
மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
1.11 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் முதலில் மோடி பேசுகிறார். அப்போது, “மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்” என்கிறார். “பீஃப் எக்ஸ்போர்ட்” என்று மோடி குறிப்பிட்டது மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் காட்சிகள் வருகிறது. அதில், மோடி பேசியதை குறிப்பிட்டு சீமான் பேசுகிறார்.
“நாம் பேசும்போது நம்பவில்லை, இப்போது நம் ஆளே பேசுகிறார், பீஃப் எக்ஸ்போர்ட் ஹே, இந்துஸ்தான்ஹே, நம்பர் ஒன் ஹே… யார் பேசுகிறார்? நாட்டின் பிரதமர். மாட்டுக்கரி ஏற்றுமதியில் இந்தியா நம்பர் ஒன் என்கிறது… நாங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்துக் கொள்கின்றீர்களே, மாட்டுக் கறியை விற்றுக் கொண்டுவந்த காசில் வாழ்கின்றீர்களே அது உங்களுக்கு கேவலமாக இல்லையா? தற்கொலை செய்து செத்துப்போங்கடா” என்கிறார்.
இந்த வீடியோ பதிவை, AbdulHakkim என்பவர் 2020 மார்ச் 7ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “மாட்டுக்கறி ஏற்றுமதி இந்தியா முதலிடம். இந்துஸ்தான் பக்தாளுக்கு மூத்திரம் FREE” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பசு பாதுகாப்பு பற்றி பேசும் மோடி உள்ளிட்டவர்கள், மாட்டிறைச்சி ஏற்றுமதியை புகழ்ந்து கூறுவதற்கு வாய்ப்பே இல்லை. வீடியோவில் குரலை மாற்றி எடிட் செய்துள்ளார்களா அல்லது வழக்கம் போல முழு வீடியோவையும் வெளியிடாமல் துண்டாக வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம். மேலும், வீடியோவைப் பார்த்தால் மிகப் பழமையான வீடியோ போல உள்ளது. ஒருவேளை மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு எடுத்த வீடியோவாக இருக்கலாம் என்று தோன்றியது.
எனவே, வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை பலரும் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

Search Link |
இவற்றுக்கு நடுவே படங்கள் மற்றும் வீடியோக்கள் கிடைத்தன. அதில் JITO Connect 2012 என்று இருந்தது. அதாவது 2012ம் ஆண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தது. மோடி 2014ம் ஆண்டுதான் பிரதமர் ஆனார். 2012ல் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். எனவே, பிரதமர் மோடி பீஃப் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் என்று சொல்லி பெருமிதம் கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிந்தது.

முழு வீடியோ கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ 2012ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. 1.12வது நிமிடத்தில் மோடி பேசிய பேச்சு இடம் பெற்றிருந்தது.
அந்த வீடியோ பற்றிய குறிப்பில், “இந்திய அரசு பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சிக்கு முக்கியத்துவம் தருவதைக் காட்டிலும் பிங்க் புரட்சிக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. இதனால் இந்தியா பெருமிதத்தோடு பீஃப் ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பதாக கூறுகிறது” என்று மோடி பேசியதாக குறிப்பிட்டிருந்தனர்.

narendramodi.in | Archived Link |
நரேந்திர மோடியின் பேச்சு தொடர்பாக ஆய்வு செய்தோம். அப்போது, நரேந்திர மோடியின் இணையதள பக்கத்திலேயே இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தனர். அதில், மகாத்மா காந்தியின் மண்ணிலிருந்து கொண்டு பீஃப் ஏற்றுமதியில் முன்னோடியாக நாடு இருக்கிறது என்று கூறுவது வெட்கம்” என்று குஜராத் முதல்வர் மோடி குறிப்பிட்டதாக இருந்தது.
நம்முடைய ஆய்வில்,
மோடி பேசிய அசல் வீடியோ கிடைத்துள்ளது.
மோடி 2012ம் ஆண்டு குஜராத் முதல்வராக பேசியபோது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசை விமர்சித்துப் பேசியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘காந்தி பிறந்த மண்ணில் இருந்துகொண்டு பீஃப் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கிறோம் எனக் கூறுவது வெட்கக்கேடானது,’ என்று அவர் பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், காந்தியின் மண்ணிலிருந்துகொண்டு பீஃப் ஏற்றுமதியில் இந்தியா நம்பர் ஒன்னாக இருக்கிறது என்று கூறுவது வெட்கம் என்று கூறியதை கட் செய்து, பீஃப் ஏற்றுமதியில் இந்தியா நம்பர் ஒன்னாக இருக்கிறது என்ற பகுதியை மட்டும் வெளியிட்டு தவறான தகவலைப் பரப்பியுள்ளது உறுதியாகிறது.
மோடி, பிரதமர் ஆவதற்கு முன்பு பேசிய பேச்சை தற்போது பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் அடிப்படையில், உண்மையும் தவறான தகவலும் சேர்த்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், பீஃப் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று பிரதமர் கூறியதாக உண்மையுடன் தவறான தகவல் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் என்று பிரதமர் மோடி சொன்னாரா?- ஃபேஸ்புக் வீடியோவால் பரபரப்பு
Fact Check By: Chendur PandianResult: Partly False
