
‘’ஜெயலலிதாவால் பார்த்து பொறுக்கி எடுக்கப்பட்ட தரமான விஞ்ஞானிகள்,’’ என்று கூறி, தமிழக அமைச்சர்களை கேலி செய்து ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருந்த இப்பதிவில் உள்ள உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மே 7ம் தேதி இந்த பதிவு, வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைவரையும் கிண்டல் செய்து, அவர்கள் பேசியது மற்றும் அவர்கள் சமீபத்தில் செய்தது போன்ற செயல்களையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். இதன் மேலே, ‘’ஜெயலலிதாவால் பார்த்து பார்த்து பொருக்கி எடுக்கப்பட்ட தரமான, நயமான வின்ஞானிகள் இவர்கள்,’’ என எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் சொல்லியதன் படி, முதலில், எடப்பாடி பழனிசாமி, முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் மேலணை, அதிக மழை காரணமாக, இடிந்து விழுந்தது. இதுபற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வருவதுபோல, முக்கொம்பு அணை உடைந்துள்ளதாகக் கூறினார். இது உண்மைதான். இதுபற்றி விகடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி புகைப்படத்தை வைத்து, எடப்பாடி மீது அம்மா ஆவி புகுந்துள்ளதால் 2 வருடம் முதலமைச்சராக, அவர் இருக்கிறார் என்று பேசினார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மைதான், அம்மாவின் ஆன்மா எடப்பாடி உடலில் புகுந்துள்ளதாக, ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.
பின்னர், செல்லூர் ராஜூ புகைப்படத்தை பகிர்ந்து, அதில், வைகை ஆற்றை தெர்மோகோல் போட்டு மூடினால், நீர் ஆவியாகாமல் இருக்கும் என, அவர் கூறியதாக எழுதியுள்ளனர். உண்மையில், அவர் வைகை அணையைத்தான் தெர்மகோல் போட்டு மூட முயன்று, பல தரப்பிலும் கேலிக்கு ஆளானார். இதுபற்றிய செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல் தவறாகும்.
அடுத்ததாக, அமைச்சர் கருப்பண்ணன், நொய்யல் ஆற்றில் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால், நுரை வருகிறது எனக் கூறியதாக, பதிவிட்டுள்ளனர். இது உண்மைதான், இதுபற்றிய செய்தி ஆதாரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்பின், உதயகுமார் புகைப்படத்தை பகிர்ந்து, 8 வழிச்சாலை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், பூட்டுபோட்டு பூட்டிவிடுவோம் என்று அவர் சொன்னதாகக்கூறியுள்ளனர். இதுவும் உண்மைதான். இதற்கான செய்தி ஆதாரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
இறுதியாக, திண்டுக்கல் சீனிவாசன் புகைப்படத்தை வைத்து, அதன் அருகே, புயல் அடிக்கடி வந்தால்தான் மக்களின் குடிநீர் பிரச்னை தீரும், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கு வேலை செய்ய புத்துணர்ச்சி கிடைக்கும், என்று அவர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதுவும் பாதி உண்மைதான். இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, இதில் கூறப்பட்டுள்ளதில், ஒரு தகவல் முற்றிலும் தவறு. மற்றொரு தகவல் பாதி உண்மை, பாதிதவறு. மீதி அனைத்தும் சரிதான். இதுதவிர, இந்த பதிவுடன் தனது சொந்த கருத்துகளையும், இதனை வெளியிட்ட நபர் பகிர்ந்துள்ளார்.
எனவே, இந்த பதிவில் பாதி உண்மை, பாதி சொந்த கருத்து உள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி சொந்த கருத்து இடம்பெற்றுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜெயலலிதா பொறுக்கி எடுத்த விஞ்ஞானிகள்: தமிழக அமைச்சர்கள் பற்றிய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Parthiban SResult: Mixture
