
நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் போன்ற திறமையற்றவர்கள் கைகளில் சிக்கிய பொருளாதாரம் இவ்வளவு காலம் சீரழியாமல் இருந்ததே பெரிய சாதனைதான் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 2, 2019 பிற்பகல் 2.10 என்று நாள், தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி படம் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில், “நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் போன்ற திறமையற்றவர்கள் கைகளில் சிக்கிய பொருளாதாரம் இவ்வளவு காலம் சீரழியாமல் இருந்ததே பெரிய சாதனைதான்” பா.ஜ.க எம்.பி சுப்பிமணியன் சுவாமி குற்றச்சாட்டு என்று இருந்து.
படித்ததில் பிடித்தது என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Syed Abbas என்பவர் 2019 செப்டம்பர் 2ம் தேதி இதை பதிவிட்டுள்ளார். நியூஸ் 7 நியூஸ் கார்டு என்பதாலும் பொருளாதார நிலை, நிர்மலா சீதாராமன் பற்றி சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது கருத்து கூறிவருவதாலும் இது உண்மை என்று நம்பி ஏராளமானோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி. தற்போது நிர்மலா சீதாராமனையும் விமர்சித்து வருகிறார். நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது என்று எல்லாம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சுவாமி. இந்த நிலையில், நியூஸ் 7 நியூஸ் கார்டில் சுப்பிரமணிய சுவாமி கூறியதாக இந்த பதிவு வெளியானதால் இது உண்மை என்றே பலரும் நம்பி இதை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டின் நம்பகத்தன்மையை நாம் ஆய்வு செய்தோம். டிசைன் பார்க்க அப்படியே நியூஸ் 7 வெளியிட்டது போலவே உள்ளது. இருப்பினும், சுப்பிரமணியன் சுவாமி கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியின் வாட்டர் மார்க் லோகோ இல்லை. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று கருதினோம்.

நியூஸ் 7 தமிழ் செப்டம்பர் 2ம் தேதி சுப்பிரமணிய சுவாமி தொடர்பாக ஏதாவது நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு நடத்தினோம். நம்முடைய தேடலில் நியூஸ் 7 செப்டம்பர் 2ம் தேதி சுப்பிரமணியன் சுவாமி பேட்டி தொடர்பாக நியூஸ் கார்டு வெளியிட்டது தெரிந்தது. அதை கிளிக் செய்து பார்த்தபோது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போல அது இல்லை.
நியூஸ் 7 வெளியிட்ட நியூஸ் கார்டில், “இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலைக்கு பாதி காரணம் காங்கிரஸ்தான். காங்கிரஸ் செய்த ஊழல்கள் மந்த நிலைக்கு ஒரு காரணம்” என்று இருந்தது.

சுப்பிரமணிய சுவாமி தன்னுடைய பேட்டியில் ஏதாவது குறிப்பிட்டுள்ளாரா என்று தேடினோம்.
தன்னுடைய பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரில் சாமி கும்பிட சுப்பிரமணியன் சுவாமி வந்த போதும், அதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்திலும் அவர் பேட்டி அளித்தது தெரிந்தது. அதில், வங்கி இணைப்பு நடவடிக்கையில் அவசரப்பட்டுவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். எந்த இடத்திலும் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமனைத் திறமையற்றவர்கள் என்று குறிப்பிடவில்லை.
இதற்கு முன்பு எப்போதாவது மோடியை விமர்சித்துள்ளாரா என்று தேடினோம். அப்போது பிரதமர் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் பற்றி தெரியாது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக வெளியான செய்தி கிடைத்தது. அது 2019 மார்ச் மாதம் வெளியாகி இருந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில்,
நியூஸ் 7 பெயரில் வெளியான கார்டு உண்மை இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூஸ் 7 வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.
சுப்பிரமணியன் அளித்த பேட்டி கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நியூஸ் 7 நியூஸ் கார்டை போட்டோ எடிட் செய்து தவறான தகவலை வைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நரேந்திர மோடி திறமையற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னாரா?
Fact Check By: Chendur PandianResult: False
