வெவ்வேறு ஷூ அணிந்து ஓடினாரா கோமதி மாரிமுத்து?

சமூக ஊடகம்

‘’2 வெவ்வேறு காலணிகளை அணிந்து ஓடிய கோமதி,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த முடிவுகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:

Archived Link

ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன், கோமதி மாரிமுத்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வீடியோவையும் ஆதாரமாக இணைத்து தமிழ் தேசியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதே செய்தியை வைத்து ஒரு மீம்ஸ் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த மீம்ஸில், ‘’ஒரு காலில் ஒரு காலணி, இன்னொரு காலில் வேறு காலணி, அதில் ஒன்று பிஞ்சதோடு ஓடி தங்கம் வென்றால்… தமிழ் மகள் கோமதி மாரிமுத்து. டிஜிட்டல் இந்தியாவாம்.. நாடு வல்லரசு ஆகுதாம்.. நமக்காக விளையாட போகும் ஒரு பிள்ளைக்கு ஒரு காலணி கூட வாங்கி தர வக்கற்ற நமக்கு வல்லரசு கனவு வேற,’’ என எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள வீரர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தங்கம் வென்று, உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் கோமதி மாரிமுத்து. தமிழகத்தைச் சேர்ந்த கோமதியை பற்றி தி இந்து வெளியிட்டுள்ள விரிவான செய்திக் கட்டுரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அவர் தங்கம் வென்ற போட்டி பற்றிய வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.  

பிறப்பால் தமிழர், அதுவும் மிக பிற்படுத்தப்பட்ட குடும்ப பின்னணியை சேர்ந்தவர் என்பதால் கோமதியின் சாதனை, சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேசமயம், அவர் சொல்லாத விசயங்களையும் குறிப்பிட்டு பலர் மத்திய அரசை குறை கூறியும் வருகின்றனர்.

இந்நிலையில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியாகியுள்ளது. இந்த பதிவை வெளியிட்டுள்ள தமிழ்தேசியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் பெயரே அது தமிழ் உணர்வு உள்ளவர்களால் நிர்வகிக்கப்படும் ஒன்று என்பதை உணர்த்துகிறது. ஆனால், பதிவை வெளியிட்டவர்கள், மீம்ஸையும் வெளியிட்டு அவர்களாகவே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். அந்த மீம்ஸில், 2 கால்களிலும் வெவ்வேறு ஷூ அணிந்து, கோமதி மாரிமுத்து ஓடினார் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையில், அவர் எப்படி எங்கேயும் ஓடவில்லை. இந்த இடத்தில்தான் நமக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது. தடகள விளையாட்டில் அதுவும் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்கும் பலரும் தங்களது உடலுக்கு வலு சேர்க்கும் வகையில், தரமான ஷூக்களை தேர்வு செய்வதுதான் வழக்கம். விளையாட்டு வீரர்கள் என்ன வகையான ஷூ, உடைகள் அணிய வேண்டும் என்பது தொடர்பாக, ஐஏஏஎஃப் விரிவான விதிமுறையே வகுத்துள்ளது. அதன்படிதான், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் யாராக இருந்தாலும் பங்கேற்க முடியும். இவ்வாறுதான், கோமதி மாரிமுத்துவும் பங்கேற்றுள்ளார்.

மேலும், போட்டியின்போது, கிழிந்துபோன ஷூ ஒன்றை அணிய நேரிட்டதாக, கோமதி மாரிமுத்து, நியூஸ்18 டிவி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இதனையே தமிழ்தேசியம் ஃபேஸ்புக் பக்கத்தினர் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால், வீடியோவின் முழு விவரம் அவர்கள் கவனிக்கவில்லை போலும். இந்த நேர்காணலில், எங்கேயும் ‘’காசு இல்லாததால், 2 வெவ்வேறு ஷூவை கடன் வாங்கி ஓடினேன்,’’ என்று கோமதி கூறவில்லை. ஆதார வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

இதேபோல, அவர் அணிந்து ஓடிய ஷூ என்ன வகையை சேர்ந்தது என்ற கோணத்தில் ஆய்வு செய்தோம்.

