
‘’இலங்கையில் உள்ள ராவணன் கோட்டை,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Sakthi Aathira என்பவர் ஜூலை 18, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பிரமாண்டமான படிக்கட்டுகள் இருப்பது போன்ற மலைப்பகுதியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ இந்த #படிகளை கட்டியவனும், இதில் நடந்தவனும் எத்தனை #பெரிதாய் இருந்திருப்பான்? இலங்கை ராவணண் கோட்டை… #ஸ்ரீலங்கா,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த புகைப்படம் இலங்கையில் உள்ள ராவணன் கோட்டையா என்ற சந்தேகத்துடன் அதில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்களை படித்துப் பார்த்தோம். அப்போது, சிலர் இது பெரு நாட்டில் உள்ள கிளிமாஞ்சாரோ என்ற இடம் எனவும், இது ராவணன் கோட்டை இல்லை எனவும் கூறி கமெண்ட் பகிர்ந்திருந்தனர்.

இதன்பேரில் குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது பெரு நாட்டின் தெற்கே மச்சு பிச்சு பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒல்லான்டாய்டம்போ (Ollantaytambo) என்ற இடம் என தெரியவந்தது.

இங்கா பழங்குடியின மக்கள் வசித்த பகுதி இது என தெரியவருகிறது. இன்கா பேரரசை கட்டமைத்தவர்களில் முக்கியமான நபர் பச்சாசுட்டி என்பவரின் ராயல் எஸ்டேட்டாக இந்த பகுதி உள்ளது. இங்கு ராட்சத படிக்கட்டுகள் போன்ற அமைப்பும், பிரமாண்டமான குடியிருப்புகளும் இருந்திருக்கின்றன. தற்போதும் இவற்றில் சில எஞ்சியுள்ளன. மிக ரசனையாக உள்ள இந்த பகுதி, மச்சு பிச்சு செல்வோர் சுற்றி பார்க்க விரும்பும் இடங்களில் முதன்மையாக உள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுபற்றிய புகைப்படங்கள் நிறைய கூகுளிலேயே கிடைக்கப் பெறுகின்றன. அவற்றில் சிலவற்றை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

அதேசமயம், இவர்கள் குறிப்பிடும் ராவணன் கோட்டை இலங்கையில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், அது இன்னும் உறுதியாகவில்லை. அதுபற்றி பலவித சந்தேகங்கள் உள்ளன. அதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட புகைப்படம் இலங்கையில் உள்ள ராவணன் கோட்டை இல்லை என்றும், இது பெரு நாட்டில் உள்ள இன்கா பழங்குடியின மக்களின் கட்டமைப்புகளில் ஒன்று எனவும் சந்தேகமின்றி தெளிவாகிறது. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
