மகாராஷ்டிராவில் பசுவுக்கு வெடி மருந்து உணவு கொடுக்கப்பட்டதா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

மகாராஷ்டிராவில் கோதுமை மாவில் வெடி மருந்தை வைத்து பசுவுக்கு கொடுக்கப்பட்டதாக பசுவின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

வாய்ப்பகுதி சிதைந்து காணப்படும் பசு ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடுத்து ஒரு கொடூரம் #மகாராஷ்டிராவில்.. கோதுமை மாவில் வெடிமருந்து வைத்து கொடுத்த மர்ம மனிதர்கள்.. பெரும்பாலும் அந்த கூட்டத்துக்கு சில விலங்குகளை சுத்தமா பிடிக்காது.. 1, மாடு – பசு, காளை இரண்டுமே தெய்வமா நாம வணங்குவதால்.. 2, யானை – விநாயகர் வடிவம் என்பதால்.. அதனால அவைகளை கொடுமை படுத்தி மகிழும் குரூர புத்தி…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை ஆ.பிரசாந்த் பண்ருட்டி பாமக என்பவர் 2020 ஜூன் 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

யானையைத் தொடர்ந்து பசு ஒன்றை இஸ்லாமியர்கள் வெடி வைத்து தாக்கியது போன்ற தோற்றத்தை இந்த பதிவில் உருவாக்கியுள்ளனர். கேரளாவில் யானை வெடி மருந்து நிறைந்த அன்னாசி பழத்தை உண்டது தற்செயலானது என்று மத்திய அரசே விளக்கம் அளித்த பிறகும் கூட அதை ஏற்றுக்கொள்ள சிலர் தயாராக இல்லை என்பதையே இந்த பதிவு காட்டுகிறது.

மகாராஷ்டிராவில் பசுவுக்கு வெடி மருந்து அளிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊகடம், செய்தி ஊடகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி அளிக்கப்பட்ட மனு ஒன்றில் இந்த படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. எனவே, கேரள யானை சம்பவத்துக்குப் பிறகு இது நடைபெறவில்லை என்பது தெரிந்தது.

Facebook LinkArchived Link 1change.orgArchived Link 2

உண்மையில் இந்த பசுவுக்கு என்ன ஆனது, இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று தேடினோம். நீண்ட தேடலுக்குப் பிறகு 2015ம் ஆண்டு ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் இந்த பசு பற்றிய தகவல் கிடைத்தது. அதில், ராஜஸ்தானில் குப்பையில் பசு ஒன்று மேய்ந்த கொண்டிருந்ததாகவும் அப்போது அதிலிருந்த வெடி மருந்து வெடித்ததில் அதன் வாய் சிதறியதாகவும், அந்த பசு இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்கள் அதில் பயன்படுத்தியிருந்தனர். இதன் மூலம் ராஜஸ்தானில் 2015ல் நடந்த சம்பவத்தை இப்போது நடந்தது போல பதிவிட்டிருப்பது தெரிந்தது.

Facebook LinkArchived Link

இது தொடர்பாக செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று தேடினோம். ராஜஸ்தான், ராய்ப்பூர், பசு உள்ளிட்ட கீ வார்த்தைகளை வைத்து தேடிப் பார்த்தோம். அப்போது ஆங்கிலத்தில் ஒரு உண்மை கண்டறியும் நிறுவனம் வெளியிட்ட தகவல் கிடைத்தது. அதிலும் நாம் கண்டறிந்த ஃபேஸ்புக் பதிவை ஆதாரமாக காட்டியிருந்தனர். மேலும், அதனுடன் பத்திரிகா என்ற இந்தி ஊடகம் 2015ம் ஆண்டு வெளியிட்ட செய்தியையும் வெளியிட்டிருந்தனர். அதில், இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ராய்ப்பூர் அருகே நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த இரண்டு நிகழ்வும் ஒன்றுதான் என்பது உறுதியானது.

patrika.comArchived Link

கேரளாவில் யானை மீதான தாக்குதல் சர்ச்சைக்குப் பிறகு வேறு எங்காவது பசு மீது தாக்குதல் நடந்ததாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது ஹிமாச்சல பிரதேசத்தில் தன்னுடைய கோதுமை வயலில் இறங்கி நாசம் செய்தது என்பதற்காக பசு ஒன்றுக்கு கோதுமை மாவுடன் வெடி மருந்து வைத்து கொடுத்ததாகவும் பசுவுக்கு வாய் பகுதி சேதமடைந்ததாகவும் செய்தி கிடைத்தது. ஆனால், இந்த சம்பவத்திற்கும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்திற்கும் தொடர்பில்லை.

நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், மகாராஷ்டிராவில் பசுவுக்கு வெடி மருந்து கொடுத்து வாய்ப்பகுதியை சிதைத்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மகாராஷ்டிராவில் பசுவுக்கு வெடி மருந்து உணவு கொடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False