சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி: உண்மை என்ன?

Coronavirus உலகச் செய்திகள் வர்த்தகம்

‘’சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி,’’ என்று கூறி வைரலாக பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

மேற்கண்ட செய்தி உண்மையா என்று கண்டறியும்படி, நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டார்.

உண்மை அறிவோம்:
உலகம் முழுக்க, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெரும்பாலான விமான நிலையங்களும் தற்காலிக மூடப்பட்டன. பல்வேறு நாடுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தன.

தற்சமயம், படிப்படியாக, கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், சுமார் 72 நாடுகளின் பெயரை பட்டியலிட்டு, அவை இந்த தேதிகளில் விமான சேவையை தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன. ஆனால், இது உண்மை என்பதைவிட சந்தேகத்திற்கு இடமான தகவலே அதிகம் உள்ளதாக, தெரிகிறது. 

உதாரணமாக, இவர்கள் குறிப்பிடும் லெபனான் நாட்டில் கொரோனா ஊரடங்கு முடிந்து மறு விமான சேவை எப்போது தொடங்குகிறது என்று பார்க்கலாம். அந்நாட்டில் ஜூன் 21, 2020 விமான சேவைகள் மறுபடியும் தொடங்கப்படலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஃபேஸ்புக் பதிவில், ஜூலை 15ல் லெபனான் விமான சேவையை தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது தவறான தகவலாகும்.

இதுபோலவே ஒவ்வொரு நாட்டின் விமான சேவை தொடங்கப்படும் தேதி வெவ்வேறாக உள்ளது. நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடுவது போல இல்லை.

பஹ்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி மீண்டும் விமான சேவை திறக்கப்பட்டு, மே 1ம் தேதி வரை வெளிநாட்டுப் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்சமயம், பஹ்ரைன் குடிமக்கள் மட்டுமே உள்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு, அவசர விமான சேவை நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த ஃபேஸ்புக் பதிவில் ஜூன் 10, 2020ல் பஹ்ரைனில் விமான சேவை தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல, கத்தார் நாட்டிலும் ஜூன் 10ல் விமான சேவை தொடங்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பற்றி கூறியுள்ள தகவலும் தவறு. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இவர்கள் குறிப்பிட்டுள்ள அங்கோலா, அல்ஜீரியா, அர்ஜெண்டினா, அர்மீனியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, சீனா, கனடா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளிலும் தற்சமயம் கடும் கட்டுப்பாடுகளுடன் விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால், இவற்றில் பல நாடுகள் படிப்படியாக விமான சேவையை நிறுத்தி வைக்கவும் பரிசீலித்து வருகின்றன.

இதுபற்றி Al Jazeera ஊடகம் விரிவான செய்திக்கட்டுரையே வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இன்னும் குறிப்பாக, இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, பிரிட்டனில் ஜூலை 15, 2020 அன்று விமான நிலையங்கள் திறக்கப்படுமா என்று பார்த்தால், அது ஏற்கனவே பயன்பாட்டில்தான் உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பிரிட்டன் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

அல்பேனியா, ஆஸ்திரியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் பற்றியும் இவர்கள் குறிப்பிடுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

அமெரிக்காவில் என்ன நிலவரம் என்று பார்த்தால், விமான சேவையை முழுவீச்சில் விரைவில் தொடங்க பரிசீலித்து வருகிறார்கள். குறிப்பிட்ட தேதி எதுவும் அறிவிக்கவில்லை. தற்சமயம், சில விமான நிலையங்கள் அவசர விமான சேவைகளை கையாண்டு வருகின்றன. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இறுதியாக, இந்தியாவில் விமான நிலையங்கள் திறப்பது பற்றி இவர்கள் குறிப்பிட்டுள்ள தேதி ஜூலை 10, 2020 ஆகும். ஆனால், இந்தியாவில் மே 25ம் தேதி முதலாகவே, விமான நிலையங்கள் திறக்கப்பட்டு விட்டன.

CNN LinkIndiaToday Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம், 

1) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உத்தேச அடிப்படையில் அவர்களாகவே ஒரு தேதியை குறிப்பிட்டுள்ளனர்.

2) உலக நாடுகள் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை. அத்தியாவசிய விமான சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

3) அத்தியாவசிய விமான சேவைகள் தவிர மற்றவை எதுவும் நடைபெறா வண்ணம் விமான சேவைகளை பல நாடுகளும் குறைத்து வைத்துள்ளன.

4) கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதால், தற்போது ஒவ்வொரு நாடும் விமான சேவையை முழு வீச்சில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே விமான சேவையை தொடங்கிவிட்டன. சில ஐரோப்பிய, ஆசிய நாடுகள் இன்னமும் விமான சேவையை தொடங்க மறுப்பு தெரிவித்தும் வருகின்றன. மேலும் சில நாடுகள் எப்போது தொடங்கும் என்றும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இவர்கள் குறிப்பிடும் தேதியில் விமான சேவையை அந்த நாடுகள் தொடங்கலாம் அல்லது தள்ளிப் போடவும் வாய்ப்புள்ளது.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பெரும்பாலும் தவறான தகவலே இடம்பெற்றுள்ளது என்பதால், அதன் மீது நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பொதுமக்களை குழப்பக்கூடிய தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். விமான சேவைகள் பற்றி அந்தந்த நாடுகள், விமான சேவை நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டுமே நம்புங்கள். இதுபோல மூன்றாம் தரப்பு நபர் பகிரும் தகவலை உண்மை என நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.

Avatar

Title:சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி: உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False