ஆயுதங்கள் சிக்கியது ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவுகள்

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஆயுதங்கள் கிடைத்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதே படத்தை வெளியிட்டு டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடு என்று மற்றொரு தரப்பினர் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மிகப்பெரிய குடோனில் நூற்றுக்கணக்கான வாட்கள் உள்ளன. அதை போலீசார் கைப்பற்றி காட்சிக்கு வைத்துள்ளனர். சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கியாக உள்ளது. இந்த மூன்று படங்களையும் கொலாஜ் செய்து வெளியிட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், “நமது உறவான #இந்திய #இசுலாமியர்களின் உயிர்களை காவு வாங்க – பாஜக Rss சேர்த்து வைத்துள்ள ஆயுதங்களை பாருங்க #மக்களே… டெல்லி #RSS அலுவலகங்களில் இருந்து #காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒருபகுதி இவை..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை செங்கொடி பாலகிருட்டிணன் என்பவர் மார்ச் 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.

Facebook LinkArchived Link

இதனுடன் கூடுதல் சில படங்கள் சேர்த்து ஆயிசா என்பவர் வேறு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு tvகாரனும் காட்ட மாட்டான் விவாதம் பண்ண மாட்டான் காவிகளே எல்லா இந்து களும் அறியட்டும் ஷேர் பண்ணி விடுங்க. ஆம் ஆத்மி கவுன்சிலர் #ஜாகீர்உசேன் வீட்டில் கண்டு எடுக்கப்பட்ட ஆயுதங்கள் இந்துக்களை அழிக்க எவ்வளவு கொடூரமான முன்னேற்பாடுகள் இந்து வே நீ சுயம் அறிவது; எழுவது ஒன்றுபடுவது எப்போது ??” என்று கூறியுள்ளார். இதையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒரே படத்தை இரு தரப்பினரும் பதிவிட்டுள்ளனர். உண்மையில் இந்த ஆயுதக் குவியல் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதா அல்லது ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

டெல்லியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பெயர் ஜாகீர் உசேன் என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அவர் பெயர் தாகீர் உசேன். இது கூட சாதாரண எழுத்துப் பிழையாக இருக்கலாம்… பெரிய தவறு இல்லை. 

அதேசமயம், படத்தில் உள்ள ஆயுதங்கள் தாகீர் உசேன் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதா என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல மாதங்களாகவே இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும் அது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதும் நமக்கு தெரியவந்தது.

கடந்த 2018ம் ஆண்டு வாள் படங்கள் தொடர்பாக இந்தியா டுடே ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதைப் பார்த்தோம். அதில் இந்த புகைப்படம் உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது, காஷ்மீரில் ஒரு மசூதியில் எடுக்கப்பட்டது, கேரளாவில் எடுக்கப்பட்டது என்று பல வதந்திகள் பரவி வருகிறது.

உண்மையில் இது பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டது. சீக்கியர்கள் பயன்படுத்தும் புனித வாள் உற்பத்திக் கூடம் இது என்று குறிப்பிட்டிருந்தனர்.  மேலும், இந்த புகைப்படங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்த சுற்றலா பயணிகள் எடுத்தார்கள் என்று கடையின் உரிமையாளர் பச்சன் சிங் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் போலீசார் காட்சிக்கு வைக்கும் காட்சி இல்லை. எனவே, அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த படம் பல ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிந்தது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் நமக்கு கிடைத்தன. குற்றவாளிகள் நான்கு பேர் அமர்ந்திருக்கும் படமும் அதனுடன் சேர்ந்தது என்பது தெரியவந்தது.

Archived Link

சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கி இருக்கும் படம் நாம் ஏற்கனவே ஆய்வு செய்து வெளியிட்டதுதான். அது 2019ம் ஆண்டு சமூக ஊடகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளின் கண்காட்சி படம். இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வெளியிட்ட கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

tumblr.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

இந்த புகைப்படங்கள் அனைத்தும் பஞ்சாப், குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்றும், பல ஆண்டுகள் பழமையான படம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் டெல்லி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது என்றும் டெல்லி ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்கள் இவை என்று பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆயுதங்கள் சிக்கியது ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவுகள்

Fact Check By: Chendur Pandian 

Result: False