
‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என்று பாஜக தலைவர் முருகன் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
தந்திடிவி பெயரில், பாஜக தமிழக தலைவர் முருகனின் புகைப்படத்துடன் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’தேசநலன் கருதி தமிழக மக்கள் அனைவரும் தம்மிடம் இருக்கும் தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – தமிழக பாஜக தலைவர் முருகன்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை பார்க்கும் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பற்றிய பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், அதுதொடர்பான வதந்திகள் ஒருபுறம் சாமானிய மக்களை குழப்பி வருகின்றன. வதந்திகள் குழப்புவதாக இருந்தால் பரவாயில்லை, நாளுக்கு நாள் அவை மக்களை தவறாக வழிநடத்தக்கூடியதாக மாறி, இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்குவதாக மாறுவது வேதனை அளிக்கிறது.
அப்படியாக பகிரப்பட்ட ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்ட வதந்திதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் இடம்பெற்றுள்ள நியூஸ்கார்டும்.
இதுபற்றி பாஜக தரப்பில் விசாரித்தபோது, இது போலியான நியூஸ் கார்டு என்றும், இதுபற்றி போலீஸ் புகார் அளித்துள்ளோம் என்றும், தெரிவித்தனர்.
News 18 Link | Archived Link |
பிறகு, இதுபோல உண்மையில் தந்தி டிவி (@ThanthiTV) செய்தி வெளியிட்டதா அல்லது இது வேறு யாரேனும் வெளியிட்ட போலியான நியூஸ் கார்டா என்ற சந்தேகத்தில் தகவல் தேட தொடங்கினோம். தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலேயே நமது தேடலுக்கான விடை கிடைத்தது.
அதாவது, பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பும்படி பாஜகவினரை, கட்சித் தலைவர் என்ற முறையில் முருகன் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த செய்தியைத்தான் தந்தி டிவி வெளியிட்டுள்ளது. அதனை எடுத்து, தவறான தகவலை எடிட் செய்துள்ளனர்.
Thanthi TV post link | Archived Link |
06.04.2020 தேதியில் பாஜக தலைவர் முருகன் பற்றி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து, சிலர் விஷமத்தனமான தகவலை பகிர்ந்துள்ளனர் என்று இதன்மூலமாக சந்தேகமின்றி உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தியில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
