
கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
சிலப்பதிகார ஓவியத்துடன் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் (???) கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி” என்று செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், அகத்தியர் ஓலைச்சுவடியில் எழுதிய பாடல் என்று மற்றொன்றும் பகிரப்பட்டுள்ளது.
இந்த பதிவை தமிழன் சக்தியா என்பவர் 2020 மார்ச் 1ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுக்க உள்ளது… இதற்கு தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கு இல்லை. கொரோனா பற்றிய உண்மைத் தகவலை விட வதந்திகள் வைரலாகி வருகின்றன. இப்படி வதந்தி வைரலாகி வருவதைக் கண்டு போகர் பெயரில் எழுதப்பட்ட போலியான பாடலையும் வைரலாக்கினார்கள். அது பிரபல நாளிதழில் கூட பிரசுரம் ஆனது. போகர் எழுதியது என்று பகிரப்படும் பாடல் தவறானது என்று நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தற்போது, சிலப்பதிகாரத்தில் கொரோனா பற்றி உள்ளது என்று பதிவிட்டு வருகிறார்கள். சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்கள் அல்லது பகுதிகளைக் கொண்டது. புகார்க் காண்டம் 10 காதைகள், மதுரைக் காண்டம் 13 காதைகள், வஞ்சிக் காண்டம் 7 காதைகள் என மொத்தம் 30 காதைகளைக் கொண்டது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவிலோ இந்த பாடல் சிலம்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளனர். இல்லாத நான்காவது அத்தியாயத்தை எங்குப்போய் தேடுவது?
tamilvu.org | Archived Link |
பாண்டிய மன்னன் உத்தரவு படி கோவலன் கொல்லப்பட்ட பிறகுதான் கண்ணகி பாண்டிய மன்னனின் அவைக்கு வருவார். கண்ணகி பாண்டிய மன்னனிடம் பேசும் பகுதி என்பது மதுரை காண்டம் வழக்குரை காதையில் இடம் பெறும். “தேரா மன்னா செப்புவதுடையேன்” என்று தொடங்கும் பாடல் மிகவும் பிரபலம். அதனால், அந்த பகுதியை ஆய்வு செய்தோம். அதில் கொரோனா வைரஸ் பற்றி கண்ணகி கேள்வி எழுப்புவது போன்ற எந்த ஒரு வரியும் இல்லை.
tamilvu.org | Archived Link 1 |
kalloorithamizh.blogspot.com | Archived Link 2 |
இந்த வதந்தி தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது இணைய ஊடகம் ஒன்றில் இந்த பதிவு அப்படியே வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது தமிழ் சமயம் இணைய ஊடகத்தில் இது தொடர்பாக செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதில், பாண்டிய மன்னனிடம் கேள்வி கேட்கும் பகுதி என்று இதை குறிப்பிட்டுள்ளனர். பாண்டிய மன்னனிடம் கண்ணகி பேசும் பகுதி மதுரைக் காண்டத்தில் உள்ளது. அதில் இப்படி ஒரு பகுதியே இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
tamil.samayam.com | Archived Link |
அகத்தியர் எழுதியது தொடர்பாக பரவும் பாடல் பற்றி தமிழறிஞர் பிரபாகர மூர்த்தி என்பவரிடம் சமயம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “சித்தர் பாடலுக்குரிய செம்மையும் இல்லை, அவர்கள் பின்பற்றிய மொழிநடையும் இதில் இல்லை. இதன் மூலம் இது சித்தர் பாடல்தானா என்ற ஆராய்ச்சிக்குள்ளே செல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் உள்ளது, அகத்தியர் பாடியுள்ளார் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா?
Fact Check By: Chendur PandianResult: False

👌👌👌👏👏