
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அபிஷேகத்துக்கு பால் தரும் பசு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பசுவின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இந்த பசுவின் விலை ரூ.12 கோடி.ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான்.இது புங்கநூரு ஜாதி பசு.ஒரு நாளைக்கு100 லிட்டர் பால் தருகிறது. இந்த ஜாதி பசுவின் பால்தான் திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பசுவின் தரிசனம் கை நிறைய சுப பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. நிறையபேருக்கு தரிசன அருள் கிடைக்க பகிரவும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, இரா.கோபி நாத் என்பவர் 2019 செப்டம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
புங்கனூர் வகையைச் சேர்ந்த ஒரு பசுவின் விலை 12 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வளவு விலை கொடுத்து யார் இந்த பசுவை வாங்குவார்கள் என்று தெரியவில்லை. உண்மையில் புங்கனூர் பசுக்களின் விலை ரூ.12 கோடியா, தினமும் 100 லிட்டர் பால் தருமா… இது பற்றி செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.
அப்போது பசுமை விகடனில் 25-01-2014 தேதியிட்ட இதழில், புங்கனூர் குட்டை என்ற பெயரில் கட்டுரை வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், இந்த மாட்டின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், ஆந்திரப் பிரதேசம் முழுவதும் தேடினாலும் கூட 100 மாடுகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும், ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் பால் தரும் என்று குறிப்பிடிருந்தனர். ஆனால் அந்த கட்டுரையில் விலை பற்றிக் குறிப்பிடவில்லை.

தினமணியில் வெளியான கட்டுரையில் கன்று ரூ.20 ஆயிரத்துக்கு கிடைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். கொழுப்பு குறைவானது, நாட்டு ரகம் என்பதால் புங்கனூர் குட்டை மாட்டுக்கு கிராக்கி உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் கூட ஒரு வேளைக்கு மூன்று லிட்டர் பால் கரக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். பால் தேவை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் யாரும் நாட்டு மாடுகளை விரும்புவதில்லை, இதனால் மாட்டின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.
Vikatan.com | Archived Link 1 |
dinamani | Archived Link 2 |
இந்த பசுவின் பாலைத்தான் திருமலை திருப்பதி கோவிலில் பயன்படுத்துகிறார்களா என்று தேடினோம். இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தேடியபோது ஒரு தகவல் கிடைத்தது. அதில், திருப்பதியில் அதிநவீன கோசாலை உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும், எஸ்.வி.டைரி ஃபார்ம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு தேவையான பால், தயிர் உள்ளிட்டவற்றை வழங்குவதாக குறிப்பிட்டிருந்தனர்.

tirumala.org | Archived Link |
இதன் மூலம் புங்கனூர் பசு தினமும் 100 லிட்டர் பால் கொடுப்பதாகவும், இந்த பசுவின் பாலைக் கொண்டுவந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அபிஷேகம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுவது தவறு என்பது உறுதியாகிறது.
படத்தில் உள்ள பசு எந்த வகையைச் சார்ந்தது என்று தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, குவின் ஆஃப் ஆசியா என்று எழுதப்பட்டிருந்த பசுவின் படங்கள் கிடைத்தன. அதை கீவேர்டாக பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது மேற்கண்ட படத்தில் உள்ளது போன்று பசுக்களின் படங்கள் நமக்கு கிடைத்தன.
Archived Link |
தொடர்ந்து தேடியபோது, மேற்கண்ட படத்தில் உள்ள பசுவின் வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், குவின் ஆஃப் பாகிஸ்தான் என்று குறிப்பிட்டிருந்தனர். வீடியோவில் உள்ளவர்கள் அணிந்திருக்கும் ஆடையும் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் போலவே இருந்தனர். இதன் மூலம் இந்த பசு பாகிஸ்தானைச் சார்ந்தது என்பது உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், படத்தில் இருக்கும் பசு புங்கனூர் பசு இல்லை என்பதும், புங்கனூர் என்ற நாட்டு வகை பசுக்கள் 100 லிட்டர் பால் கொடுப்பது இல்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திருப்பதி கோவிலுக்கு பால் தரும் புங்கனூர் பசுவின் விலை ரூ.12 கோடியா?
Fact Check By: Chendur PandianResult: False
