
‘’ஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன்,’’ என்று கூறி ஒரு வைரல் புகைப்படம் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
‘’ஜெயலலிதாவுடன் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்,’’ என்று கூறி பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜெயலலிதா பிறந்தது கர்நாடகாவில், நிர்மலா சீதாராமன் பிறந்தது மதுரையில். இதுதவிர, இருவருக்கும் இடையே 11 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது.
ஜெயலலிதா பிறந்தது 1948, பிப்ரவரி 24. அதேபோல, நிர்மலா சீதாராமன் பிறந்தது 1959, ஆகஸ்ட் 18.
நிர்மலா சீதாராமனின் இளவயது புகைப்படத்தையும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் உள்ள பெண்ணையும் ஒப்பிட்டு பார்த்தோம். ஆனால், அவர்களின் முக சாயல் ஒத்துப் போகவில்லை.

இதுதவிர, இந்த புகைப்படத்தில் ஜெயலலிதாவுடன் இருப்பது யார் என அறிய இதனை ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடிப் பார்த்தோம். அப்போது, இதில் இருப்பவர் எழுத்தாளர் சிவசங்கரி என்பதும், இந்த புகைப்படம் கடந்த சில நாட்களாகவே, ஆங்கிலம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வைரலாக பகிரப்படுவதாகவும் தெரியவந்தது.
சிவசங்கரியுடன் ஜெயலலிதா நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இதுவும். இதுபோல நிறைய புகைப்படங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட புகைப்படத்தை Stills Ravi என்பவர் எடுத்துள்ளார். 2014ம் ஆண்டில் VintageIndianClothing என்ற இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
இதேபோல, இருவரும் நெருங்கிய தோழிகளாக நட்பு பாராட்டும் மேலும் சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளோம். இதுபற்றி ஊடகங்களிலும் கவர் ஸ்டோரி வெளியாகியிருக்கிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
எழுத்தாளர் சிவசங்கரி, ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து, இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் இருப்பவர் நிர்மலா சீதாராமன் கிடையாது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:ஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன் இல்லை; முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
