அய்யாக்கண்ணுவை டெல்லியில் போராடத் தூண்டியது திமுக, காங்கிரஸ் கட்சிகளா?

அரசியல் சமூக ஊடகம்

தங்களை டெல்லியில் போராடத் தூண்டியதே தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…

தகவலின் விவரம்:

? விதி விளையாடுது . ??

Archived link

மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராட இயக்கியதே தி.மு.க, காங்கிரஸ்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சி நியூஸ் கார்டில் செய்தி வெளியாகி உள்ளது. எப்போது இந்த பேட்டி வெளியானது என்று குறிப்பிடவில்லை. நாச்சியார் தமிழ் உள்ளிட்ட பல ஃபேஸ்புக் குரூப்கள், தனிப்பட்ட நபர்கள் இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதாலும் தி.மு.க – காங்கிரஸ் எதிர்ப்பு நிலை உள்ளவர்களாலும் இந்த பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் இவர் தலைமையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். எலிக்கறி உண்பது தொடங்கி, சிறுநீர் அருந்துவது, நிர்வாணப் போராட்டம் என்று தினமும் விதவிதமாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 41 நாட்கள் வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டு விவசாயிகள் தமிழகம் திரும்பினர். இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்தநிலையில், வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடப் போவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.

Archived link

அதற்குள்ளாக, பா.ஜ.க தலைவர் அமித் ஷாவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்ததன் அடிப்படையில் மோடிக்கு எதிராகப் போட்டியிடப் போவது இல்லை என்று அறிவித்தார் அய்யாக்கண்ணு. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இதைத் தொடர்ந்து தி.மு.க – காங்கிரஸ் எதிர்ப்பாகவும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவும் அய்யாக்கண்ணு செயல்படுகிறார் என்று பல மீம்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின.

அய்யாக்கண்ணுவுக்கு எதிராக பலரும் சமூக ஊடகங்களில் ஆதரவும் எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில்தான், “தங்களை டெல்லியில் போராடத் தூண்டியதே தி.மு.க தான்” என்று அய்யாக்கண்ணு சொல்லியதாக செய்திகள் பரவின.

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அப்படி ஏதாவது பேட்டி அளித்துள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

AIYYAKANNU 2.png

நியூஸ்7 பிரேக்கிங் செய்தி போட்டோ கார்டில் இந்த தகவல் பரவியுள்ளது. எனவே, அப்படி ஏதாவது நியூஸ்7-ல் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

AIYYAKANNU 3.png

பொதுவாக, நியூஸ்7 வெளியிடும் பிரேக்கிங் நியூஸ் கார்டில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த பதிவில் அது இல்லை. அதனால், இந்த பதிவு வெளியான ஏப்ரல் 14 மற்றும் அதற்கு முன்பு வாரம் ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு பிரேக்கிங் கார்டும் கிடைக்கவில்லை. மேலும், நியூஸ்7 வெளியிடும் பிரேக்கிங் செய்தி போட்டோ கார்டு டிசைன் வேறாக இருந்தது. தேர்தல் தொடர்பான செய்திகள் எல்லாம் தேர்தல் பேர் என்ற பெயரிலேயே வெளிவந்துள்ளதும் தெரிந்தது.

பிரேக்கிங் செய்திகள் போட்டோ கார்டு மாதிரி:

AIYYAKANNU 4.png

தேர்தல் செய்திகளுக்கான போட்டோ கார்டு மாதிரி:

AIYYAKANNU 5.png

எதிராக என்ற வார்த்தை எதிரா என்றும், காங்கிரஸ் என்பது காங்கிரெஸ் என்றும் இந்த போட்டோ கார்டு பிழையோடு இருந்தது. இதன் மூலம் இந்த பிரேக்கிங் கார்டு நியூஸ்7 வெளியிட்டது இல்லை என்பது தெளிவானது.

AIYYAKANNU 6.png

இது குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பற்றி அவர் கூறியதாவது:

தி.மு.க, காங்கிரஸ் கட்சி எங்களை இயக்கியதாக நான் கூறியது போன்று பரவும் செய்தி தவறானது. டெல்லியில் நாங்கள் போராடும்போது ஆடி கார் அய்யாக்கண்ணு, 250 ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி கடன் இருக்கிறது அதனால்தான் போராடுகிறார் என்றார்கள்.

