முரசொலி ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

முரசொலி நிலம் பிரச்னையில் ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

PMK 2.png
Facebook LinkArchived Link

டாக்டர் ராமதாஸ் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை கொலாஜ் செய்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், டாக்டர் ராமதாஸ் படத்துக்கு மேல் “முரசொலி ஆதாரம் இல்லை, 2010ல் அதிமுக அறிக்கையில் இருந்ததால் சொன்னேன் – ராமதாஸ் அந்தர்பல்டி” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது.

கீழே திரைப்பட காட்சிப் பகுதியில், “இப்ப ஆதாரம் இல்லாம அசிங்கப்பட்டு நிக்கிறியே பெரியைய்யா” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Writer மொள்ளமாரி தாஸ் (மாரி தாஸ்) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Savasaami Sivaa Sivaa என்பவர் நவம்பர் 28, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையே அறிக்கைப் போர் நடந்து வந்தது. டாக்டர் ராமதாஸ் அறிக்கை அடிப்படையில், இது குறித்து தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

vikatan.comArchived Link 1
dailythanthi.comArchived Link 2

புகார் தொடர்பான விசாரணையின்போது ஆஜரான முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி டாக்டர் ராமதாஸ் மற்றும் சீனிவாசன் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார். மேலும், டாக்டர் ராமாஸ் 1000 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார் என்றும் குற்றச்சாட்டை கிளப்பினார். இதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோருக்கு தி.மு.க தரப்பிலிருந்து அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக பா.ம.க வழக்கறிஞர் கே.பாலு மூலமாக இதற்கு நீண்ட விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல், 1000ம் ஏக்கர் நிலம் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ம.க தரப்பில் வழக்கறிஞர் பாலு நோட்டீசை அனுப்பினார்.

dinakaran.comArchived Link 1
minnambalam.comArchived Link 2
jayanewslive.comArchived Link 3

உண்மை இப்படி இருக்க, “முரசொலி நிலம் தொடர்பாக கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்” என்று பதிவிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு பேட்டியும் அவர் அளிக்கவில்லை என்பது தெரிந்தது. 

PMK 3.png
Archived LinkSearch Link

டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக உள்ளவர். அதில் ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு நவம்பர் 28ம் தேதி வெளியாகி இருந்தது. அதனால், 28, 27 தேதிகளில் கருத்து தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். அதில், முரசொலி பற்றி அவர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. 27ம் தேதி பி.எஸ்.என்.எல் பற்றியும் 29ம் தேதி பசுமைத் தாயகம் பற்றிய பதிவையும் வெளியிட்டிருந்தார். 28ம் தேதி எந்த ட்வீட்டும் இல்லை.

இது குறித்து பா.ம.க-வின் மூத்த வழக்கறிஞர் கே.பாலுவைத் தொடர்புகொண்டு பேசினோம். “ஆர்.எஸ்.பாரதி உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனவே, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்று நோட்டீஸ் அனுப்பி ஒரு சில நாட்கள்தான் ஆகிறது. டாக்டர் ஐயா அவர்கள் எந்த ஒரு பேட்டியும் அளிக்கவில்லை. ட்விட்டரில் எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை. அப்படி இருக்கும்போது சமூக ஊடகங்களில் தவறான கருத்து பரவுகிறது என்றால் அது வதந்திதான்” என்றார்.

நம்முடைய ஆய்வில்,

டாக்டர் ராமதாஸ் முரசொலி நிலம் தொடர்பாக ஆதாரம் இல்லை என்று எந்த ஒரு பேட்டியும் அளிக்கவில்லை.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் முரசொலி பற்றி பதிவிடவில்லை.

டாக்டர் ராமதாசின் வழக்கறிஞர் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “முரசொலி ஆதாரம் இல்லை” என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் படம் மற்றும் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:முரசொலி ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False