
‘’ஜெய் ஸ்ரீராம் சொன்னதால் மீண்டும் உயிர்த்தெழுந்த அன்சாரி,’’ என்ற தலைப்பில் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த தகவல்கள் இதோ…
தகவலின் விவரம்:

Jagan Rajendar என்பவர் ஜூன் 28, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார். இதில், தப்ரீஸ் அன்சாரி அடிவாங்கும் புகைப்படம் மற்றும் போலீசாருடன் நிற்கும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, ஜெய் ஸ்ரீராம் சொன்னதால் மீண்டும் உயிர்த்தெழுந்தபோது எடுத்த படம், என்று எழுதியுள்ளனர். இது மிகவும் விஷமத்தனமாக உள்ளது. ஆனால், விபரீதம் புரியாமல் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலம், சிராய்கெலா – கர்ஸாவான் மாவட்டத்தில் கடந்த ஜூன் 19ம் தேதியன்று, பைக் திருடியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் தப்ரீஸ் அன்சாரி என்ற முஸ்லீம் இளைஞரை உள்ளூர் மக்கள் சராமரியாக அடித்து உதைத்தனர். அப்போது சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட சொல்லி அவரை மிரட்டினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அங்கு வந்த போலீசார், அந்த நபரை கிராம மக்களிடம் இருந்து விடுவித்து, தங்களுடன் அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த நபரை பின்னர் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்வதாகக் கூறினர். அந்த நேரத்தில் உடல்நலம் சரியில்லை என, தப்ரீஸ் அன்சாரி கூறவே, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 22 அன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்தான், பாதிக்கப்பட்ட நபர் உயிரோடு இருப்பதாகக் கூறி மேலே உள்ள விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இது மிகவும் மிருகத்தனமான செயலாகும். சமூகத்தில் இப்படி விஷமத்தனமான சிந்தனையுடன் பலர் நடமாடுவது வேதனை அளிக்கிறது.
தப்ரீஸ் அன்சாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை பற்றிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தப்ரீஸ் அன்சாரி இறந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு டெல்லி வக்ஃப் வாரியம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம், தப்ரீஸ் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது எடுத்ததாகும். அப்போதுதான் அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தார். இதனை சம்பந்தப்பட்ட போலீசாரே உறுதி செய்துள்ளனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜெய் ஸ்ரீராம் சொன்னதால் மீண்டும் உயிர்த்தெழுந்த அன்சாரி: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Parthiban SResult: False