அவர் அணிந்திருந்த ஷூவை உற்று கவனித்தால், ஒன்று ஃப்ளோரசன்ட் யெல்லோ நிறத்திலும், மற்றொன்று நீல நிறத்திலும் உள்ளது. இதுதவிர, அவரது இடது கால் ஷூவில், டிக் அடித்தது போன்ற குறியீடு காணப்படுகிறது. இத்தகைய டிக் மார்க், நைக் நிறுவன தயாரிப்புகளில்தான் இடம்பெற்றிருக்கும். இதன்பேரில், கூகுள் உதவியுடன், நைக் நிறுவனம் ஓட்டப் பந்தய வீரர்களுக்கென எதுவும் இரட்டை நிறங்களிலான ஜோடி ஷூவை தயாரித்து அறிமுகம் செய்துள்ளதா என நீண்ட நேரம் தேடிப்பார்த்தோம்.

நீண்ட தேடலுக்குப் பின், நைக் நிறுவனம் சமீபத்தில் #Matumbo Limited Edition என்ற பெயரில் 2 வேறு நிறங்களிலான ஜோடி ஷூக்களை அறிமுகம் செய்துள்ள தகவல் கிடைத்தது. விளையாட்டு வீரர்களுக்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இவ்வகை ஷூக்கள் விலை குறைவானவை என்பதால், இதனை கோமதி தேர்வு செய்திருக்க வாய்ப்புள்ளது. அவர் அணிந்திருந்த ஷூக்கள் வெவ்வேறு நிறங்களில் இருந்தாலும் அவை ஒரே ஜோடிதான்; ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகள்தான் என உறுதியாகிறது.

கோமதி மட்டுமில்லை, சர்வதேச தடகள வீரர்கள் பலரும் இவ்வாறு வெவ்வேறு நிறத்திலான ஷூக்களை அணிவது வழக்கம்தான். இது பிரத்யேகமாக விளையாட்டு வீரர்களுக்காகவே தயாரிக்கப்படுபவை என்பதால், இப்படி டிசைன் செய்யப்படுகின்றன. மின்னல் மனிதர் என அழைக்கப்படும் உசேன் போல்ட் கூட இப்படி வெவ்வேறு நிறங்களிலான ஒரே ஜோடி ஷூக்களை அணிந்து விளையாடியுள்ளார். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், தமிழ் தேசியம் ஃபேஸ்புக் பக்கத்தினர் பகிர்ந்துள்ள மீம்ஸில் கோமதிக்கு அருகில் ஓடிவரும் மற்றொரு பெண்கூட வெவ்வேறு நிறத்திலான ஷூவையே அணிந்திருக்கிறார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூ அணிந்து ஓடினார் என்ற தகவல் உண்மைதான்.
2) கோமதி மாரிமுத்து நல்ல ஷூ கிடைக்காமல், 2 வெவ்வேறு ஷூக்களை அணிந்து ஓடினார் என்ற தகவல் தவறானது.
3) நைக் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் புதியதாக 2 வெவ்வேறு நிறங்களிலான ஷூக்களை ஒரே ஜோடியாக அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.
4) ஒரே நிறத்திலான ஷூக்களையே அணிய வேண்டும் என்ற விதிமுறை விளையாட்டு வீரர்களுக்குப் பொருந்தாது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் உண்மையும், பொய்யும் கலந்துள்ளதாக உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு, இத்தகைய நம்பகத்தன்மையற்ற புகைப்படம், செய்தி மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:வெவ்வேறு ஷூ அணிந்து ஓடினாரா கோமதி மாரிமுத்து?

Fact Check By: Parthiban S 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “வெவ்வேறு ஷூ அணிந்து ஓடினாரா கோமதி மாரிமுத்து?

Comments are closed.