“கீழடியில் கிடைத்த சிவலிங்கம்..?” – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி!

சமூக ஊடகம் சமூகம்

கீழடியில் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி, ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வரலாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Lingam 2.png
Facebook LinkArchived Link

கீழடியில் எடுக்கப்பட்ட மண் பானை படம் உள்பட மூன்று படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக பானை, கர்ப்பகிரக அமைப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர். கீழ் பகுதியில், “உண்மை வெளிவரக்கூடாது, மீடியா கவனம் பெறக்கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை தோண்டிய அவலம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, எம்பிராட்டி திலகவதியார் சிவபூதகண வாத்திய சிவனடியார்கள் திருக்கூட்டம் என்ற ஃபேஸ்புக் குழு தன்னுடைய பக்கத்தில் 23 செப்டம்பர் 2019 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கீழடியில் இதுவரை நான்கு கட்ட ஆய்வுகள் முடிந்துள்ளன. அடுத்தகட்ட ஆய்வுக்குத் தமிழக அரசு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல், 4வது கட்டமாக நடந்த ஆய்வின் முடிவுகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ததில் அவை, 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், 880 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவலிங்கம் கிடைத்தது என்று எப்படிக் கூறுகிறார்களோ தெரியவில்லை.

VikatanArchived Link 

கீழடியில் எந்த ஒரு சமய அடையாளமும் கிடைக்கவில்லை என்ற தகவல் பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. “கீழடியில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைத்தது. இயேசு உருவம் கிடைத்தது” என்று ஆளாளுக்கு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், சிவ லிங்கம் கிடைத்தாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண் பானை படத்துடன் இரண்டு மத அடையாளம் உள்ள படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதன் உண்மையை அறிய ஆய்வு மேற்கொண்டோம்.

Lingam 3.png

முதலில் சிவ லிங்க படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு மேற்கொண்டோம். அப்போது அது கீழடியில் எடுக்கப்பட்டது இல்லை என்ற உண்மை தெரியவந்தது.

நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்றை தி இந்து 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட்டிருந்தது தெரிந்தது. அந்த செய்தியில், சென்னைக்கு வடக்கே உள்ள மீஞ்சூரில் பள்ளம் தோண்டியபோது சிவ லிங்கம் கிடைத்தது என்று குறிப்பிட்டு இருந்தனர். இது பல்லவர் ஆட்சிக் காலத்தைச் சார்ந்தது என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இதன் மூலம், இந்த புகைப்படம் கீழடியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

The HinduArchived Link

இரண்டாவதாக, தேங்காய் உடைத்து பூஜை செய்யும் படத்தை ஆய்வு செய்தோம். அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அந்த புகைப்படம் தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்ற உண்மை தெரியவந்தது.

2017ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இந்தியா டைம்ஸ் என்ற இணையதளம் இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டு இருந்தது. தி இந்து வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி இந்த இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது.

அந்த செய்தியில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவருடைய கனவில் சிவன் தோன்றி, அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும் அதை வெளியே எடுத்து அந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று கூறியதாகவும் மனோஜ் கூறி வந்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதியில் பூஜை செய்வது என்று இருந்துவந்த மனோஜ், 2017ம் ஆண்டு பள்ளம் தோண்டும் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து தேசிய நெடுஞ்சாலையை தோண்ட ஆரம்பித்தார். இதனால், போக்குவரத்து தடைப்பட்டது. மிக ஆழமாக தோண்டியும் அவருக்கு லிங்கம் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து வந்த போலீசார் மனோஜை கைது செய்தனர் என்று இருந்தது. இதன் மூலம், இரண்டாவது படமும் கீழடியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

India TimesArchived Link 1
The HinduArchived Link 2

நம்முடைய ஆய்வில்

கீழடியில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்ததில் அவை 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது தெரியவந்துள்ளது.

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கீழடியில் கிடைத்த சிவலிங்கம் என்று பகிரப்படும் படம் சென்னையை அடுத்த மீஞ்சூரில் கிடைத்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட பூஜை என்று பகிரப்பட்ட படம் தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கீழடியில் கிடைத்த சிவ லிங்கம் என்று பகிரப்பட்டு வரும் மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“கீழடியில் கிடைத்த சிவலிங்கம்..?” – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •