
‘’கர்நாடகாவில் பா.ஜ.க வென்றால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்துவிடுவார்கள்,’’ என்று தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக, புதிய தலைமுறை பெயரில் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
வதந்தியின் விவரம்:
கர்நாடகாவில் பா.ஜ.க வென்றால் காவேரித் தண்ணீரைத் தமிழகத்துக்குக் கொடுத்துவிடுவார்கள் என் கர்நாடகாவில் காங்கிரஸ் பரப்புரை….
இதற்கு திமுக என்ன சொல்லப் போகுது
புதிய தலைமுறையின் பிரேக்கிங் ஃபோட்டோ கார்டில், ராகுல் காந்தி படத்தைப் போட்டு, ‘’கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் காவிரி நீரைத் தமிழகத்திற்கு கொடுத்துவிடுவார்கள்” என குறிப்பிட்டுள்ளனர். பின்னணியில் புதிய தலைமுறை பிரேக்கிங் மியூசிக் ஒலிக்கிறது. திடீரென்று, ஹிந்துஸ்தான் நியூஸ் என்ற லோகோ உள்ள வீடியோ ஒளிபரப்பாகிறது.
அதில், ராகுல் காந்தி இந்தியில் பேசுகிறார். அதை ஒருவர் கன்னடத்தில் மொழி பெயர்த்து சொல்கிறார். இந்த வீடியோ முடிந்ததும், மீண்டும் புதிய தலைமுறை லோகோவுடன் ஒரு போட்டோ கார்டு வருகிறது. அதில், “மத்திய அரசை எதிர்த்து திமுக காங்கிரஸ் போராட்டம் நடத்திவரும் வேலையில் ராகுல் காந்தியின் கருத்து தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவு 25 மார்ச் 2019ல் வெளியிடப்பட்டுள்ளது. இதை முகநூல் ஹிந்து மீடியா என்ற பக்கம் வெளியிட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதாலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான காவிரியில் தமிழகத்துக்கு எதிராக ராகுல் காந்தி பேசியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளதாலும் 9,500க்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர். 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவைப் பார்க்கும்போது, இது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயர், மியூசிக்கை பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டது என்று தெளிவாக தெரிகிறது. இதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்களைத் தேடினோம்.
வீடியோ தொடக்கத்தில் புதிய தலைமுறை லோகோ உள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்பான வீடியோ வரும்போது புதிய தலைமுறை லோகோ காணாமல் போய்விடுகிறது. மேலும், வாட்டர்மார்க்கில் புதிய தலைமுறை என்ற வார்த்தையும் இடம்பெறவில்லை. வீடியோவை வெளியிட்டவர்களின் விவரத்தை #Invid உதவியுடன் இணையத்தில் தேடினோம். இதை முகநூல் ஹிந்து மீடியா என்ற ஃபேஸ்புக் பக்கம்தான் வெளியிட்டுள்ளது; புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், யூடியூப் பக்கத்தில் இருந்து ஷேர் செய்யப்படவில்லை என்றும் உறுதியானது. ஆதார புகைப்படத்தை கீழே காணவும்…

அந்த வீடியோவில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முயன்றோம். இந்தி மற்றும் கன்னடம் தெரிந்த நண்பர் ஒருவரிடம் அந்த வீடியோவில் என்ன சொல்லப்படுள்ளது என்று கேட்டோம். அதற்கு அவர், “நரேந்திர மோடி கர்நாடகாவுக்கு வந்து ஊழலைப் பற்றி பேசுகிறார். ஊழலுக்கு காரணமாக இருந்த எடியூரப்பாவையும், அவரது அமைச்சரவையில் இருந்த நான்கு ஊழல் அமைச்சர்களையும் மேடையில் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி, மோடி நமக்கு உபதேசம் செய்கிறார்” என்று ராகுல் பேசியதாக தெரிவித்தார். வீடியோவில் காவிரி நீர் என்ற வார்த்தையே எங்கும் இடம்பெறவில்லை என்றும், நண்பர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, வீடியோவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். வீடியோவில் உள்ள ஒரு ஃபிரேமை மட்டும் புகைப்படமாக எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, கடந்த 2018ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது சாம்ராஜ்நகரில் ராகுல் காந்தி பேசிய பிரசார வீடியோதான் இது என்பது நமக்குத் தெரியவந்தது.

