ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தொடர்பு உள்ளது என்பது போன்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ஆருத்ரா நிதி நிறுவன மோசடி; அண்ணாமலைக்கு தொடர்பு? பொதுமக்களிடம் 2500 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா நிதி நிறுவன நிர்வாகிகளிடம் தமிழக பாஜக தலைவர் ரூ.100 கோடி பணம் பெற்றதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு; தங்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை டெல்லியில் தங்க வைத்து அண்ணாமலை பாதுகாப்பு வழங்குவதாகவும் பொது மக்கள் அதிருப்தி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை ஜாஷ்வா மகன் ஆசீர் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 27ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இதே போன்று ஜூனியர் விகடனும் இப்படி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளதாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், "ஆருத்ரா நிதி நிறுவன மோசடி; அண்ணாமலைக்கு பங்கு 100 கோடி? பொது மக்களிடம் இருந்து 2500 கோடி ரூபாய் மோசடி செய்த, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான ஆருத்ரா நிதி நிறுவன நிர்வாகிகளிடம் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.100 கோடி அன்பளிப்பு பெற்றதாக பரபரப்பு தகவல்; வழக்கிலிருந்து குற்றவாளிகளை தப்ப வைப்பதாக அண்ணாமலை முயற்சிப்பதாக பொது மக்கள் குற்றச்சாட்டு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தொடர்பு இருப்பது போன்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது. தற்போது, பொது மக்கள் குற்றம்சாட்டியது போன்று நியூஸ் கார்டை பல ஊடகங்கள் வெளியிட்டது போன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். மோசடி தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

புகார் என்றால் மனுவாக எழுதி போலீசில் அளித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் மொட்டையாக பொது மக்கள் குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இது உண்மையில்லை என்பது தெரிகிறது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இந்த இரண்டு நியூஸ் கார்டுகளையும், புதிய தலைமுறை மற்றும் ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்து, இதன் நம்பகத்தன்மை குறித்து அவர்களிடம் கேட்டோம். புதிய தலைமுறையிலிருந்து இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டதுடன், இது பற்றி தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருப்பதாகவும் அதன் லிங்க்கை நமக்கு அனுப்பி வைத்தனர். அதில், இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இதே போன்று ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெரிவித்தார்.

முடிவு:

ஆருத்ரா நிதி மோசடியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு என்று ஜூனியர் விகடன், புதிய தலைமுறை பெயரில் பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் அண்ணாமலைக்குத் தொடர்பு என பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

Fact Check By: Chendur Pandian

Result: False