நடிகை சமந்தா பெட்ரூமில் ஆண் சடலம்? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு!
நடிகை சமந்தாவின் படுக்கை அறையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link 1 | Article Link | Archived Link 2 |
"அதிர்ச்சியில் திரையுலகம்! சற்றுமுன்பு நடிகை சமந்தாவின் பெட்ரூமில் ஆண் சடலம்!" என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்ட புகைப்படத்துடன் கூடிய செய்தி இணைப்பு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
அந்த செய்தி இணைப்பில், "சற்றுமுன் சமந்தாவின் படுக்கையறையின் காட்சிகள் பரபரப்பு நடப்பதை நீங்களே பாருங்கள்..." என்று இருந்தது.
இந்த செய்தியை Time pass என்ற ஃபேஸ்புக் பக்கம் அக்டோபர் 1, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆண் சடலம் கிடப்பதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சில ஊடகங்கள் நடிகை சமந்தாவின் பண்ணை வீடு என்று தலைப்பிட்டு கூட செய்தி வெளியிட்டன. நாகார்ஜுனரின் மருமகள் என்பதால் பரபரப்புக்காக சமந்தாவின் பண்ணைவீடு என்று வைத்துள்ளனர் என்று தெரிந்தது.
thenewsminute.com | Archived Link 1 |
news18.com | Archived Link 2 |
behindtalkies.com | Archived Link 3 |
இந்த நிலையில், நடிகை சமந்தாவின் படுக்கை அறையில் ஆண் சடலம் கிடந்தது என்றும் சற்றுமுன் இந்த தகவல் வெளியானது என்றும் செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த செய்தி இணைப்பை கிளிக் செய்து பார்த்தோம்.
அதில், "சற்றுமுன் சமந்தாவின் படுக்கையறையின் காட்சிகள் பரபரப்பு நடப்பதை நீங்களே பாருங்கள்" என்று குறிப்பிட்டு யூடியூப் வீடியோ இணைப்பைக் கொடுத்திருந்தனர்.
அந்த வீடியோவைப் பார்த்தோம். சற்றுமுன்பு சமந்தாவின் படுக்கையறையில் பரபரப்பு என்று தலைப்பிடப்பட்டு இருந்த அந்த வீடியோவை கிட்டத்தட்ட 41 ஆயிரம் பேர் பார்த்திருந்தனர். அபத்தங்களின் உச்சமாக அந்த வீடியோ இருந்தது.
Youtube Link | Archived Link |
நடிகர் நாகார்ஜுனாவின் பண்ணையில் ஆண் சடலம் கிடந்தது என்ற செய்தியை வைத்துக்கொண்டு இவர்களாகவே ஒரு திரைக்கதை. வசனத்தையே எழுதிவிட்டார்கள். நடிகை சமந்தா என்பவர் யார், இப்போது என்ன மொழி படங்களில் நடித்து வருகிறார், அவருக்கு எப்போது, யாருடன் திருமணம் ஆனது என்று பழைய கதையை பேசியபடி விஷயத்துக்குள் வந்தார்கள்.
நாகார்ஜுனா தன்னுடைய மகன் மற்றும் மருமகள் இயற்கை விவசாயம் செய்ய 40 ஏக்கர் பண்ணை ஒன்றை வாங்கியிருந்தாராம். அதில் மகன் மற்றும் மருமகளுக்காக ஒரு வீட்டையும் வாங்கியிருக்கிறார். அந்த பண்ணை வீட்டை சீரமைக்கும் பணி நடந்து வருகிறதாம். அப்போது சமந்தாவுக்காக ஒதுக்கப்பட்ட அறையின் தரைப் பகுதியை மாற்றியமைக்க பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது, துர்நாற்றம் வீசியுள்ளது. தொடர்ந்து தேடியபோது எலும்புக்கூடு கிடைத்துள்ளது. போலீசார் அந்த எலும்புக் கூட்டை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பினர். அந்த எலும்புக்கூடு 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரித்தபோது, பண்ணைவீடு உள்ள பகுதியைச் சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதிவைத்து காணாமல் போய்விட்டதாகவும் அவருடைய எலும்புதான் இது என்று தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சமந்தாவின் படுக்கை அறையில் ஆண் பிணம் இருந்துள்ளதால் அபசகுனமாக உள்ளதே என்று நாகார்ஜுனா குடும்பத்தினர் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாகார்ஜுனாவின் பண்ணையில் ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது உண்மை. ஆனால் அது சமந்தாவின் அறையின் அடியில் பள்ளத்திலிருந்து எல்லாம் எடுக்கப்படவில்லை.
