
‘’இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியில் நிவர் புயல் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இந்திய வானிலை நிலையம், ஏன் தமிழகத்தை தாக்கும் புயலுக்கு, இந்தியில் விளக்கம் அளிக்க வேண்டும்? இந்த புயலை டீவீயிலும், பத்திரிகையிலும் படிக்கும் வட இந்தியர்களுக்கா? புயலின் பாதையில் இருப்பவர்களுக்கு புரிந்தால் என்ன புரியவில்லை என்றால் என்ன? இந்தி ஏகாதிபத்தியத்தை பறைச்சாற்றும் மத்திய அரசே, தமிழர்களின் வரிப்பணம் இனிக்கிறதே, தமிழ் மட்டும் ஏன் கசக்கிறது?,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல, கலைஞர் செய்திகள் ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
நிவர் புயல் காலக்கட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் இவ்வாறு இந்தியில் மட்டுமே பதிவிட பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தது போல இந்த பதிவு இருப்பதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி, நமது வாசகர்கள் கேட்டுக் கொண்டனர்.
உண்மை அறிவோம்:
நிவர் புயல் தமிழ்நாட்டில் பெரிய அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு பகுதிகளில் சேதாரம் ஏற்படுத்திவிட்டு, கரையை கடந்து சென்றுள்ளது.
இந்நிலையில், நவம்பர் 25ம் தேதியன்று, இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியில் ட்வீட் ஒன்றை வெளியிட்டதாக, பெரும் சர்ச்சை எழுந்தது. ஆங்கிலத்தில் பதிவிடாமல் ஏன் இந்தியில் பதிவிட வேண்டும், இந்தி திணிப்பு நடைபெறுகிறதா, தமிழ்நாட்டில் நடைபெறும் புயல் தாக்குதலுக்கு இந்தியில் ட்வீட் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.
உண்மையில், இவர்கள் குறிப்பிட்டு பகிர்ந்து வரும் ட்வீட் பதிவின் லிங்க் கீழே இணைத்துள்ளோம்.
இந்த பதிவு போலவே, வேறு ஏதேனும் நிவார் புயல் பற்றி இந்தியில் ட்வீட் வெளியிடப்பட்டுள்ளதா என நீண்ட நேரம் தேடினோம். அப்போது, நவம்பர் 25, 2020 அன்று காலை 11 மணியளவில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு, இந்தி மொழியில் நிறைய ட்வீட்களை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டதைக் கண்டோம்.

ஆனால், நவம்பர் 25, 2020 அன்று வெளியிடப்பட்ட மற்ற பெரும்பாலான பதிவுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன.

குறிப்பாக, இவர்கள் சுட்டிக்காட்டும் பதிவு, நவம்பர் 25, 2020 அன்று காலை 11.47 மணியளவில் பகிரப்பட்டுள்ளது. அதில் இருந்து வரிசையாகச் சில ட்வீட்கள் இந்தியில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த ட்வீட் வெளியான அதே நேரத்தில் ஆங்கிலத்தில் ஒரு ட்வீட்டை IMD பகிர்ந்திருக்கிறது. இதேபோல, அதற்கு, 3 நிமிடம் முன்பாகவும் கூட ஆங்கிலத்தில்தான் ட்வீட் பகிர்ந்திருக்கின்றனர்.

நவம்பர் 25, 2020 அன்று காலை 11.47 மற்றும் 11.44 ஆகிய நிமிடங்களில் ஆங்கிலத்தில் வெளியான ட்வீட்களின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியில் மட்டுமே இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் பகிர்ந்ததைப் போல அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் தகவல் பகிர்வதாக தெரியவருகிறது. குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் ஆங்கிலத்திலும் நிறைய ட்வீட்களை இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்திருக்கிறது. அதனை மறைத்துவிட்டு, இந்தி ட்வீட்களை மட்டுமே பெரிதுபடுத்தி, ஃபேஸ்புக் பயனாளர்களிடையே குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர் என்றும் தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில் முழு உண்மை இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Exlplainer
