அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு குற்றவாளியா சாத்வி பிரக்யா?

அரசியல் சமூக ஊடகம்

‘’அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதி சாத்வி பிரக்யாவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

சாத்வியை போலீசார் அழைத்து வரும் படத்தின் மீது, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங்குக்கு போபாலில் போட்டியிட பா.ஜ.க சீட் வழங்கியுள்ளது.

தீவிரவாதிக்கு எம்.பி சீட் … இவங்கதான் தீவிரவாதத்தை ஒழிக்குறவங்க பார்த்துக்கோங்க மக்களே என்று எழுதியுள்ளனர். சாத்வி பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர் என்பதாலும் பா.ஜ.க எதிர்ப்பு மன நிலை காரணமாகவும் இதை பலரும் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில், 2008ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பிரக்யா சிங் முறையீடும் செய்துள்ளார். 2017ம் ஆண்டு அவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து 9 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பிரக்யா சிங். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்தநிலையில், சமீபத்தில் பிரக்யா சிங் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்கு போபால் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு நிலுவையில் உள்ள பிரக்யா சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பல விமர்சனங்களை எழுப்பியது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

பிரக்யா சிங் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவருக்கான ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ‘பிரக்யா சிங் வேட்பு மனுவை ஏற்பது, நிராகரிப்பது தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது’என்றது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு என்பது 2007ம் ஆண்டு நடந்தது. இதில், சாமியார் அசீமானந்தா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்டது. இதில், சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 7 பேரை விடுவித்தது ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம். மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர்.  

இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள்:

1) பவேஷ் படேல்

2) தேவேந்திர குப்தா

3) சுனில் ஜோஷி (2007ம் ஆண்டு இறந்துவிட்டார்)

விடுதலை செய்யப்பட்டவர்கள்:

4) லோகேஷ்

5) சந்திரசேகர்

6) சுவாமி அசீமானந்தா

7) ஹர்ஷத் சோலங்கி

8) கேகுல் குமார்

9) முகேஷ் வசானி

10) பாரத் பாய்

மேலும் மூன்று பேர் தலைமறைவாகிவிட்டனர். இந்த வழக்கு விசாரணை காலத்தில் சாத்வி பிரக்யா மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்தார். அதனால், அவர் தலைமறைவானவராக கருத முடியாது. இதன் மூலம் அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில், சாத்வி பிரக்யா சிங் பெயர் இல்லை என்பது தெளிவாகிறது. அஜ்மீர் குண்டுவெடிப்பு தீர்ப்பு தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

உண்மை இப்படி இருக்க, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் சிக்கிய தீவிரவாதி பிரக்யா சிங் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு குற்றவாளியா சாத்வி பிரக்யா?

Fact Check By: Praveen Kumar 

Result: False