ஆகாசப் புளுகர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் பேட்டி அளித்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகாசப் புளுகர் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆகாசப் புளுகர் அண்ணாமலை! உண்மையைப் பேசியதால் தான் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். உண்மையைப் பேசுபவர்களுக்கு அங்கு இடமில்லை. அண்ணாமலை போன்ற ஆகாச புளுகர்களுக்குத்தான் அங்கே இடம் – நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Prakash JP என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி பிரிவு பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யாவுக்கும் சிறுபான்மையினர் பிரிவு அணித் தலைவர் டெய்சிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிக ஆபாசமாக திருச்சி சூர்யா பேசியதற்கு அக்கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. திருச்சி சூர்யாவைக் கண்டித்து அக்கட்சியின் காயத்ரி ரகுராம் ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் அவரை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார் அண்ணாமலை.

தன்னை கட்சியிலிருந்து நீக்கிய அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் காயத்ரி ரகுராம். அதில் எட்டு ஆண்டுகளாக கட்சிக்காக பணியாற்றி வருவதாகவும் எந்த விளக்கமும் கேட்காமல், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி நீக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை பொய்யர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்படவே அது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் அண்ணாமலை பற்றி காயத்ரி ரகுராம் கூறியதைப் பார்த்தோம். பல ஊடகங்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அவற்றைப் பார்த்த போது அண்ணாமலையைப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறவில்லை என்பது தெரிந்தது. அடுத்தது இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று பார்த்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தது தெரிந்தது. 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் காயத்ரி ரகுராம் மற்றும் அண்ணாமலை ஆகியோர் படங்கள் இருந்தன. ஆனால், இந்த நியூஸ் கார்டில் காயத்ரி ரகுராம் படம் மட்டும் இருந்தது. அதில், “சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை தேவை. சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதைவிட மோசமானது; நான் பாஜகவிற்கு எதிராக இருப்பதாக யார் கூறினாலும் அவர்களுக்கு நான் எதிரானவள். அண்ணாமலை அந்த கருத்தை தெரிவித்தால் அவரையும் நான் எதிர்ப்பேன். முதலமைச்சர் சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் – காயத்ரி ரகுராம்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாக வெளியிட்டிருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆகாசப் புளுகர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆகாசப் புளுகர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் பேட்டி அளித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply