
துறையூர் அருகே சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலையை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

2019 பிப்ரவரி 21 தேதியிட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு மற்றும் செய்தியைப் பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “துறையூர் அருகே சீமானுக்கு சொந்தமான கள்ளச்சாராய ஆலைக்கு போலீசார் சீல்! மேனேஜர் தப்பி ஓட்டம்!” என்று இருந்தது. படத்தில் இருந்தவரை சீமானின் உறவினர் என்று குறிப்பிட்டிருந்தனர்.
செய்தியில், “துறையூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் இயக்கி வந்த போலி மதுபான ஆலையைக் கண்டுபிடித்த போலீசார்!” என்று தலைப்பிட்டிருந்தனர்.
இந்த பதிவை, Naveen Balaraman என்பவர் 2019 ஜூலை 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக கூறப்படும் நியூஸ் கார்டுக்கும் செய்திக்கும் வேறுபாடு இருப்பதைக் காண முடிந்தது. நியூஸ் கார்டில் சீமானுக்கு சொந்தமான கள்ளச்சாராய ஆலை என்று குறிப்பிட்டுள்ளனர். செய்தியில், நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் போலி மதுபான ஆலை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் யுஆர்எல் லிங்க் தலைப்பில், “துறையூர் அருகே நாம் தமிழர் இயக்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசர்!” என்று இருந்தது. இதில், கட்சியினர் என்பது இல்லை. ஒரே நிறுவனம் ஒரே நாளில் வெளியிட்ட செய்தியில் எப்படி வேறு வேறு தகவலைத் தெரிவிக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த செய்தியை உண்மையில் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று அதன் இணையதள பக்கத்தில் ஆய்வு செய்தோம். அப்போது, பிப்ரவரி 20ம் தேதி வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், “துறையூர் அருகே இயங்கி வந்த போலி மதுபான ஆலையைக் கண்டுபிடித்த போலீசார்!” என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதே தேதியில் இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அந்த ட்விட்டர் பதிவு படத்தை எடுத்து தலைப்பை எடிட் செய்திருப்பது தெரிந்தது.
நியூஸ் கார்டின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். அதன் பின்னணியில் வாட்டர் மார்க் லோகோ, டிசைன் இல்லை. இதனால் ஏதாவது ஒரு பழைய நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருக்கலாம். அல்லது போலி மது ஆலை தொடர்பாக வெளியிட்ட நியூஸ் கார்டையே எடிட் செய்திருக்கலாம் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் பழைய தகவல் என்பதால், நியூஸ் கார்டை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுடன், இந்த கார்டை ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில், நியூஸ் 7 வாட்டர் மார்க் லோகோ இல்லாதது தெரிந்தது.

மேற்கண்ட பதிவில் உள்ள புகைப்படத்தில் உள்ள நபரை சீமானின் உறவினர் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், போலீசாரைப் பார்த்தால் தமிழ்நாடு காவல் துறையினர் போல இல்லை. கேரளா போலீசார் போல இருந்தனர். அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். படத்தின் உண்மையான விவரம் கிடைக்கவில்லை. ஆனால், 2010ம் ஆண்டு வெளியான பதிவு ஒன்றில் அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது. இதன் மூலம் இந்த படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று உறுதியானது.

மேலும் அதை உறுதி செய்ய, இந்த நியூஸ் கார்டை, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டோம். இது எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்தனர்.
இந்த போலி மதுபான ஆலையை நடத்தியவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு என்று ஏதாவது செய்தி வந்துள்ளதா என்று தேடினோம். அப்போது தினமலர் வெளியிட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், அவர்களுடைய அரசியல் தொடர்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர்கள் நாம் தமிழர் கட்சியினராக இருந்திருந்தால் தினமலர் அதை மிகப்பெரிய செய்தியாக வெளியிட்டிருக்கும். இதேபோல், ஐஇ தமிழ் வெளியிட்ட செய்தியிலும் அவர்கள் அரசியல் பின்புலம் பற்றி குறிப்பிடவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு விஷமத்தனமானது பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலை?” – ஃபேஸ்புக் பகீர் தகவல்!
Fact Check By: Chendur PandianResult: False
