
சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
படத்தில் போலீஸ் தூக்கி கொண்டு வருவது சிவராஜ்சிங் சௌகான், பாஜக தலைவர்,.. மற்றொரு படம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
இந்த பதிவில், வெள்ள நீரில் சிவராஜ் சிங் சவுகானை போலீசார் தூக்கிக் கொண்டு வருவது போலவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ள நீரில் நடந்து செல்வது போலவும் 2 புகைப்படங்கள் ஒன்று சேர்த்து பகிரப்பட்டுள்ளன. இதனை Shabeer Sumaiya என்பவர் பகிர்ந்துள்ளார்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் உண்மையான ஒன்றா என கண்டறிய, கூகுள் இணையதளம் சென்று, இதனை பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இப்புகைப்படம் உண்மையான ஒன்றுதான் என்பதற்கான ஆதாரம் கிடைத்தது.

இதன்படி, மேற்கண்ட புகைப்படத்தில் சிவராஜ்சிங் தொடர்பாகக் கூறப்படும் சம்பவம் 2016ம் ஆண்டில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பெய்த கனமழைய பார்வையிட அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேரில் சென்றிருக்கிறார். அப்போது, அவருக்கு காலில் அடிபட்டுவிட்டதால், நடக்க முடியாமல் போகவே, அவரை போலீசார் சுமந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் உண்மைதான். இந்த புகைப்படம் அப்போதே சமூக ஊடகங்களில் வைரலாகி, காரசாரமாக விமர்சிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பிபிசி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதையடுத்து, ராகுல் காந்தி புகைப்படம் உண்மையா, அது எப்போது நிகழ்ந்தது என மீண்டும் கூகுளில், தேடிப் பார்த்தோம். அப்போது, அதுவும் உண்மையா படம்தான் என்பதற்கு, ஆதாரம் கிடைத்தது.

மேற்கண்ட புகைப்படத்தை கிளிக் செய்தபோது, அதில் ராகுல் காந்தி வெள்ளம் பாதிக்கப்பட்ட தபாரா என்ற பகுதியை பார்வையிட்ட புகைப்படம் இது எனக் கூறப்பட்டிருந்தது. அதுதொடர்புடைய மேலும் சில உண்மை புகைப்படங்களும் கிடைத்தன.

இதன்படி, தபாரா பகுதியில் நிகழ்ந்த வெள்ள சேதத்தை ராகுல் காந்தி 2008ம் ஆண்டு பார்வையிட்டபோது, மெட்ராஜ் ரெஜிமெண்ட் 3வது பட்டாலியன் சார்பாக, இப்புகைப்படங்கள் எடுத்து, வெளியிடப்பட்டுள்ளதாக, தெரியவருகிறது.

இதுபற்றிய செய்தி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், ராகுல் காந்தியின் புகைப்படம் மிகப் பழைய ஒன்று எனவும் தெரியவருகிறது. இவ்விரு புகைப்படங்களும் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டவை. எனினும், இதனை பகிர்ந்துள்ள நபர், வேறு எந்த தனிப்பட்ட கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ளது உண்மையான தகவல்தான் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையானதுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால், இப்பதிவை அரசியல் காரணங்களுக்காகக் குறிப்பிட்ட நபர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அது பலராலும் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருவதாக, உணர முடிகிறது.

Title:சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Parthiban SResult: True
