
அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் நேரடி ஒளிபரப்பு காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஸ்டாலின் பரப்புரை. அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் – ஸ்டாலின்” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து. ரத்து செய்தபின் அனிதா பெயரில் நீட் தேர்வு எழுத பயிற்சி மையம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Agni Karthik என்பவர் மார்ச் 26, 2021 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அப்படி இருக்கும் போது நீட் தேர்வை எதிர்கொள்ள அனிதா பெயரில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியதாக சமூக ஊடகங்களில் நியூஸ் 7 தமிழில் செய்தி வந்தது என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: polimernews.com I Archive
முதலில் இது போல அறிவிப்பு எதையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளாரா என்று பார்த்தோம். அப்போது “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ தொடங்கப்படும்: ஸ்டாலின் உறுதி” என்று 2021 பிப்ரவரி 10ம் தேதி மு.க.ஸ்டாலின் கூறியதாக தமிழ் இந்துவில் வெளியான செய்தி கிடைத்தது. மற்றபடி நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கடலூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமி பற்றிய செய்தியில், “பெண்களுக்கு அவர்கள் கல்வியைத் தாண்டி ஒரு கூடுதல் தகுதி கொடுப்பதற்காகத்தான் ‘டேலி’ வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்றிருக்கும் எத்தனையோ பேர் பெரிய பெரிய நிறுவனங்களில் இன்றைக்குப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்திருக்கிறது. சம்பளமும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive
வேலை கிடைத்தது என்பதை விட, சம்பளம் கிடைக்கிறது என்பதை விட அவர்களுக்குத் தன்னம்பிக்கை வந்திருப்பதுதான் முக்கியம். ‘டேலி’ வகுப்போடு, தையல் பயிற்சி வகுப்பு, இளைஞர்களுக்குத் தனிப் பயிற்சி மையம் என்று விரிவடைந்து ‘அனிதா அச்சீவர்ஸ்’ இன்றைக்கு மினி கல்லூரியைப் போல வளர்ந்து வந்திருப்பது உள்ளபடியே எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று ஸ்டாலின் பேசியிருந்தது கிடைத்தது.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ள அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். டேலி, ஜிஎஸ்டி மற்றும் பேங்கிங் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதாக அவர்கள் வெளியிட்டிருந்த விளம்பரம் நமக்கு கிடைத்தது. இங்கு நீட் பயிற்சி வழங்கப்படுவது இல்லை என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழில் வெளியான தகவல் தொடர்பாக அதன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் இது போலியானது, நாங்கள் இதை வெளியிடவில்லை என்றார். நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியதாக எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை, நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியானது என்று பரவும் தகவல் தவறானது என்று அந்த தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
இதை மேலும் உறுதி செய்ய தி.மு.க மருத்துவ அணி செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான டாக்டர் கனிமொழி என்விஎன் சோமுவைத் தொடர்புகொண்டு கேட்டோம். இது தவறான தகவல் என்ற அவர் இது பற்றி தி.மு.க ஊடகப் பிரிவு நிர்வாகியை பேசச் சொல்வதாக கூறினார். ஆனால் யாரும் நம்மைத் தொடர்புகொள்ளவில்லை.
அதே நேரத்தில் இந்த தகவல் தவறானது என்று தொலைக்காட்சி தரப்பிலும், தி.மு.க தரப்பிலும் கூறியுள்ளதால் அனிதா பெயரில் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் அனிதா நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அனிதா பெயரில் நீட் தேர்வு மையம் தொடங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