கூகுள் தேடலில், நமக்கு இதற்கான யூடியூப் இணைப்பும் கிடைத்தது. அந்த லிங்கை திறந்து பார்த்தபோது, அது ராகுல்காந்தியின் யூடியூப் சேனல் என்று நமக்குத் தெரியவந்தது. கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மோடி, எடியூரப்பாவைப் பற்றி ராகுல் பேசுகிறார். இந்த வீடியோ காட்சி, நாம் ஆய்வு செய்யும் வீடியோவுடன் அப்படியே ஒத்துப் போனது. வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆனால், முகநூல் ஹிந்து மீடியா பயன்படுத்திய அந்த வீடியோவை தேடினோம். அந்த வீடியோவில் ஹிந்துஸ்தான் நியூஸ் என்ற லோகோ இருந்தது. அதை வைத்துத் தேடிய போது சரியான முடிவு நமக்குக் கிடைக்கவில்லை. கடைசியில், அந்த வீடியோவில் இருந்த தொலைக்காட்சியின் லோகோவை படமாக எடுத்து #yandex இணையதளத்தில் தேடினோம். நம்முடைய முயற்சிக்கு பலன் கிடைத்தது.
அந்த லோகோ படம் தொடர்பாக நமக்கு நிறைய வீடியோக்கள் கிடைத்தன. அந்த லிங்கில் ஒன்றை கிளிக் செய்து பார்த்தபோது, Politicalhunt என்ற யூடியூப் சேனல் ஹிந்துஸ்தான் நியூஸ் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வந்தது தெரிந்தது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்பேரில், மீண்டும் கூகுளில் Politicalhunt என்று தேடினோம். அப்போது, நமக்கு அந்த சேனலின் யூடியூப் வீடியோக்கள் முழுவதும் கிடைத்தன. விவரப் படம் கீழே தரப்பட்டுள்ளது.

அந்த பக்கத்தில், குறிப்பிட்ட வீடியோவை நாம் தேடினோம். கடந்த 2018, மார்ச் 27ம் தேதி அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்தது. அதில், சரியாக, 2.10 விநாடியில் ராகுல் பேசுவதும், நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் உள்ளதும் ஒத்துப் போகிறது. அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளோம். மேலும், இரண்டு வீடியோவில் உள்ள காட்சியும் ஒன்றாக இருப்பதற்கான ஆதார புகைப்படத்தை கீழே தரப்பட்டுள்ளது.

பொலிட்டிக்கல் ஹண்ட் வெளியிட்ட வீடியோவின் காட்சி.

முகநூல் ஹிந்து மீடியா வெளியிட்ட வீடியோவின் காட்சி.
ஊழல்வாதியான எடியூரப்பாவை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி மோடி உபதேசம் செய்கிறார் என்று ராகுல்காந்தி பேசியதை, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுவிடுவார்கள் என்று கூறியதாக விஷமத்தனமாக பிரசாரம் செய்திருப்பது இதன் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் போட்டோகார்டு, பின்னணி இசை மற்றும் ஹிந்துஸ்தான் நியூஸ் லோகா ஆகியவற்றை அப்பட்டமாக பயன்படுத்தியுள்ளனர்.
மொழி புரியாத காரணத்தால், மேலே நிலைத்தகவலில் சொல்லப்பட்டுள்ள செய்தியை மட்டும் படித்துப்பார்த்து, அதை உண்மை என்று நம்பி ஆயிரக் கணக்கானோர் ஷேர் செய்திருப்பது உறுதியாகி உள்ளது.
நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) இந்த வீடியோவை வெளியிட்டது புதிய தலைமுறை இல்லை.
2) இரண்டு ஊடக சேனல்களின் வீடியோ, ஆடியோ தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3) மொழி பெயர்ப்பில், காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பது பற்றி ராகுல் எதுவும் பேசவில்லை.
4) ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில், சாம்ராஜ்நகரில் 2018, மார்ச் 27ம் தேதி ராகுல் காந்தி பேசிய வீடியோ காண கிடைக்கிறது.
5) PoliticalHunt யூடியூப் சேனல் பக்கத்தில் இருந்து உண்மை வீடியோவை எடுத்து, எடிட் செய்துள்ளனர்.
6) தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், ராகுல் பேசியதாகக் கூறப்படுவது கடந்த 2018 மார்ச்சில், கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று எனவும், புதிய தலைமுறை வெளியிட்டது இல்லை எனவும் உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