நாகார்ஜுனா சமீபத்தில் இந்த வீட்டுடன் கூடிய பண்ணையை வாங்கியுள்ளார். பல ஆண்டுகளாக சீர்படுத்தப்படாமல் புதர்கள், செடிகள் மண்டியிருந்த 40 ஏக்கர் நிலத்தை சீர் செய்ய ஆட்களை அனுப்பியுள்ளார் நாகார்ஜுனா. பண்ணைக்கு வந்த பணியாளர்கள், ஒரு சிதிலமடைந்த கட்டிடத்தின் உள்ளே ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளதைக் கண்டுள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து அந்த சடலத்தைக் கைப்பற்றி யார் அவர் என்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சந்தேக மரணம் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமந்தாவின் அறையிலோ, சமந்தாவுக்கு ஒதுக்கப்பட்ட அறையிலோ பள்ளம் தோண்டியபோது அந்த சடலம் கிடைத்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக வீடியோ ஏதும் உள்ளதா என்று தேடினோம். அப்போது 99 டிவி தெலுங்கு என்ற செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில் சிமெண்ட் கூரை வேயப்பட்ட வீடு ஒன்றை காட்டுகின்றனர். அதன் உள்ளே சடலம் உள்ளது. இதன் மூலம் அறையின் உள்ளே பள்ளம் தோண்டும்போது எலும்புக்கூடு கிடைத்தது என்ற தகவல் தவறானது என்று உறுதியானது.
Youtube Link | Archived Link |
மேலும், பண்ணை வீடு என்றதும் மிகப்பெரிய பங்களாவாக இருக்கும் என்று இவர்களாகவே கற்பனை செய்துகொண்டு இந்த வீடியோவை உருவாக்கியுள்ளது தெரிகிறது. வீடியோவைப் பார்க்கும்போது மிகவும் சாதாரண வீடு அது என்பது தெரிகிறது. கால்நடைகள் தங்கும் ஷெட் போல அமைக்கப்பட்டுள்ள அந்த வீட்டின் அந்த சிறிய அறையை சமந்தாவுக்கு எப்போது, எப்படி ஒதுக்கினார்கள் என்பதுதான் தெரியவில்லை. பரபரப்புக்காக மசாலா சேர்த்து படுக்கை அறையில் பரபரப்பு என்று அபத்தமாக வீடியோவை உருவாக்கியுள்ளது உறுதியாகிறது.
நம்முடைய ஆய்வில்,
பண்ணை நிலம் மற்றும் வீட்டை நடிகர் நாகார்ஜுனா வாங்கியது தெரியவந்துள்ளது.
பண்ணை வீடு என்பது பங்களா டைப் வீடு இல்லை, சாதாரண சிமெண்ட் கூரை வேயப்பட்ட வீடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமந்தாவுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் பள்ளம் தோண்டியபோது சடலம் கிடந்தது என்ற தகவல் தவறானது. அந்த அறையில் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரபரப்புக்காக மிகவும் தவறான, அபத்தமான தகவலைப் பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சமந்தாவின் படுக்கை அயைில் ஆண் சடலம் கிடந்தது என்று பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:நடிகை சமந்தா பெட்ரூமில் ஆண் சடலம்? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False