
திருச்சியில் 6 வயது சிறுமியைக் கற்பழித்த பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினரை போலீசார் பிடிக்கும் வரை ஷேர் செய்யுங்கள், என்று ஒரு பதிவு வேகமாக ஷேர் செய்யப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
பெரியார் சிலை அருகே நிற்கும் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், மேலே திருச்சியில் 6 வயது சிறுமி கற்பழிப்பு பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினர் இவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கீழ் பகுதியில், போலீசார் இவனைப் பிடிக்கும் வரை ஷேர் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
‘போர் அடிச்சா மீம் போடுவோம் ஹாங்‘ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மே 4ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி என்று குறிப்பிட்டுள்ளனர், திருச்சியில் எங்கே, எப்போது என்ற எந்த ஒரு தகவலும் இதில் இல்லை. இந்த பதிவு உண்மை என்று நம்பி ஆயிரக்கணக்கானோர் இந்த பதிவை பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு தமிழகத்தில் எங்கு பதிவு செய்யப்பட்டாலும் அது உடனடியாக செய்தி ஊடகங்களில் வெளியாகிவிடும். திருச்சியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை தொடர்பாக தி.க உறுப்பினர் தலைமறைவான பதிவு தொடர்பான செய்தி ஏதேனும் உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு, வருடங்களுக்கு முன்பு நடந்த செய்திகள் எல்லாம் கிடைத்தன. ஆனால், அவர்கள் யாரும் தி.க உறுப்பினர்கள் இல்லை. குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுக்கு யாராவது இந்த நபர் பற்றி கமெண்ட் செய்துள்ளார்களா என்று தேடியபோது, பலரும் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சிலர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். தொடர்ந்து இந்த கமெண்ட்டை பார்த்தபோது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இருந்த படத்தை, ப்ரொஃபைல் படமாக வைத்திருந்த Thirungannam Steepa என்பவர் பதில் அளித்திருந்ததைக் கண்டறிந்தோம். உங்களால் இதுதான் முடியும்… இது என்னுடைய படம், என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

Thirungannam Steepa பின்னணியை ஆய்வு செய்ய அவருடைய ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்றோம். தன்னை பற்றி, ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவருடைய பதிவுகள் தி.மு.க ஆதரவு நிலையிலேயே இருந்தன. ஒரு சில பதிவுகள் காங்கிரஸ், பா.ஜ.க எதிர்ப்பு நிலையிலும் இருந்தன.
மேலும், ஃபேஸ்புக்கில் தன்னுடைய சுய விவர குறிப்பு பகுதியில், அரசியல் பார்வை (Political Views) பற்றி கூறுகையில், திராவிட முன்னேற்ற கழகம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், இவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் இல்லை, தி.மு.க உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என்பது உறுதியானது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை இவர் எப்போது பயன்படுத்தினார் என்று ஆய்வு செய்தோம். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த படத்தை இவர் ப்ரொஃபைல் படமாக பயன்படுத்தி இருந்தார். இதை எடுத்து தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிந்தது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பதை மேலும் உறுதி செய்ய, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கண்டறிய முடிவு செய்தோம். திருச்சி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள், இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் திருச்சியில் பதிவானதாகத் தகவல் இல்லை. குற்றப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்றனர்.
அவர்களிடம் பேசியபோது, “திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆர் தொடர்பான தகவல் எங்களுக்கு வந்துவிடும். திருச்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை” என்றனர்.
இந்த பதிவை வெளியிட்ட ‘போர் அடிச்சா மீம் போடுவோம் ஹாங்’ பின்னணியை ஆய்வு செய்தோம். முழுக்க முழுக்க தி.மு.க, தி.க எதிர்ப்பு மற்றும் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டுப் பதிவுகளே இருந்தன. ஒன்றிரண்டு பொதுவான பதிவுகளும் இருந்தன.
பாகிஸ்தானை ஏவுகணைகள் சுற்றிலும் தாக்குவது போன்ற படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்திருந்தனர். தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில், தேச விரோதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகளை அடையாளம் காட்டுவோம் ஜெய்ஹித் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குற்றம் சாட்டப்படும் திருஞானம் ஸ்டீபாவை ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “நான் யாரைப் பற்றியும் எந்த தவறான பதிவையும் பொது வெளியில் பகிர்ந்தது இல்லை. என்னுடைய கருத்துக்களை என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டுமே பகிர்கின்றேன். கடந்த ஆண்டு பெரியார் பிறந்த தினத்தன்று இந்த படத்தை ஃப்ரொபைல் படமாக வைத்திருந்தேன். அதை தேடி எடுத்து இப்படி அவதூறான தகவலை வெளியிட்டுள்ளனர்.
என் நண்பர் பார்த்து எனக்கு இதைச் சொன்னார். இந்த தகவல் இப்போது வாட்ஸ் அப் குழுக்களிலும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஃபேஸ்புக் குழு பக்கத்தை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இந்த குழு பற்றி எதையும் நான் பேசியது, எழுதியது இல்லை. பிறகு ஏன் என்னைப் பற்றி இப்படி தவறான செய்தியை பரப்பினார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய திராவிடர் முன்னேற்ற கழக ஆதரவு நிலைப்பாடு காரணமாக இப்படி செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என் மீது இப்படி அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியவில்லை” என்றார்.
நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில்,
- திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
- இது தொடர்பாக திருச்சி காவல் துறையில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
- படத்தில் இருக்கும் நபர் திராவிடர் கழக்கத்தை சேர்ந்தவர் இல்லை. தன்னை அவர் தி.மு.க ஆதரவாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.
- தன் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு தகவலை பரப்பியுள்ளனர் என்று படத்தில் உள்ள திருஞானம் ஸ்டீபா நம்மிடம் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு, தி.மு.க ஆதரவு பதிவுகளை வெளியிட்டவர் என்பதால், அவரது படத்தை சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்தவர் என்று விஷமத்தனமாக பதிவு வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது, காழ்ப்புணர்ச்சியோடு உருவாக்கப்பட்டது என்பத உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.க உறுப்பினர் – வேகமாகப் பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
