எனக் கூறுவதற்கு, ‘’பட்டியல் வெளியீட்டது’’ என எழுதியுள்ளனர். இதுதவிர, வை.கோ. என கூறாமல், வை.கோபால்சாமி என எழுதியுள்ளனர். அதுதான் அவரின் உண்மையான பெயர் என்றாலும், தமிழக வட்டாரத்தில் அவரை வை.கோ என்றே அழைப்பது வழக்கம். இதுதவிர, .com என்ற எழுத்துப் பிசிறு , அந்த நியூஸ் கார்டில் தனித்து தெரிகிறது. பணம் பற்றி கூறுகையில், ரூபாய் அல்லது ரூ என்ற எந்த அடையாளமும் இல்லாமல் வெறும் கோடி கோடி என எழுதப்பட்டுள்ளது. ஆதாரப் படம் கீழே தரப்பட்டுள்ளது.

இவ்வளவு எழுத்துப்பிழைகளுடன் ஒரு தொலைக்காட்சியில் வெளியாகும் நியூஸ் கார்டு இருக்க வாய்ப்பில்லை. அதுவும், புதிய தலைமுறை, தமிழகத்தில் உள்ள முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். எனவே, இந்த நியூஸ் கார்டை FotoForensics உதவியுடன் ஆய்வு செய்து பார்த்தோம். அதில், போட்டோஷாப் செய்யப்பட்டதுதான் என்பதை உறுதி செய்யும் வகையில் முடிவு கிடைத்தது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த பதிவை வெளியிட்ட நபரின் பின்னணியை ஆய்வு செய்தோம். அவர், தன்னை வெளிப்படையான பாஜக ஆதரவாளராகக் காட்டிக் கொள்கிறார். அவரது பதிவுகள் அனைத்துமே, பாஜக ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ் எதிர்ப்பானதாகவும் உள்ளன. எனவே, அவர், தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக இப்பதிவை சித்தரித்துள்ளது, உறுதியாகிறது.

Archive Link

இதுவரை நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ஸ்டெர்லைட் நிறுவனம் அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
2) ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை குற்றம்சாட்டும் வகையில், இந்த பதிவு சித்தரிக்கப்பட்டுள்ளது.
3) இந்த நியூஸ் கார்டு பதிவில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்.
4) தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இத்தகைய பதிவை குறிப்பிட்ட நபர் பகிர்ந்துள்ளார்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, இந்த பதிவு சித்தரிக்கப்பட்டது; தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய தவறான, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியல்!

Fact Check By: Parthiban S 

Result: False