இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே அனுமதியா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே இனி அனுமதி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

இது டிஎன்நியூஸ் 24 என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதே செய்தியை குறிப்பிட்ட இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தது. 

Facebook Claim Link Archived Link 1TNNews24 WebsiteArchived Link 2

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தியின் தலைப்பில், ‘’#breaking இனி இந்தியாவில் 6 மதங்கள் மட்டுமே அனுமதி, அதிரடி சட்டம் வந்தது,’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தியின் உள்ளே, ‘’வங்கதேசம், ஆப்கனில் இருந்து வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை பெற வசதியாக சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது,’’ எனக் கூறியுள்ளனர்.

இதன்படி பார்த்தால், செய்தியின் உள்ளே சொல்ல வந்த விசயத்தை தெளிவாகச் சொன்னவர்கள், தலைப்பில் தவறாகக் கூறியுள்ளதாக, தெரியவருகிறது.

பரபரப்பிற்காகவும், செய்தி தந்த உற்சாகம் காரணமாகவும் மேற்கண்ட செய்தியின் தலைப்பை தவறான முறையில் வைத்துள்ளனர். இந்தியாவில் இனி 6 மதங்களுக்கு மட்டுமே அனுமதி என்றால், அது மிகத் தவறாகும். ‘அந்த 6 மதங்கள் எவை, அவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் எங்கே போவது,’ என்ற குழப்பமான கேள்வியை ஏற்படுத்துகிறது. இதனை சற்று யோசிக்காமல் மேற்கண்ட செய்தியின் தலைப்பை பகிர்ந்துள்ளனர். 

உண்மையில், இந்தியாவில் வசிப்பவர்களில் யார் யாரெல்லாம் நிரந்தர குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்பது தொடர்பாக, Citizenship (Amendment) Bill 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்டால் மட்டுமே முழு சட்டமாக நடைமுறைக்கு வரும். மாநிலங்களவையில் பாஜக.,வுக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேறுமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2014 டிசம்பர் 31 தேதிக்கு முன்பாக, அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்து குடியேறியவர்களில், முஸ்லீம்களை தவிர்த்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுவதாகவும், இலங்கை தமிழர்கள், வங்கதேசம், மியான்மர் போன்றவற்றில் இருந்து வந்த முஸ்லீம் அகதிகள் உள்ளிட்டோரை புறக்கணிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தவிர, இந்த சட்ட திருத்த மசோதாவில் வேறு எங்கேயும், குறிப்பிட்ட 6 மதத்தினருக்கு மட்டுமே இந்தியாவில் அனுமதி, மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது எனக் குறிப்பிடவில்லை. 

IndiaToday LinkBBC News LinkEconomicTime LinkNDTV Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கியர், புத்த மதத்தினர், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் ஆகிய 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை தர, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேசமயம், இலங்கை தமிழர்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் போன்றவர்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.

2) இதனை தவறாக புரிந்துகொண்ட டிஎன்நியூஸ் 24 இணையதளம், குறிப்பிட்ட 6 மதத்தினர் மட்டுமே இனி இந்தியாவில் வாழ அனுமதி, மற்றவர்கள் நடையை கட்டலாம் என்பதுபோல தலைப்பிட்டு, செய்தி பகிர்ந்துள்ளனர். அதே செய்தியின் உள்ளே கன்டென்ட் வேறு விதமாக உள்ளது.

3) மேற்கண்ட செய்தியின் தலைப்பை படிக்கும்போது, குறிப்பிட்ட 6 மதத்தினர் மட்டுமே இந்தியாவில் வாழ அனுமதி தரப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு கிடையாது, என்ற அர்த்தம் வருகிறது. டிஎன்நியூஸ் 24 போன்ற அவசர ஊடகங்கள் முன்பின் யோசிக்காமல் வெளியிடும் செய்தியால், சமூகத்தில் தேவையற்ற குழப்பமே ஏற்படும்.

4) வேண்டுமானால், ‘’குறிப்பிட்ட 6 மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை பெற அனுமதி அல்லது அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை’’ இப்படி அர்த்தம் வரும் வகையிலான தலைப்பை டிஎன்நியூஸ் 24 வெளியிட்டிருக்கலாம்.

முடிவு:
பரபரப்பிற்காக மேற்கண்ட செய்தியின் தலைப்பை தவறாக வெளியிட்டுள்ளனர். இது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்திகளை மற்றவர்களுக்கு பகிரும்போது கவனமாகச் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே அனுமதியா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline