ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் நுழைய தடை! – ஃபேஸ்புக் பதிவு உண்மை என்ன?

சமூக ஊடகம் | Social சமூகம்

வருகிற 1ம் தேதி முதல், ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

“இனி ஹெல்மெட் போடாவிட்டால் பெட்ரோல் பங்க்கிற்குள் நுழையவே முடியாது… வரும் 1ம் தேதி முதல் புதிய அதிரடி…

குழந்தைகளை கற்பழக்கிறவனை எல்லாம் ஜாமீனில் விட்டுடுங்க ஹெல்மெட் போடாதவனை கரெக்டா பிடிங்க.

இந்த ஹெல்மெட் சட்டம் வந்த பிறகுதான் தினமும் செயின் பறிப்பு சம்வம் நடக்குது.

முதல்ல அரசு போக்குவரத்து கழக பஸ்ஸூக்கு இன்சூரன்ஸ் போட சொல்ல தைரியம் இருக்கா ஜட்ஜ் ஐயா?” என்று புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளத.

அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் குழு 2019 மே 16ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி ஆயிரக் கணக்கானோர் இதை பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் முதன் முறையாக 1985ம் ஆண்டு இருசக்கர மோட்டார் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதன் பிறகு, 1988ம் ஆண்டு புதிய மோட்டார் வாகன சட்டம் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. இதன்பிறகு, 1989ம் ஆண்டு ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்தது.

2007ம் ஆண்டு போக்குவரத்துத் துறை கமிஷனர் எழுதிய கடிதத்தில் வாகன நெருக்கடியைக் குறிப்பிட்டு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றார். இதை பரிசீலித்த தமிழக அரசு மாநகராட்சிப் பகுதிகளில் ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிட்டதுடன் பழைய அரசாணையை ரத்து செய்தது. (ஆதாரம்: ஜூலை 2015, தமிழ்நாடு நுகர்வோர் கவசம் இதழ். பக்கம் 4) இருப்பினும் பெரிய அளவில் இது நடைமுறைக்கு வரவில்லை.

Archived link

“தன் கணவர் வாகன விபத்தில் இறந்த வழக்கில் கூடுதல் இழப்பீடு கேட்டு” மல்லிகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மல்லிகாவுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவும், 2015 ஜூலை 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இருசக்கர ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கியும் உத்தரவிட்டார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் பங்குக்குள் நுழைய முடியாது. வருகிற 1ம் தேதி முதல் புதிய அதிரடி என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதுபோன்று ஏதும் அறிவிப்பு வெளியாகவில்லை. அப்படி இருக்கையில் இந்த பதிவு எப்படி வெளியானது என்று குழப்பம் ஏற்பட்டது.

இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அதில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதாக செய்தி கிடைத்தது.

HELMET 2.png

அந்த செய்தியில், “ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். மோட்டார் வாகன சட்டம் 1988 ன் பிரிவு 129 படி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், “ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்க் வந்து பெட்ரோல் போடும்படி சண்டையிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறப்பட்டு இருந்தது. அந்த செய்தியை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மையில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்ற உத்தரவு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆனால், நொய்டாவில் என்பதைக் குறிப்பிடாமல் ஒட்டுமொத்தமாக எல்லா இடங்களுக்கும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது போல் பதிவு உள்ளது.

மேலும், நம்முடைய தேடலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்குவது இல்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூடி முடிவெடுத்து நடைமுறைப்படுத்திய செய்தி கிடைத்தது. கடந்த 7ம் தேதி அந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அது அரசு அல்லது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இல்லை. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எடுத்த முடிவாகும். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஹெல்மெட் அணியச் சொல்வதை மிகப்பெரிய தவறு போல இந்த பதிவு சித்தரிக்கிறது. ஹெல்மெட் அணிவது உண்மையில் நல்லது. சிலர் முடிகொட்டும், நீர் கோத்துக்கொள்ளும் என்று சில காரணங்களால் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கின்றனர். தினமும் ஹெல்மெட்டை சுத்தம் செய்தால் இதுபோன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஹெல்மெட் அணிவதன் நன்மைகள், எப்படி வாங்குவது, பராமரிப்பது எப்படி என்பது தொடர்பான தகவலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் நடைமுறைப்படுத்த உள்ள திட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளதுபோல் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்படுகிறது.  

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் நுழைய தடை! – ஃபேஸ்புக் பதிவு உண்மை என்ன?

Fact Check By: Praveen Kumar 

Result: False