
‘’பொன்.ராதாகிருஷ்ணன் தோற்றதற்கு மத வேறுபாடுதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

நாங்க நாகர்கோவில் காரங்க என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குமிரியில் நீங்கள் மதத்தால் தோற்று போகலாம், ஆனால் நீங்கள் செய்த சாதனைகள் என்றும் உங்கள் புகழ் பாடும்!!!,’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி, வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பொன்.ராதாகிருஷ்ணன் தோல்விக்கு, மத ரீதியான வாக்குப் பிரிவுதான் காரணமா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள கமெண்ட்களை பார்வையிட்டோம். அதில் பல கிறிஸ்தவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன் தோல்விக்கு மத ரீதியான பிரிவினை காரணம் இல்லை என்றும், பாஜக.,வினரின் பேச்சுகளே காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதன்படி பார்த்தால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகாருக்கு, அதன் கீழே உள்ள கமெண்ட்களிலேயே பதில் உள்ளது. ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்டவை தொடர்பாக, பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற பாஜக தலைவர்கள் பேசிய பேச்சுகள், மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளதாகவும், இதன்பேரில்தான் இந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைய நேரிட்டதாகவும் அதில் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்படி கமெண்ட் போட்டவர்களில் பலர் கிறிஸ்தவர்கள் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இதையடுத்து, தமிழக மக்களவைத் தேர்தல் 2019 முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தேடிப் பார்த்தோம். அதன் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். பிறகு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் தேடினோம். அதில், கன்னியாகுமரி தொகுதியில் 2019 நிலவரப்படி, சுமார் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்கள் இருப்பதாக விவரம் கிடைத்தது. இதுபற்றிய விக்கிப்பீடியா தகவல் ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஓட்டு சம அளவில்தான் உள்ளதாகவும் தெரியவந்தது. இதுபற்றி First Post வெளியிட்ட செய்தி ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது.

இதன்பின் 2014 தேர்தல் முடிவுகளையும், 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தோம். இதில், 2014ம் ஆண்டு ஹெச்.வசந்தகுமார் தோற்க, பொன்.ராதாகிருஷ்ணன் வென்றுள்ளார். தற்போது, பொன்.ராதாகிருஷ்ணன் தோற்க, ஹெச்.வசந்தகுமார் வென்றுள்ளார். இருவருக்கும் இடையே, இந்த 2 தேர்தல்களிலும், ஒரு 15 முதல் 20 சதவீத வாக்கு வித்தியாசம்தான் உள்ளது. அதாவது, இந்துக்கள், கிறிஸ்தவ வாக்காளர்கள் சம அளவில் உள்ளதால், கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் தோற்பதற்கு, மத ரீதியான ஓட்டுகள்தான் காரணம் என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், 2014ல் அவர் வெற்றிபெற்றபோது மட்டும் மதரீதியான வாக்குகள் கண்களுக்குத் தெரியவில்லையா என்ற கேள்வி இங்கே எழுகிறது.
தெரியவில்லையா என்ற கேள்வி இங்கே எழுகிறது.

அதாவது வெற்றி பெறும்போது ஒரு நியாயம், தோற்கும்போது ஒரு நியாயம் என்பதுபோல, இந்த குற்றச்சாட்டு உள்ளது. இந்துக்கள் அனைவருமே பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டுப் போட்டுள்ளார்களா என்பதே முதலில் சந்தேகமான விசயம். இன்றைய காலக்கட்டத்தில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அவருக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்று கூட உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாக, பஞ்சாப்பில் ஒரு சுயேச்சை வேட்பாளர், தனது குடும்பத்தில் 9 வாக்காளர்கள் இருந்தும், 5 பேர் தான் தனக்கு ஓட்டுப் போட்டுள்ளனர், என்று கூறி, கதறி அழுத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதுபோலவே, பொன்.ராதாகிருஷ்ணன் விசயமும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும் அவரை நல்லவர் என்றே பாராட்டுகின்றனர். இதுதவிர, பொன்.ராதாகிருஷ்ணனும், அவரை தோற்கடித்த ஹெச்.வசந்தகுமாரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள்தான். இதன்படி பார்த்தால், அவரது சொந்த ஜாதி வாக்குகளே பிரிந்து சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதைவிட்டு விட்டு, மத ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தேவையற்ற சமூக பதற்றத்தை உண்டாக்கக் கூடிய விசயமாகும்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறு உள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பாதி உண்மை மற்றும் பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Title:பொன். ராதாகிருஷ்ணன் தோல்விக்கு மத ரீதியான ஓட்டுகள் காரணமா?
Fact Check By: Parthiban SResult: Mixture
