
‘’2020 ஜூன் 1ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக்கட்டணம் உயர்த்தப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவில், பாலிமர் டிவி வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’ஜூன் 1ம் தேதி முதல் ஒவ்வொரு முறை எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதும் ரூ.25 சேவைக்கட்டணம் நிர்ணயித்துள்ளது,’’ எனக் குறிப்பிடப்படுகிறது.
எனவே, இது உண்மைதான் என்று நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ செய்தி பாலிமர் டிவி வெளியிட்டதுதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், இது எப்போது வெளியான செய்தி என்பதில் பெரும் சந்தேகம் எழுந்தது. காரணம், தற்போது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி இந்தியாவில் உள்ள வங்கிகள் பலவும் ஏடிஎம் பரிவர்த்தனை, வங்கிப் பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த பல வகையான கட்டணம், கட்டுப்பாடுகள் போன்றவற்றை தளர்வு செய்து அறிவித்து வருகின்றன. இந்த சூழலில், எஸ்பிஐ வங்கி இப்படியான அறிவிப்பை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை.
மேலும், பாலிமர் டிவியில் வெளியான செய்தியை Helo App மூலமாக மறுபகிர்வு செய்துள்ளனர். எனவே, இது சந்தேகத்தை அதிகரிப்பதாக உள்ளது. Helo App செயலியை பயன்படுத்தி, பழைய உறுதிப்படுத்தப்படாத செய்தியை சிலர் புதியதுபோல பகிர்ந்து குழப்பம் விளைவிக்கின்றனர். அதில் ஒன்றுதான் மேற்கண்ட செய்தியும்.
ஆம். இந்த செய்தி 2017ம் ஆண்டில் வெளியானதாகும்.

இதுபற்றி பல ஊடகங்களிலும் 2017ம் ஆண்டில் செய்தி வெளியானது. அத்துடன் கடும் எதிர்ப்பும் எழுந்ததால், இதில் உண்மையில்லை என்று கூறி அப்போதே எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்திருக்கிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) 2017ம் ஆண்டு இப்படியான தகவல் வெளியானது. பிறகு, இதில் உண்மையில்லை என்று கூறி எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்தது.
2) இதனை கவனிக்காமல் பழைய செய்தியை எடுத்து சிலர் வேண்டுமென்றே தற்போது நடைபெறுவது போல தவறான தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தி தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ( ) தகவல் தெரிவியுங்கள்.

Title:2020 ஜூன் முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறதா?
Fact Check By: Pankaj IyerResult: False
