தமிழக வாக்காளர்களை ‘பிச்சைக்காரர்கள்’ என்று ஓ.பி.எஸ் கூறியது உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

“பணத்திற்காக வாக்கை விற்கும் பிச்சைக்காரர்கள் உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது” என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக, தந்தி தொலைக்காட்சி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவல் விவரம்:

ஓபிஎஸ்சின் திமிர் பிடிச்ச இன்றைய அறிக்கை

Archived link

ஏப்ரல் 14ம் தேதி தந்தி தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் கார்டில், ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்துடன் செய்தி உள்ளது. இதில், “பணத்திற்காக வாக்கை விற்கும் பிச்சைக்காரர்கள் உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது. சேலம் 8 வழிச் சாலை அமைந்தே தீரும்,” என்று பன்னீர்செல்வம் குறிப்பிட்டதாக உள்ளது. “ஓ.பி.எஸ்-ன் திமிர்பிடிச்ச இன்றைய அறிக்கை” என்ற தலைப்பில் இதை பகிர்ந்துள்ளனர்.

தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டில் இத்தகவல் வந்துள்ளதாலும், நாடாளுமன்றத் தேர்தல், அ.தி.மு.க- பா.ஜ.க எதிர்ப்பு காரணமாக இது உண்மைதானா என்று ஆராயாமல் பலரும் இதைப் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

அரசியல்வாதிகள் அவ்வப்போது பொது மக்களைத் திட்டுவது உண்டு. அதிமுக., மூத்த தலைவர்களுள் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைத்தியலிங்கம் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு முறை மோசமாகத் திட்டியதாக செய்திகள் வெளியானது. அது பற்றிய செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

ஆனால், பன்னீர்செல்வம் இப்படி அப்பட்டமாக பேசியது இல்லை. அதுவும் அவருடைய மகன் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் சூழலில் இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. அவ்வாறு பேசியிருந்தால் அது அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பாக இருந்திருக்கும். இருப்பினும் இதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிவு செய்தோம்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

OPS 2.png

தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டில் இந்த பதிவு பரவி வருகிறது. ஏப்ரல் 14ம் தேதி வெளியானது போல அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தந்தி தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான புகைப்படங்களில் தேடினோம்.

OPS 3.png

அதில், இந்த பதிவில் உள்ளது போன்ற ஓ.பன்னீர்செல்வம் படம் கொண்ட போட்டோ கார்டு ஒன்று கிடைத்தது. அதை கிளிக் செய்து பார்த்தபோது, அதில் ஓ.பன்னீர்செல்வம் சொன்னது வேறு ஒன்றாக இருந்தது தெரிந்தது.

Archived link

“மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகாவில் ராகுல் காந்தி பேசியதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்” என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியிருந்ததாக அந்த படத்தில் செய்தி இருந்தது. அந்த போட்டோ கார்டை எடுத்து போட்டோஷாப் செய்து மாற்றியது தெளிவாகத் தெரிந்தது.

தந்தி டிவி பயன்படுத்தும் ஃபான்டுக்கும் (எழுத்துரு), நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் போஸ்ட் புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருந்தது. மேலும், டிசைனிலும் மாறுதல் தெரிந்தது.

இதை மேலும் உறுதி செய்ய இந்த இரண்டு படங்களையும் fotoforensics இணையதளம் சென்று ஒப்பீடு செய்தோம். தந்தி தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட படத்தை முதலில் fotoforensics செய்தோம். அதில், எழுத்தின் பின்னணியில் இருந்த டிசைன் உள்பட எந்த திருத்தமும் இல்லாமல் இருந்தது.

தந்தி தொலைக்காட்சியின் அசல் போட்டோ கார்டு ஆய்வு படம்:

OPS 5.png

சர்ச்சைக்குரிய படத்தை fotoforensics-ல் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். அதில், வார்த்தைகள் இடம்பெற்ற பகுதி போட்டோஷாப் செய்து வைக்கப்பட்டது தெரிந்தது. இதன் அடையாளமாகக் கரை போன்ற கோடு இருந்தது. அசல் படத்தில் தெரிந்த பின்னணி டிசைன் இதில் இல்லை.

OPS 6.png

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட போட்டோ கார்டில் உள்ள வார்த்தைகளை நீக்கிவிட்டு, தவறான தகவலை எழுதி பகிர்ந்துள்ளனர் என்று உறுதியாகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட நியூஸ் கார்டு தவறான தகவல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:தமிழக வாக்காளர்களை ‘பிச்சைக்காரர்கள்’ என்று ஓ.பி.எஸ் கூறியது உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •