மோடியின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றினாரா?

Coronavirus அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் நீங்களுமாடா? அட திராவிட தற்குறிகளா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, கோகுலநாதன் பண்டிதன் தமிழ்சித்தர் குடி என்பவர் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9.52க்கு பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீடுகளில் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றியதாக படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பரப்பி வருகின்றனர்.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. ஆனால், எப்போது இந்த புகைப்படம் வெளியானது என்று கண்டறிய முடியவில்லை.

Search Link

மு.க.ஸ்டாலின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களை பார்த்தோம். அதில் எதிலும் இந்த புகைப்படத்தை அவர்கள் வெளியிடவில்லை. மு.க.ஸ்டாலின், மெழுகுவர்த்தி ஆகிய கீவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது இமேஜ் தேடலில் நமக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி கிடைத்தது. 2010ம் ஆண்டு இந்த புகைப்படத்தை நி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. 

Search Linknewindianexpress.comArchived Link

துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது எக்ஸ்னோரா ஏற்பாடு செய்திருந்த பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சி அது என்பது தெரியவந்தது. இதன் மூலம், 2010ம் ஆண்டு எடுத்த படத்தை தற்போது எடுத்ததுபோன்று தவறாக பகிர்ந்து வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் மோடியின் அழைப்பின் பேரில் மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றியது போன்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடியின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False