
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போலீசார் போராட்டத்தில் குதித்தாக சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி வேண்டாம் என்று ஆங்கிலத்தில் அட்டை பிடித்தபடி இருக்கும் போலீசாரின் படங்கள் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில் “குடியுரிமையை எதிர்த்து போலீசும் போராட்டத்தில் குதித்து விட்டார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, திருமா தம்பி விசிக என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 மார்ச் 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடு முழுக்க குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், போலீசார் எங்கேயும் போராடியதாக செய்திகள் வரவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற போலீசார் கையில் பிடித்திருக்கும் அட்டைகள் போட்டோ எடிட் செய்யப்பட்டது போல உள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் போராட்டம் நடத்தியிருந்தனர். அந்த புகைப்படத்தை பகிர்ந்தது போல தெரிந்தது.
எனவே, வழக்கறிஞர்களுக்கு எதிராக டெல்லி போலீசார் போராட்டம் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது அது தொடர்பான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. இமேஜ் சர்ச்சில் பார்த்த போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படங்கள் கிடைத்தன.

Search Link |
முதல் படம் scroll.in-ல் இருந்து நமக்கு கிடைத்தது. நவம்பர் 5, 2019 அன்று இந்த படம் மற்றும் செய்தியை வெளியிட்டிருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பரில் வந்தது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இந்த புகைப்படத்தை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. அதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி, “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த அட்டையைப் பிடித்திருந்தார்.
அவருக்குப் பின்னால் இருந்தவர்கள் இந்தியில் போஸ்டர்கள் வைத்திருந்தனர். அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதுவும் அதில் இல்லை. “யார் எங்கள் குறைகளைக் கேட்பது?, இன்று போலீஸ் நாளை?” என்று இருந்தது. இந்த படங்கள் எல்லாம் நவம்பர் 5ம் தேதி முதல் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது.

scroll.in | Archived Link 1 |
newindianexpress.com | Archived Link 2 |
theweek.in | Archived Link 3 |
இரண்டாவது படத்தின் அசல் கிடைக்கவில்லை. ஆனால், அதே நிகழ்வின் பல படங்கள் நமக்கு கிடைத்தன. newindianexpress.com இணையதளத்தில் அந்த புகைப்படம் நவம்பர் 8, 2019 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதிலும், டெல்லியில் வழக்கறிஞர்களுக்கு எதிராக போலீசார் போராடினார்கள் என்றே குறிப்பிட்டிருந்தனர்.

நீளவாட்டில் வைக்கப்பட்டுள்ள போலீசார் தரையில் அமர்ந்திருக்கும் படம் theweek.in இணையதளத்தில் நமக்கு கிடைத்தது. அதில் அந்த போலீஸ்காரர், “காவலர்களும் மனிதர்கள்தான்” என்று எழுதி வைத்திருந்தார். இதுவும் நவம்பர் 5ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.

நம்முடைய ஆய்வில்,
இந்த படங்கள் எல்லாம் வழக்கறிஞர்களைக் கண்டித்து டெல்லி போலீசார் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை; 2019 நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களை எடிட் செய்துள்ளனர். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 டிசம்பர் 9ம் தேதி மக்களவையில் கொண்டு வரப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போலீசார் போராட்டம்!- வைரல் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
