கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்: வைரல் புகைப்படம் உண்மையா?

அரசியல் சமூக வலைதளம்

‘’கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 

N R V Thevar

என்பவர் ஏப்ரல் 26, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரை தமிழர் போன்ற முக சாயலில் உள்ள ஒருவர் வணங்கி வரவேற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன்மேலே, ‘’ அரிய புகைப்படம்..மதுரை வந்த #RSS தலைவர் ஶீகுருஜி அவர்களை வரவேற்கும் பசும் பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா….!!!,’’ என எழுதியுள்ளனர். இந்த புகைப்படத்தை மேலும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

Facebook LinkArchived Link 

உண்மை அறிவோம்:
ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவில் ஒரு வலுவான இயக்கமாக நிறுவப்பட மூல காரணமாக இருந்தவர்களில் ஒருவர் மாதவ சதாசிவ கோல்வால்கர். இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 1906ம் ஆண்டில் பிறந்த கோல்வால்கர் 1973ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதேபோல, தமிழகத்தின் பசும்பொன் கிராமத்தில் 1908ம் ஆண்டு பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். இளமைக்காலம் முதலே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வத்துடன் பங்கெடுத்த தேவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இதுதவிர, பிரிட்டிஷ் படைக்கு எதிராக, 2ம் உலகப் போர் காலக்கட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவப் படைக்கு தேவையான வீரர்களில் பெரும்பாலானோரை தமிழகத்தில் இருந்து திரட்டி அனுப்பி தனிப்பெரும் பங்களிப்பு செய்தவர் முத்துராமலிங்க தேவர். 1963ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இப்படியாக, சம காலத்தில் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் அரசியலில் ஈடுபட்ட இரு தலைவர்களும் மதுரையில் 1956ம் ஆண்டு சந்தித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது எனக் கூறி, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இதனை அப்படியே காப்பியடித்து பலரும் உண்மை என நம்பி பகிர தொடங்கியதே, இந்த குழப்பத்திற்கு அடிப்படை காரணமாகும்.

உண்மையில், இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என முத்துராமலிங்க தேவரின் ஆதரவாளர்கள் நடத்தும் தேவர் மலர் என்ற இதழலில் கடந்த 2017ம் ஆண்டில் ஒரு விளக்கமான கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. 

மேலும், ஆர்எஸ்எஸ் அபிமானிகள் குறிப்பிடும் 1955-56 காலக்கட்டத்தில் முத்துராமலிங்க தேவர் இந்தியாவில் கிடையாது. அவர் பர்மா சென்றிருந்தார். இதுபற்றியும் தேவர் மலர் இதழிலேயே விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

இதன்படி, 1950க்கு முந்தைய காலக்கட்டம் வரையிலும் முத்துராமலிங்க தேவர் மீசையுடன் நடமாடியுள்ளார். அதற்குப் பின், அவர் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கைவிட்டுவிட்டார். காரணம், 1949 தொடங்கி, 1951ம் ஆண்டு வரையிலும் அவர் தலைமறைவாக இருந்தார் என்று, அவரது அபிமானிகள் பலரும் குறிப்பிடுகிறார்கள். தேவரின் வாழ்க்கை வரலாற்று தகவல்களை திரட்டி சேமித்து வைத்துள்ள வீ.எஸ்.நவமணி என்பவர் கூட இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சந்தேகத்திற்கு, 1950க்கு முந்தைய காலக்கட்டத்தில் மீசையுடன் தேவர் இருக்கும் புகைப்படம் ஒன்றையும், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தோம். அதில், எந்த ஒற்றுமையும் இல்லாதது தெரியவந்தது.

இறுதியாக, கோல்வால்கர் மதுரைக்கு வந்தது 1949ம் ஆண்டில்தான். 1956ல் இல்லை. இந்த தகவலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Facebook Link Archived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) கோல்வால்கர் மதுரை வந்தது 1949ம் ஆண்டாகும். ஒருவேளை அவர் 1956ம் ஆண்டில் வந்திருந்தாலும் தேவரை சந்தித்திருக்க வாய்ப்பில்லை.
2) 1955-56 ஆண்டில் முத்துராமலிங்க தேவர் பர்மா சென்றிருந்தார்.
3) 1950க்குப் பின்னர் முத்துராமலிங்க தேவர் மீசை வைக்கும் பழக்கத்தை கைவிட்டுவிட்டார்.
4) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தில் இருப்பவர் வேறு ஒரு நபர் ஆவார்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்: வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False