ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் படமா இது?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஜெயலலிதாவின் காலில் ஒருவர்  சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார். ஜெயலலிதா கையில் உறுப்பினர் கார்டு உள்ளது. காலில் விழுந்தவர் யார் என்று தெரியவில்லை. புகைப்படத்தில் dinamalar.com என்ற வாட்டர் மார்க் தெரிகிறது. 

நிலைத் தகவலில், “ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Sakthi Saran என்பவர் 2020 பிப்ரவரி 9ம் தேதி வெளியிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

படத்தில் உள்ளவரைப் பார்க்கும்போது திண்டுக்கல் சீனிவாசன் போலத் தெரியவில்லை. மேலும், ஜெயலலிதா கையில் உறுப்பினர் அடையாள அட்டை உள்ளது. புதிதாக கட்சியில் இணைந்தவருக்கு அவர் அடையாள அட்டை வழங்குவது போல உள்ளது. 

ஆனால், இந்த படத்தில் உள்ளவர் திண்டுக்கல் சீனிவாசன் என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. அ.தி.மு.க நிர்வாகிகள், அமைச்சர்கள் எல்லோரும் ஜெயலலிதா, சசிகலா காலில் விழுந்தவர்கள்தான். அதனால், ஜெயலலிதா காலில் திண்டுக்கல் சீனிவாசன் விழவே இல்லை என்று கூறிவிட முடியாது. இந்த புகைப்படத்தில் இருப்பது திண்டுக்கல் சீனிவாசனா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த படத்தை தினமலர் நாளிதழ் 2014ம் ஆண்டு வெளியிட்டது தெரியவந்தது. அந்த செய்தியில், வட மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அம்மாஜி ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியதாகவும் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்ததாகவும், அ.தி.மு.க.,வில் இணைய வந்த, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், முதல்வர் ஜெயலலிதா காலில், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். சிலரை, பாதுகாப்புப் படையினர் எழுப்பி விட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களை, வட மாநிலத்திலிருந்து வந்தவர்களும் பின்பற்றினர் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த செய்தியில் ஜெயலலிதாவின் காலில் திண்டுக்கல் சீனிவாசன் விழுந்தார் என்றோ, இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார் என்றோ குறிப்பிடவில்லை.

திண்டுக்கல் சீனிவாசன் யாருடைய காலிலாவது விழுந்துள்ளாரா என்று தேடினோம். அப்போது 2017ம் ஆண்டு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா காலில் விழுந்ததாகவும் அருகிலிருந்த திண்டுக்கல் சீனிவாசனும் வேறு வழியின்றி சசிகலா காலில் விழுந்ததாகவும் ஒன் இந்தியா வெளியிட்ட வீடியோ கிடைத்தது. 

Archived Link

நம்முடைய ஆய்வு திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதாவின் காலில் விழுந்தாரா இல்லையா என்பது இல்லை. ஜெயலலிதா காலில் திண்டுக்கல் சீனிவாசன் விழுந்த போது எடுத்த புகைப்படமா இது என்பது மட்டும்தான். 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தினமலர் வெளியிட்டிருந்தது. தினமலர் வெளியிட்டிருந்த செய்தியில் அ.தி.மு.க-வில் புதிதாக இணைந்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் ஜெயலலிதா கையில் அ.தி.மு.க உறுப்பினர் அட்டையும் உள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்த படத்தில் இருப்பது திண்டுக்கல் சீனிவாசன் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், யாரோ ஒருவர் ஜெயலலிதாவின் காலில் விழும் புகைப்படத்தை எடுத்து திண்டுக்கல் சீனிவாசன் விழுந்தார் என்று செய்தி வெளியிட்ட மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False