
அதிக தொகை கொடுத்ததால் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் அதை ஏலம் விட்டோம். பாகிஸ்தான் நாடு அதிக தொகை கொடுத்து எடுத்தது. இதில் தவறேதும் இல்லை. சட்டப்படிதான் செயல்பட்டுள்ளோம் – ப.சிதம்பரம். இதற்குப் பெயர் தேசதுரோகமா? இல்லையா?” என்று கேட்டுள்ளனர்.
இந்த பதிவை, Hindu Desam இந்துதேசம் 2.0 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூலை 25ம் தேதி வெளியிட்டுள்ளனர். இது போன்ற பதிவை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை இந்தியா ஏலம் விட்டதாகவும் அதை அதிக விலைக்கு பாகிஸ்தான் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று எதையும் குறிப்பிடவில்லை.
இந்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை விற்பனை செய்வதாக அறிவிப்பு ஏதும் வெளியிட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

சமூக ஊடகத்தில் தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போன்று பலரும் பதிவு செய்திருந்தது தெரிந்தது. அதில் ஒருவர் அழகான கதையை சொல்லியிருந்தார். அந்த பதிவை அவர் 2019 ஜனவரி 25ம் தேதி வெளியிட்டிருந்தார்.
அதில் பணம் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு விற்றதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக நிருபர் ஒருவர் ப.சிதம்பரத்திடம் கேட்டாராம். அதற்கு சிதம்பரம் சட்டப்படி செயல்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தான் கள்ள நோட்டு அச்சடிக்காதா என்று நிருபர் கேட்டாராம்… அதற்கு ப.சிதம்பரம், “காங்கிரஸ் ஆட்சிக்கு வரட்டும் உங்களை எல்லாம் என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று மிரட்டியபடி அங்கிருந்து வெளியேறினாராம்.
இந்த தகவலில் உள்ளபடி கடந்த ஜனவரி மாதம் ப.சிதம்பரம் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை திட்டினாரா, ப.சிதம்பரம் பற்றி ரகுராம் ராஜன் புகார் தெரிவித்தாரா என்று தேடினோம். ஆனால், அது போல் எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில், இந்த பதிவு வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது 2019 ஜனவரி 17ம் தேதி, வலது சாரி ஆதரவு இணையதளம் ஒன்றில், ப.சிதம்பரம் ஏற்பாட்டின்பேரில் ராகுல் காந்தி ஆலோசகர் ஆனார் ரகுராம் ராஜன் என்று ஒரு செய்தி நமக்கு கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டில் ராகுல் காந்திக்கு ஆலோசகராக மாறி, ரகசியமாக சந்தித்து ஆலோசனை வழங்கிவரும் ரகுராம் ராஜன் எப்படி ப.சிதம்பரத்துக்கு எதிராக பேசியிருப்பார் என்ற கேள்வி எழுந்தது.
ஃபேஸ்புக்கில் இதே தகவல் டைம்ஸ் நவ் வீடியோவுடன் வெளியாகி இருந்தது. வசமாக ப.சிதம்பரம் சிக்கிவிட்டார் என்று நினைத்து அந்த வீடியோவை பார்த்தோம். சமூக ஊடகங்களில் ஆளும் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறார்கள் என்ற செய்தி ஓடியது. பதிவுக்கும் வீடியோவுக்கும் தொடர்பில்லை என்று தெரிந்தது.
நம்முடைய தேடுதலில், தீவிர வலதுசாரி ஆதரவு இணையதளம் ஒன்றில், ப.சிதம்பரம் மீது சுப்பிரமணியன் சுவாமி சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பான செய்தி கிடைத்து. அதில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு இந்தியப் பணத்தை அச்சடிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், அந்த நிறுவனம்தான் பாகிஸ்தான் பணத்தை அச்சடித்து கொடுக்கிறது என்றும் இதன் மூலம் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க உதவும் காகிதம் மிக எளிதாக பாகிஸ்தானுக்கு கிடைத்துவிடும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக 2017ம் ஆண்டு ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருந்தார். அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த செய்தியை அவர்கள் வெளியிட்டு இருந்தனர். இதில் கூட எந்த இடத்திலும் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு ப.சிதம்பரம் விற்றார் என்று கூறவில்லை.
நம்முடைய ஆய்வில்,
இந்திய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றது தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு இயந்திரத்தை ப.சிதம்பரம் விற்றார் என்று ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இந்திய ரூபாய் அச்சடிக்கும் ஒப்பந்தத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியதாக மட்டுமே ப.சிதம்பரம் மீது சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