எனது பெயரில் ஆடி கார் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். என் பெயரில் 30 ஏக்கர் உள்ளது. 250 ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால், பத்திரம் எழுதி கொண்டு வாருங்கள் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிடுகிறேன், சொசைட்டியில் 97 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோடிகளில் கூட வேண்டாம், ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்கிறது என்று நிரூபித்தால் கூட தூக்குப்போட்டு தொங்குகிறேன் என்றேன். அதன் பிறகு ஒருவரும் பேசவில்லை.

இப்போது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என் படத்தைப் போட்டு, என்னைத் தூண்டி விட்டதாக செய்திகள் பரப்புகிறார்கள். பல முறை கூறிவிட்டேன். டெல்லிக்கு நாங்கள் சென்று போராடிய போது பிச்சை எடுத்துத்தான் சோறு சாப்பிட்டோம். ஸ்டாலின் அய்யாவோ, கனிமொழியோ, காங்கிரஸ்காரர்களோ ஒரு பைசா கூட எங்களுக்குத் தரவில்லை. இப்படி இருக்கும்போது அவர்கள் தூண்டிவிட்டார்கள் என்று அபாண்டமான பொய்யை சொல்கிறார்கள். எப்படித்தான் இப்படிச் சொல்கிறார்களோ தெரியவில்லை.

இப்போது கூட அமித்ஷாவை நானாக சென்று பார்க்கவில்லை. 2019 மார்ச் 13ம் தேதி எங்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்களை நிறைவேற்றினோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்தியில் ஆட்சிக்கு வரக் கூடிய இரண்டே இரண்டு கட்சிகளால்தான் முடியும். நீங்கள் இரண்டு பேரும் எங்களை அழைத்துப் பேசி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று தீர்மான நகலை அனுப்பினோம்.

காங்கிரஸ் தரப்பில் எங்களைத் தொடர்பு கொண்டவர்கள் தகுந்த ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். பா.ஜ.க-வில் இருந்து சந்திக்க எங்களை நேரில் அழைத்தனர். அப்போதும் கூட தனி ஆளாக வர முடியாது. நீங்கள் வேண்டுமானால் அழைத்துச் செல்லுங்கள் என்றோம். நிர்வாகிகள் எங்கள் 9 பேரை அழைத்து சென்று அமித்ஷாவை சந்திக்க வைத்தனர். அப்போது கூட, நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம். அழைத்து சந்தித்ததில் மன நிறைவு, அதனால் வாரணாசியில் போட்டியிடுவதை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம், என்றோம்.

ஏப்ரல் 8ம் தேதி டெல்லியில் சந்தித்தோம், 10ம் தேதி திருச்சியில் மீண்டும் சங்க செயற்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். அதில் முக்கியமானது எந்த கட்சியையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். விவசாயிகள் தங்கள் விருப்பம்போல எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டுக்கொள்ளலாம் என்றோம். இப்படி இருக்கும்போது எப்படித்தான் தவறான செய்தியை பரப்புகிறார்களோ?

இந்த வதந்தி தொடர்பாக தமிழக டி.ஜி.பி-ஐ சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன். அதேபோல், திருச்சி, சென்னை மாநகர காவல் சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

எங்களை தி.மு.க-வினர் மிரட்டிவருவதாகவும் வதந்தி பரவுகிறது. ஒருவர் கூட தி.மு.க-வில் இருந்து எங்களை மிரட்டவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(இந்த பேட்டியின் விவரம் ஆதாரத்திற்காக, அய்யாக்கண்ணு அவர்களின் அனுமதியுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது)

இதுபற்றி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அய்யாக்கண்ணு புகார் அளித்தது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், தங்களைப் போராடத் தூண்டியதே தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிதான் என்று அய்யாக்கண்ணு கூறியதாக வெளியான பதிவு பொய்யானது, விஷமத் தனமாக சித்தரிக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:அய்யாக்கண்ணுவை டெல்லியில் போராடத் தூண்டியது திமுக, காங்கிரஸ் கட்சிகளா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

3 thoughts on “அய்யாக்கண்ணுவை டெல்லியில் போராடத் தூண்டியது திமுக, காங்கிரஸ் கட்சிகளா?

  1. I am sorry for sharing the post which is found to be not factual. I regret for the same.

  2. மதிப்பிற்குரிய அய்யாகண்ணு அவர்களே, நான் தவறான செய்தியை பகிர்ந்ததற்காக வருந்துகிறேன். மன்னிக்கவும். இனிமேல் தவறு நேராமல் இருக்க மிக தீவிரமாக செயல்படுகிறேன். நன்றி.

Comments are closed.