ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஜக்கி வாசுதேவ்? – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம் சமூகம்

பிரபல யோகா குரு ஜக்கி வாசுதேவ் ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Sadguru 2.png

Facebook Link I Archived Link

ஜக்கி வாசுதேவ் உடல் நலக் குறைவு காரணமாகப் படுக்கையில் நினைவிழந்த நிலையில் இருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதனுடன், “ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாக சத்குரு ஜக்கி வாசுதேவ்! தீவிர சிகிச்சை!” தலைப்பு ஒன்று உள்ளது. அதன் கீழ், 2019 ஜூலை 28 என்று தேதியைக் குறிப்பிட்டிருந்தனர்.

நிலைத் தகவலில், “வெள்ளையங்கிரி மலை யானை கூட்டம் சற்று மகிழட்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை, Karaiyil Irunthu என்று ஃபேஸ்புக் பெயர் கொண்டவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூலை 29ம் தேதி பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இந்த தகவலைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் ஜக்கி வாசுதேவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தில் உள்ள செய்தி உண்மையா என்று கண்டறிய கூகுளில் தலைப்பை டைப் செய்து தேடினோம். அப்போது, times tamil news என்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டது நமக்குத் தெரியவந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived Link

அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், “பல்வேறு யோகா மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜக்கி வாசுதேவ் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு ஒரு சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது ஜக்கி வாசுதேவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் கிடைத்தது. இதனால், அவரது பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜக்கி வாசுதேவுக்கு என்ன ஆனது என்று பலரும் பதற்றம் அடைந்தனர். இதனை சமாளிக்க ஜக்கி வாசுதேவ் தன்னுடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவிட்டார்.

Sadguru 3.png

தனக்கு ஆஸ்திரேலிய ஹேய் ஃபீவர் வந்துள்ளதாகவும், ஆனால் அனைத்து நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளதாகவும் ஜக்கி தெரிவித்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

முதல் பத்தியில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வீடியோவில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளதாக ஜக்கி கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். படுத்த படுக்கையாக இருக்கிறார், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றால் எப்படி ஜக்கி பேச முடியும் என்று சந்தேகம் வந்தது. அதேபோல், செய்தியில் எங்கேயும் படுத்தபடுக்கையாக இருக்கிறார் என்று இல்லை. ஆனால், அவருக்கு வந்தது சாதாரண காய்ச்சல்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், வாசகர்களை கவர தலைப்பில் தவறான தகவல் அளித்திருப்பதும், செய்தியில் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்திருப்பதும் தெரிந்தது.

Sadguru 4.png

இதனால், ஜக்கி வாசுதேவ் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில், ஜூலை 27, 26 ஆகிய தேதிகளில் உடல்நலம் குறித்து எந்த ஒரு வீடியோவும் வெளியிட்டது போல இல்லை. தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆய்வு செய்தபோது, அந்த வீடியோ கிடைத்தது.

Archived Link

வீடியோவின் தொடக்கத்தில் ஸோஃபா ஒன்றில் தலை சாய்த்து, தளர்ந்த நிலையில் அமர்ந்திருப்பது போல் உள்ளது. சில விநாடிகளில் ஜக்கி வாசுதேவ் பேசுகிறார். 3.07 நிமிடம் அந்த வீடியோ ஓடுகிறது.

‘’நான் இப்போது மெல்போர்னில் இருக்கிறேன். எனக்கு ஆஸ்திரேலியன் ஹே ஃபீவர் வந்துள்ளது.

இந்த மாதிரியான விஷயங்கள் உங்களை படுக்கையில் கிடத்திவிடலாம். ஆனால், நான் எந்த ஒரு நிகழ்ச்சியையும் மிஸ் செய்யவில்லை… இன்றைக்கு ஐந்து மணி நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வந்துள்ளேன். நாளை நடக்கும் நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்க உள்ளேன். நாம் தவறவிட்டது கோல்ஃப் விளையாட்டு மட்டுமே!

உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன், இந்த 38 ஆண்டுகளில் எனக்கு உடல்நலம் குறைவு என்று எந்த ஒரு நிகழ்ச்சியையும் நான் ரத்து செய்தது இல்லை. எனக்கு எந்த உடல்நலக் குறைவும் வந்தது இல்லை. காய்ச்சல், ஃப்ளு போன்ற எதுவும் என்னுடைய பணியை செய்ய விடாமல் தடுத்தது இல்லை” என்று பேசுகிறார்.

தொடர்ந்து தேடியபோது, நான் நலமுடன் உள்ளேன் என்று சத்குரு கூறியதாக தினமலர் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. அதில், ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் சென்றதாகவும் ஜூலை 31ம் தேதி இந்தியா திரும்புகிறார் என்றும் ஊடகத் தொடர்பு நிர்வாகி கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived Link

இதன் மூலம், ஜக்கி வாசுதேவுக்கு வந்திருப்பது வெறும் காய்ச்சல் மட்டுமே… படுத்த படுக்கையாக கிடக்கிறார், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் எல்லாம் உண்மை இல்லை என்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,

சத்குரு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று படுத்த படுக்கையாக இருக்கும் அளவுக்கு இல்லை… 

நிகழ்ச்சிகள் ஏதும் ரத்து செய்யப்படவில்லை, நலமாக இருக்கிறேன் என்று ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட வீடியோ கிடைத்துள்ளது.

இது தொடர்பாக தினமலர் வெளியிட்ட செய்தி கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஜக்கி வாசுதேவ் ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் பொய்யானது, ஜக்கி வாசுதேவ் உடல்நிலை பாதிப்பை மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஜக்கி வாசுதேவ்? – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •