
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, நிதி உதவி செய்வதாக அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதுபற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியுடன் மாஃபா பாண்டியராஜன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு
இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை” என்று நீண்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தமிழ்நாடு நாடார் சங்கம் முத்துரதமேஷ்நாடார் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 ஜூன் 15ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. கல்விக்கட்டணம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் யாருக்காவது பயன் தரும் என்று நினைத்து பலரும் இதை ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது.
இது போன்ற அறிவிப்பை மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டாரா, செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
எனவே, அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து அதன் மீது “FAKE” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மற்றொரு பதிவில், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தகவலை காப்பி செய்து அதன் கீழ், “மேலே தரப்பட்ட தகவலானது முற்றிலும் தவறானது. கடந்த சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில் ஒரு சில சமூக விரோதிகளால் இத்தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகவல் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே, இத்தகவலை சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் என மாஃபா அறக்கட்டளையின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு மாஃபா அறக்கட்டளை” என்று குறிப்பிடப்பட்டு புகைப்பட பதிவாக பகிர்ந்திருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவு தவறானது என்று உறுதி செய்துள்ளார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கல்வி அறக்கட்டளை தொடங்கி நிதி உதவி செய்வதாக பரவும் பதிவு தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Title:முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கல்வி அறக்கட்டளை தொடங்கி நிதி உதவி செய்வதாக அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
