
‘’தோல்வி பயம் துரத்தவே பிரதமர் மோடியும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தர்காவுக்கு சென்றனர்,’’ என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
தோல்வி பயம் துரத்த தர்காவுக்குள் புகுந்த மோடி & யோகி
சங்கிகள் பாணியில் சொல்வதானால் பாகிஸ்தான் கொடிக்கு மரியாதை செலுத்திய மோடி
இந்த பதிவில், பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில், பிரதமர் மோடி பச்சை நிற போர்வை போர்த்தப்பட்ட சமாதி ஒன்றுக்கு மரியாதை செலுத்துகிறார். அருகில் அவருடைய பாதுகாவலர் மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உள்ளனர். ஆனால், அது என்ன இடம் என்ற விவரம் எதுவும் சொல்லப்படவில்லை.
தோல்வி பயம் துரத்த தர்காவுக்குள் புகுந்த மோடி மற்றும் யோகி என்று இந்த பதிவை வெளியிட்ட சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில் பயன்படுத்தப்பட்ட படத்தை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றம் செய்து தேடினோம்.


இந்த தேடலில், இந்த பதிவில் பயன்படுத்தப்பட்ட படம், அது தொடர்பான செய்தி, வீடியோ எல்லாம் கிடைத்தது.
2018ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் கபீரின் 500வது நினைவு ஆண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது, கபீர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மோடி. மேலும், 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள கபீர் அகாடமிக்கான அடிக்கல்லையும் நாட்டி பிரதமர் பேசினார். இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மோடி அஞ்சலி செலுத்திய வீடியோ…
இதில், 15வது விநாடியில் அஞ்சலி செலுத்தும் காட்சி வருகிறது. அதில் உள்ள படமும், இந்த பதிவில் இருந்த படமும் ஒத்துப்போவதைக் காணலாம்.

கபீர் எங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என இஸ்லாமியர்களும், இந்துக்களும், சீக்கியர்களும் கூறி வருகின்றனர். இந்த சூழலில்தான், நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் அவரது நினைவிடம் சென்றுள்ளனர். இதுதவிர, மோடி எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வது வழக்கம்தான். மோடி பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மையில் 2018 ஜூன் மாதத்தில் நடந்த இந்நிகழ்வை தற்போதைய சம்பவம் போல, அதுவும் தேர்தலுக்காக மோடி சென்றது போல சித்தரித்துள்ளனர். அதுவும் புகழ்பெற்ற கவிஞர் கபீர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய படத்தை வெளியிட்டு தோல்வி பயம் காரணமாக சிறுபான்மையினர் வாக்குகளை பெறும் வகையில் மோடியும் யோகியும் தர்காவுக்கு சென்றதாக, தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளார் பதிவாளர்.
இதை வெளியிட்ட சதீஷ் குமார், தன்னுடைய ப்ரொஃபைல் படமாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி சின்னத்தை வைத்துள்ளார். தன்னைப் பற்றி, “மதவெறி மாய்ப்போம், மனித நேயம் காப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். பல பதிவுகள் பா.ஜ.க எதிர்ப்பு நிலையிலேயே இருந்தன.
இதன் மூலம் இவர் மோடி மற்றும் பாஜக எதிர்ப்பு சிந்தனை கொண்டவர் என தெரிகிறது.
எனவே, நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கபீர் தாஸின் நினைவிடத்திற்கே மோடி சென்றார் என்றும், தேர்தல் காரணத்துக்காக தவறான வகையில் அவர் தர்காவுக்குச் சென்றதுபோல சித்தரித்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
