
நடிகர் சூர்யா இஸ்லாமியராக மதம் மாறியதற்கான ஆதாரம் கிடைத்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link 1 I Archived Link 2
2.11 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “நடிகர் சிவக்குமாரனின் மூத்த மகன் நடிகர் சூர்யா முஸ்லீமாக மதம் மாறினார்” என்று எழுதப்பட்டு இருந்தது. வீடியோவைப் பார்த்தோம்… அதில் காரில் வந்து இறங்கும் சூர்யாவை, இஸ்லாமிய பெரியவர்கள் உள்ளே அழைத்துச் செல்கின்றனர். அவருக்கு தலைப்பாகை அணிவிக்கப்படுகிறது.
இந்த வீடியோவை தம யந்தி தமயந்தி என்பவர் 2019 செப்டம்பர் 1ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “இதோ ஆதாரம்… நடிகர் சூர்யா இஸ்லாமாக மதம் மாறிய வீடியோ இதோ..” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதிய கல்விக் கொள்கை பற்றி தன்னுடைய சந்தேகங்களை நடிகர் சூர்யா எழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மீதான தனிநபர் தாக்குதல் சமூக ஊடகங்களில் அதிகரித்துவிட்டது. சூர்யாவின் உயரம் தொடங்கி பல்வேறு விஷயங்கள் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. சூர்யா மதம் மாறிவிட்டார் என்றும் அதனால்தான் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை அவர் தெரிவித்தார் என்றும் சிலர் கூறிவந்தனர். தற்போது அதற்கு ஆதாரம் கிடைத்துவிட்டது என்று இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோ தெளிவாக இல்லை. வீடியோவைப் பார்க்கும்போது காரைக் காட்டுகின்றனர்… காரில் இருந்து இறங்கும் போதே தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியுடன் சூர்யா இருக்கிறார். அவருக்கு மாலை அணிவிக்கின்றனர். பிறகு உள்ளே அழைத்துச் சென்று சூர்யா தலையில் காவி நிற தலைப்பாகை கட்டுகின்றனர். வீடியோவின் 1.37வது நிமிடத்தில் ஒருவர் வந்து சூர்யாவை அழைத்துச் செல்கிறார்.
பின்னர் தர்காவில் நடிகர் சூர்யா பிரார்த்தனை செய்கிறார். வீடியோவில் நடிகர் சூர்யா மிகவும் பக்தியாக அமர்ந்திருப்பது போல உள்ளது. இதை எல்லாம் காணும்போது பலருக்கும் இது உண்மையாகவேத் தோன்ற வாய்ப்பு உள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சிம்புவின் சகோதரர் குறளரசன் இஸ்லாமிய மதத்தை ஏற்றபோது அது தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அப்படி, நடிகர் சூர்யா மதம் மாறினார் என்றால் அது தமிழகத்தில் மிகப்பெரிய செய்தியாக பேசப்பட்டு இருக்கும். எனவே, இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம்.
நம்முடைய தேடலில், இந்த வீடியோ 3-4 ஆண்டுகளாக பகிரப்பட்டு வருவது தெரிந்தது. அதில் ஒரு வீடியோவை பார்த்தோம். அதில், சூர்யா மதம் மாறவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதில் 2013ம் ஆண்டு சிங்கம் 2 படப்பிடிப்பின்போது இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பின்பேரில் நடிகர் சூர்யா சென்றதாக சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர்.
நம்முடைய தேடலில், நடிகர் சூர்யா மதம் மாறினாரா என்று தினமலர் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. 2017ம் ஆண்டு இந்த செய்தி வெளியாகி இருந்தது. அதைப் படித்துப் பார்த்தபோது, “சிங்கம் 2 படப்பிடிப்புக்காக நடிகர் சூர்யா ஆந்திராவிலிருந்தபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த அழைப்பின் பேரில் கடப்பாவில் உள்ள தர்காவுக்கு சென்று வந்தார். அப்போதுதான் அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இதைத் தவறாகப் புரிந்துகொண்டு சிலர் சூர்யா மதம் மாறிவிட்டார் என்று செய்தி பரப்பி வருகின்றனர். சூர்யா மதம் எதுவும் மாறவில்லை. அந்த செய்தி தவறானது என்று சூர்யா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
புதிய தலைமுறை வெளியிட்டிருந்த செய்தியில், நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதேபோல், தமிழ் சமயம் உள்ளிட்ட பல இணையதளங்களில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மற்றொரு வீடியோவில் நடிகர் சூர்யா அஜ்மீர் தர்காவுக்கு சென்றுவந்தபோதும் கூட இதுபோல வதந்தி பரவியதாகக் குறிப்பிட்டு இருந்தனர். அந்த வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.நியூஸ்மினிட் வெளியிட்டிருந்த செய்தியில், இது வெறும் வதந்தி என்று சூர்யா தரப்பில் இருந்து பத்திரிகை செய்தி வெளியாகி இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும் நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமாக உள்ள ராஜசேகர் பாண்டியன் என்பவரும் இந்த தகவலை மறுத்துள்ளதாக தெரிவித்திருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
2013ம் ஆண்டு நடிகர் சூர்யா கடப்பாவில் உள்ள தர்காவுக்கு சென்றாரா, அப்போது இந்த வீடியோ வெளியானதா என்று கூகுளில் தேடினோம். அப்போது, சூர்யா கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவுக்கு சென்றது உண்மை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக 2013 மார்ச் 29ம் தேதி தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தி வீடியோ நமக்கு கிடைத்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும் நம்முடைய தேடலில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் ஒரிஜினல் வீடியோவும் கிடைத்தது. அது 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நடிகர் சூர்யா மதம் மாறினார் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“நடிகர் சூர்யா மதம் மாறியதற்கான ஆதாரம்” – ஃபேஸ்புக்கில் பரவும் விஷம வீடியோ
Fact Check By: Chendur PandianResult: False
