
இனி மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக பேசிவந்தால் 2021 தேர்தலில் தி.மு.க தோல்வி அடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
இரண்டு நியூஸ் கார்டுகளை ஒன்றாக சேர்த்துப் பதிவிட்டது போல உள்ளது. மேலே உள்ள நியூஸ் கார்டில், தி.மு.க-வுடன் இனி பணியாற்றவா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கீழே தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இனி மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தி.மு.க பேசி வந்தால் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவது உறுதி – பிரசாந்த் கிஷோர்” என்று குறிப்பிட்டுள்ளனர். “2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வி அடையும்” என்று சிறிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பரிமளம் பரிமளம் என்பவர் 2020 பிப்ரவரி 4ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “350 கோடி கொடுத்து இத தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு” என்று குறிப்பிட்டுள்ளனர். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2021ல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியாற்ற தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பிலிருந்து பிரசாந்த் கிஷோரை தொடர்பு கொண்டதாகவும் கடைசியில் தி.மு.க-வுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க -வுக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்ற உள்ளார் என்று மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறினார்.
Archived Link 1 | news18.com | Archived Link 2 |
இந்த நிலையில் தி.மு.க-வை கிண்டல் செய்து எதிர் தரப்பினர் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த தேர்தலில் ஒரு சில சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இந்த முறை அப்படி நடந்துவிடக்கூடாது… பிஷாந்த் கிஷோர் எதிர் தரப்புக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவரை நியமித்ததாக தி.மு.க-வினர் சமாதானம் கூறி வருகின்றனர். இது தொடர்பான அரசியலுக்குள் செல்லவில்லை.
தி.மு.க தோல்வியைத் தழுவும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா என்று ஆய்வு செய்தோம். இது தொடர்பாக கூகுளில் தேடியபோது எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. பிரசாந்த் கிஷோரின் சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில் அவர் தி.மு.க பற்றி எதுவும் கருத்து வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
Archived Link |
தி.மு.க தரப்பைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “இப்போதுதான் தலைவர் மிகவும் பெருமிதத்தோடு பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்காக பணியாற்றப் போகிறார் என்று அறிவித்தார். அப்படி இருக்கும்போது தி.மு.க -வுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் பேசுவாரா?” என்று கேள்வி எழுப்பினர்.
உண்மையில் இதுபோன்று நியூஸ் கார்டை தந்தி டி.வி வெளியிட்டதா என்று தேடினோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தபோது அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும், தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டுக்கும், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுக்கும் டிசைன், வடிவமைப்பு, நிறம் உள்ளிட்ட பல விஷயங்களில் வேறுபாடு இருப்பதும் தெரிந்தது. இதனால், இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டு குறித்து தந்தி டி.வி ஆன்லைன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர்கள் இது நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியானது என்று உறுதி செய்தனர்.
நம்முடைய ஆய்வில்,
தி.மு.க-வுடன் இணைந்து பணியாற்றுவார் என்று தற்போதுதான் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தி.மு.க தோல்வி அடையும் என்று பிரசாந்த் கிஷோர் பேட்டி, ட்வீட் வெளியிட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
தந்தி டி.வி சமூக ஊடக பக்கங்களில் இந்த நியூஸ் கார்டு நமக்கு கிடைக்கவில்லை.
இது போலியானது என்று தந்தி டி.வி உறுதி செய்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தி.மு.க பேசினால், 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியைத் தழுவும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தி.மு.க தோல்வியடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
